Header Ads



முக்கிய விவகாரங்கள் குறித்து, 6 அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அறிக்கை

(Tm) 

இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமித்தல் தொடர்பான சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையில் விசேட சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளுக்கு அமைய இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமாயின் அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொருளாதார விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமிக்குமாறு அவ்வமைச்சர்கள் கோரியுள்ளனர்.  

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

இலங்கையில் நீண்ட காலங்களுக்கு முன்னர் சேவையாற்றிய ராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இவ்வமைச்சர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அளவுக்கு தற்போது பாரியளவில் பிரச்சினைகள் எழவில்லை. இருப்பினும், தற்போது உள்ள நிலைமை அதிகரித்து எதிர்காலத்தில் தடை விதிக்கப்படும் ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையிலேயே இந்த குழு நியமிக்கப்பட வேண்டும். அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்று மேற்படி அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதேவேளை, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமித்தல் தொடர்பான சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையில் விசேட சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வமைச்சர்கள் கோரியுள்ளனர். 

அத்துடன், வட மாகாண சபையுடன் சுமூகமானதொரு தொடர்ப்பைப் பேணுமாறும் இந்தியாவுடன் சுமூகமான ராஜதந்திர தொடர்பைப் பேணுமாறும் அவ்வமைச்சர்கள் தங்களது கோரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.