Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் செல்லும் பக்கம், தோல்வி ஏற்படுவது வழமையாகும் - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

(எம்.ஏ.றமீஸ்) 

எமது நாட்டை பயங்கரவாதிகளின் யுத்தத்திலிருந்து மீட்டெடுத்து மக்களை நிம்மதியாக வாழச் செய்வதை விரும்பாத வெளிநாட்டு சக்கதிகள் இம்முறை தேர்தல் ஒன்றுக்காக எதிரணியொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது. எதிரணியில் உள்ளவர்கள் எந்த ஒரு விடயத்தினையும் ஒற்றுமைப்பட்டு செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் நேற்று(31) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊள்ளுராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், 

எதிரணி வேட்பாளர் பக்கம் யார் சென்றாலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருபது இலட்சம் அதிகப்படியான வாக்குகள் பெற்று மூன்றாவது தடவையாகவும் அவர்தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளார். அதுமட்டுமல்லாமல் இம்முறை கொழும்பு உள்ளிட்ட முக்கிய மாவட்டங்கள் பலவற்றை நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.

எமது அரசாங்கத்தோடு இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் றிஷாத் பதியுதீன் போன்றோர் எதிரணியின் பக்கம் சென்றாலும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிப்பார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. ஆனால் ரணில் விக்ரமசிங்க படுதோல்வியினைச் சந்தித்தார். அதேபோல 2010 ஆம் ஆண்டு பொன்சேகாவிற்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. அந்தத் தேர்தலிலும் பொன்சேகா தோல்வியைத் தழுவினார். அந்த வரிசையில் இம்முறை மைத்திரிபால சிறிசேனவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வேலைகளைச் செய்கின்றது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவிற்கு எதிராக களமிறங்கிய இருவருக்கும் நடந்த கதியே மைத்திரிபால சிறிசேனவிற்கும் நடக்கவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் செல்லும் பக்கம் தோல்வி ஏற்படுவது வழமையாகும்.

முஸ்லிம் மக்களுக்கான உணவு விடயத்தில் ஹலால் பிரச்சினை ஏற்பட்டபோது அதற்கு ஆதரவாக கிழர்ந்தெழுந்தவர் சம்பிக ரணவக்க இப்போது அவர் சேர்ந்திருக்கும் எதிரணிக்குத்தான் சில முஸ்லிம் தலைவர்கள் சென்றிருக்கின்றார்கள். இம்முறை அரசின் பக்கம் இருந்து எதிரணியின் பக்கம் சென்றவர்களை ஒருபோதும் இணைத்துக் கொள்வதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார். அதனால் இனிமேல் அவர்களால் மக்களுக்காக ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

நாட்டை யுத்தத்திலிந்து மீட்டெடுத்து பாரிய அபிவிருத்திகளைச் செய்து வரும் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதா அல்லது எமது சமாதானத்தையும் சகவாழ்வினையும் சீர் குலைப்பதற்கு முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு வாக்களிப்பதா என்பதுதான் எமது கேள்வி. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல்வேறான அபிருத்திகளை நாம் செய்திருக்கின்றோம். உல்லாசப் பயணிகளின் வருகை அறுகம்பை பாசிக்குடா போன்ற பகுதிகளில் அதிகரித்திருக்கின்றது. சுனாமி அனர்த்தத்தினால் சிதைந்த பாலங்களை பாரியளவில் நாம் நிர்மாணித்திருக்கின்றோம். இவ்வாறான வேலைகளை ஜனாதிபதி மஹிந்தவே உங்களுக்குச் செய்தார். மாறாக எதிரணியினர் இல்லை என்பரை இங்குள்ள மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.




2 comments:

  1. this time when you are with MR who is going to lose

    ReplyDelete
  2. நீங்கள் வெல்லுவது உறுதி என்றால் வீணாக அறிக்கை விட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.