Header Ads



வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் யார் என்பதை முஸ்லிம்கள் தேடிப் பார்க்க வேண்டும் - அஸாத் சாலி

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (26.02.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

இம்முறை நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்குகளை மிகவும் நுணுக்கமாகவும், விவேகமாகவும்,வழமைக்கு மாறுபட்ட விதத்திலும் பயன்படுத்த வேண்டும். வழமையாக குடும்பத்தோடு சென்று ஒரே கட்சியைச் சேர்ந்த யாராவது வேற்பாளர்களுக்கு வாக்களிப்பதுதான் முஸ்லிம்களின் பழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால் இம்முறை அதை அவர்கள் மாற்ற வேண்டும். ஒரே கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பதால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் இதுவரை முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?; சிறுபான்மை சமூகத்துக்காகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்காகவும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் தேடிப் பார்க்க வேண்டும். அவ்வாறு தேடிப்பார்த்து அந்த குரல்கள் மீண்டும் மாகாண சபையில் எங்களுக்காக ஒலிக்கும் வண்ணம் முஸ்லிம்கள் தமது வாக்குகளை பிரயோசனம் மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். அதைப்பற்றி எமக்கு அக்கறை தேவையில்லை. அவர்கள் கட்சி பார்த்து கொண்டு எமக்காக பேசவில்லை. நாம் பாதிக்கப்பட்ட போது அவர்களின் குரல்கள் எமக்காக ஒலித்துள்ளன. அதற்கான நன்றிக் கடனைச் செலுத்த நாம் இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நாம் நன்றி கெட்டவர்களாகி விடுவோம்.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் அவ்வாறான மூன்று நபர்களை நாம் அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. ஒருவர் நண்பர் விக்கிரமபாகு கருணாரத்ன. தமிழ் முஸ்லிம் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஓங்கி ஒலிக்கும் ஒரு குரல் அவருடையதாக இருந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். அவர் நவ சமசமாஜக் கட்சியில் மேசை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

மற்றவர் நண்பர் மணோ கணசன். அவர் தனது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவரை பற்றிய அறிமுகம் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு தேவையில்லை. அந்தளவு பிரபலமானவர். துணிச்சலான ஒரு கட்சித் தலைவர். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க அவர் என்றுமே பின் வாங்கியதில்லை.

மற்றவர் முஸ்லிம்களுக்கு மிகவும் அறிமுகமான சகோதரர் முஜிபுர் ரஹ்மான். இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாவட்டத்தை ஏற்கனவே பிரதி நிதித்துவம் செய்துள்ளவர். முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தலைநகரில் இருந்து ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாக அவரின் குரல் அமைந்துள்ளதை நாம் நன்கு அவதானித்துள்ளோம்.

எமது தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக எவரும் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவில்லை. ஆனால் எமது கட்சியைப் பொறுத்த மட்டில் மேற் சொன்ன மூவரும் இல்லாத மேல் மாகாண சபையால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே நாம் கருதுகின்றோம். பேசா மடந்தைகளையும் அரசுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு தனது வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருப்பவர்களையும், முஸ்லிம் இனத்தை இந்த நாட்டில் இருந்து முற்றாக துரத்த வேண்டும் என்று கங்கனம் கட்டி செயற்படும் உதய கம்மன்பிலவுக்கு பின்னால் கைகோர்த்து நிற்பவர்களையும் மாகாண சபைக்கு அனுப்புவதால் மக்களுக்கு என்ன பலன்.
நாம் மேற் சொன்ன மூவரும் மூன்று வௌ;வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்வதால் தான் இம்முறை சற்று வித்தியாசமாக வாக்களிக்குமாறு முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தமக்குள் பேசி இந்த கட்சிகளைத் தெரிவு செய்து அதன் அடிப்படையில் தமது குடும்ப வாக்குகள் இந்த மூவரையும் சென்றடையும் வகையில் பிரிந்து தமது வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.எதிர்வரும் காலம் ஆபத்தானது. எனவே பேசா மடந்தைகளால் எமக்கு பலனில்லை. எமக்காக குரல் கொடுக்கக் கூடிய துணிச்சல் மிக்க இந்த மூவரையும் மாகாண சபைக்கு அனுப்ப முஸ்லிம்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. போதைப் பொருள் விடயத்தை சரியான முறையில் அரசு கையாள தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் தான் இந்த தீhமானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கும் விற்பனைக்கும் அதன் பாவனைக்கும் எதிராக அரசுக்குள் இருந்து கொண்டு அதிகம் குரல் கொடுத்த ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இப்போது என்ன செய்யப் போகின்றார்கள்? இந்தத் தீர்மானம் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்களால் பகிரங்கமாகக் கூற முடியுமா?

கடந்த ஓரிரு வாரங்களில் கூட சில கொள்கலன்கள் எந்தவிதமான சோதனைகளும் இன்றி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர்கள் இருவரின் புதல்வர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும்,இதில் நிச்சயம் சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் இருக்கக் கூடும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் பாரதூரமான விடயம். இதை நாம் சொல்லவில்லை. அரசின் பங்காளிகள் தான் இப்படி கூறுகின்றனர். எனவே தான் இந்த விடயம் தொடர்பாக ஐ.தே.க சமர்ப்பித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி அவர்களின் நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். நடக்கப் போகும் தேர்தலின் நிமித்தம் கையடக்க தொலைபேசி கொள்கலன்களும் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வடமேல் மகாண சபை தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்ட விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன. அமைச்சர் ஒருவரின் பெயரில் இது சம்பந்தமாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வாக்காளர்கள் வந்து தம்மை பதிவு செய்து தமக்கான கையடக்க தொலைபேசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த அமைச்சர் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அப்படியானால் அமைச்சர் ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்து இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்களை ஏன் கண்டு பிடிக்க முடியாது? இவை அப்பட்டமன தேர்தல் சட்ட மீறல் நடவடிக்கைகள் அல்லவா? இவற்றைப் பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதும், சுற்று நிருபங்கள் வெளியிடுவதும்; மட்டும் இவற்றுக்கு தீர்வாகி விட முடியாது. 

அரசாங்க ஊழியர்கள் அமைச்சு செயலாளர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடக் கூடாது என்று தெளிவான சட்டம் உள்ள போதிலும் அது மிகவும் அப்பட்டமாக மீறப்படுகின்றது.ஆனால் தேர்தல் ஆணையாளர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சுற்று நிருபம் அனுப்பிக் கொண்டு ஜனாதிபதியின் செயலாளரிடம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறார். இது தவறானது.அவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் ஆணையாளர் இது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இன்று அரச அலுவலகங்களுக்குச் சென்றால் மக்களுக்கு எந்த சேவையையும் பெற முடியாத நிலை. அங்கு யாருமே இல்லை. எல்லோருமே தேர்தல் பிரசார பணிகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 13 அரச வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்விரோதமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை காரணமாகவே இந்த வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை விட இன்னும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதே காரியத்தில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர் ஒருவர் தனது மகனின் தேர்தல் பிரசாரத்துக்காக தனது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் சென்றால் அது கூட சட்டப்படி குற்றம் தான்.

பொலிஸார் தெரிவித்துள்ள தகவல்களின் பிரகாரம் இதுவரை கடும் குற்றச் செயல்களோடு தொடர்புடைய 37 பேர் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனராம். அதேபோல் குற்றச் செயல்களோடு தொடர்புடைய 15 குழுக்களைச் சேர்ந்த மேலும் 181 கேடிகளும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்க முடியுமானால் ஏன் இவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முடியாது? இவர்கள் யாரின் தயவில் வெளியில் நடமாடுகின்றனர் என்பதை பொலிஸார் மக்களுக்கு கூற வேண்டும்? இவர்கள் எல்லாம் தேர்தல் பிரசாரங்களில் ஈடபட்டால் எப்படி சுதந்திரமான அமைதியான நீதியான தேர்தலை மக்கள் எதிர்ப்பார்க்க முடியும்?

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட்டியிருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் சென்றுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் பேசும் போது அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்த அரசுக்கு விரோதமாகப் பேசினால் எங்களையும் கொன்று விடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சர் இப்படி கூறுகின்றார் என்றால் அவர்களின் நிலையைப் பாருங்கள். அவர்களுக்கும் பேசும் சுதந்திரம் இல்லை என்பது புரிகிறதல்லவா? அப்படியாயின் சாதாரண மக்களின் நிலை என்ன? எனபதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலர் தான் ஆரம்பத்தில் இருந்தே புலிகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தனர். அனால் அரசு அதற்கு செவி சாய்க்காமல் யுத்தத்தை தெரிவு செய்தது. யுத்தத்தால் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால் பிரச்சினை தீர்ந்ததா? அதை விட மோசமான புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இப்போதுள்ள பிரச்சின மார்ச் 29ல் இந்த அரசுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும்.அதை தடுக்க இந்த அரசுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்த அரசின் கையாலாகா தனத்தால் இந்த நாட்டு மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தான் அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் கூற்றை அரசு இன்னும் செவி மடுக்காமல் செயற்படுகின்றது.

அமரபுர பௌத்த பீடம் இன்று மிகச் சிறந்த ஒரு முடிவை எடுத்துள்ளது. பௌத்த தேரர்கள் எந்த விதமான அரசியல் மற்றும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது.அவர்கள் தமக்குரிய கௌரவத்தைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை நாம் மிகவும் வரவேற்கிறோம். இது மிகச் சிறந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு முடிவு ஆகும். இந்த தீர்மானத்துக்குப் பின்னர் பொது பல சேனா செயலாளர் கூறுகின்றார் சிலர் காவி உடை அணிந்து கொண்டு காவாலித்தனம் புரிவதால் தான் இவ்வாறு முடிவு எடுக்க வேண்டியதாயிற்று என்று. அவர் ஒரு விரலை நீட்டி மற்றவர்கள் மீது குறை கூறும்போது மற்ற நான்கு விரல்களும் அவரையே சுட்டி நிற்கின்றன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் எல்லோரும் ஐக்கியமாக வாழும் நிலை தோன்ற வேண்டும் அதுவே நம் எல்லோருக்கும் நல்லது.

2 comments:

  1. உங்களின் சீட்டையே கிழிக்கப்போகிறார்கள்.... ஜாக்கிரதை......!!

    ReplyDelete
  2. இவ்வழு பேசும் இந்த மனிசன், ஏன் அவரின் சொந்த கட்சி என்று சொல்லும் ணூஆ வில் களத்தில் குதிக்க வில்லை? அவ்வாறு குதித்து தனது கொழும்பு பலத்தை காட்டலாமே...

    அதை விட்டு விட்டு மற்றவன் கட்சியில் தொற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு அதில் வேறு அவனுக்கு இவனுக்கு ஆதரவு என்று சொல்ல மற்றவன் கேட்க என்ன கேணயனா இந்த கொழும்பு முஸ்லிம்கள்?

    நீங்கள் அழிக்கும் வாக்குகளைக்கொண்டு 3 முஸ்லிம் உறப்பினர்களை தெரிவு செய்யுங்கள் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கலாம். அதில்லாமல் எல்லோருக்கும் நடிகனாகப்பார்கின்றார் இந்த அசாத் மதையா.... ஒரு சோனியும் வரக்கூடாது இந்த கொழும்பில் என்பது இவரின் உறுதி போல். முஜீபை மூன்றாம் நபராக தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று கூறும் இவர், இவர் எவ்வளவு சுதந்திரமாக பேசுகின்றார் என்று பார்த்தீர்களா மக்காள்?

    மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்தார்கள் என்பதற்குப்பதிலாக, வாக்கு வங்கியை நிரப்புவதற்காக கொடுக்கப்படுகின்ற கூக்குரல்கள்தாள் இந்த குரல்கள் என்றால் மிகையாகாது.

    ஜப்னா முஸ்லிம் கண்டிப்பாக எமது கருத்தை பதிவேற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.