Header Ads



மதத்தின் பெயரால் பறிபோகும் பொத்துவில் நகரம் - காவியுடைகளின் அட்டகாசம்



(கழுகுப்பார்வை)

அண்மைக்காலமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் மதத்தின் பெயரால் பல்வேறு அச்சுறுத்தல்களும், அடாவடித்தனங்களும், ஒரு இனத்தை இன்னோர்; இனம் குழிதோண்டி வெட்டிப் புதைக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி சிரிப்பதா? அழுவதா? என்கிற நிலையில் இன்றைய இலங்கை மாதாவின் தவப்புதல்வர்கள் தங்களது உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணங்களை வடித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இலங்கை நாடு பல்லின மக்கள் வாழும் நாடு. அனைவருக்கும் சகல உரிமைகளும் உண்டு என்பதை அரசியல் யாப்பிலும்சரி, உலக உரிமையாக்கத்திலும் சரி பறைசாற்றினாலும் நடைமுறையில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. அன்று நாட்டை ஆண்ட சுதேசிகளிலிருந்து மிக அண்மைக்காலம் வரையில் அனைவரும் ஒரே நாட்டு மக்கள், அனைவருக்கும் இந்நாடு சொந்தம் என்றெல்லாம் வழிவழியாக பின்பற்றி வந்த எமநாடு. இனரீதியான பாகுபாடுகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், நாடாளும் தந்திரங்களும், ஓரினத்தை ஒழிக்க நினைக்கும் அரசியல் தலைவர்களும்தோன்றி மொழிரீதியானதும், இனரீதியானவாறும் போராட்டங்களை உசுப்பேத்தி, சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் மத்தியில் அரசியல் தீயைப் பரவவிட்டு அதில் குளிர்காய்ந்தனர்.

இந்நிலைமை தொடர்ந்து வந்தவர்களால் அரசியலுக்குள் இனச்சாயம் பூசியதன் அடிப்படையில் இளைஞர்களை வாழவிடாது யுத்தம் என்கிறபேரில் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சீரழித்தும், அதுபற்றிய வேக்காட்டிலிருந்து ஓரளவு நிம்மதிப் மூச்சை விடத்தொடங்கியபோது மீண்டும் மதத்தின் பெயரால் ஒரு கௌரவமான யுத்தத்தை ஆரம்பித்து அதனுள் பல்வேறு சிக்கல்கள் உட்புகுத்தப்பட்டு வருவதன் காரணமாக நாட்டில் மீண்டும் மதரீதியான பதட்டத்தை நோக்கிய களத்தை அடைவதில் பேரினவாதிகள் முனைப்புடன் இருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். அதேநேரம் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் பேசும்போது 'எப்போதுமே நான் உங்கள் தோழன், நாட்டில் ஜாதிபேதமில்லை, நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள்' என்றெல்லாம் அரசியல்மேடைகளில் பேசியது அனைத்தும் வெறும்வாய்ப்பேச்சில் மாத்திரம்தானா? என்கிற கேள்விகளும், மதரீதியான பிளவுகளை தற்போது நாட்டில் ஏற்படுத்தி ஆங்காங்கு ஆர்பாட்ட முஸ்தீபுகளை ஏற்படுத்திவரும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் மிகத் துணிச்சலுடன் முஸ்லீம்கள் மீதான எதி;ர்ப்பலைகளை மிகவேகமாக மேற்கொண்டு வருவதும் நாட்டின் சிறுபான்மை இனமக்களிடையே பலத்த சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகின்றது.

அந்தவகையில் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதும், முஸ்லீம்களின் புனிதத்துவத்தை துவம்சம் செய்யும் ஹலால் எனும் ஆயுத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை, நாட்டில் வாழும் முஸ்லீம்களின் நிலையும் திரிசங்கு நிலையைத் எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எந்தவொரு எறும்புக்கும் தீங்கு நினைக்கவே முடியாத புத்ததர்மத்தையே போதிக்கும் காவியுடைக்குள் இவ்வளவு பயங்கரம் இருக்கின்றதா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. தர்மத்தையும், மனிதாபிமானத்தையும், சகவாழ்வையும், மனிதப்பிறவியினை நிலைபேறுடையதாக மாற்றி ஒற்றுமைபற்றியும், உலகவாழ்வின் ஆசாபாசங்களைத் துறந்து பரிபூரணமான பரிநிர்வானமடைதலையும் போதிக்கும் பௌத்தவாதிகளில் சிலர் தொடர்ச்சியான முஸ்லீம்கள் மத்தியில் பல்வேறு அட்டூழியங்களை மேற்கொள்வதன் மூலம்; இந்நாட்டில் ஒரேயொரு இனம் மாத்திரம்தான் வாழமுடியும் என்கிற நிலையை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர் என்றே கூறத்தோன்றுகின்றது.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக தமிழர்களும், முஸ்லீம்களும் நீண்டகாலமாக ஒற்றுமை ஓங்க வாழ்ந்து வருகின்றனர். அப்பிரதேசங்களில் சிறுபான்மையினராக சிங்களவரும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களாக சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் சிங்;களவர்கள் தங்களது இருப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக பல இடங்களில் அத்துமீறி தங்களது வெற்றிக் கொடிகளை நிலை நாட்டி அங்கெல்லாம் இனரீதியான பிளவினை ஏற்படுத்தக்கூடியவாறு பலதரப்பட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் தீகவாபி எனும் புனிதப் பிரதேசத்தின் எல்லைகளை விரிபுபடுத்தி ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை, இறக்காமம், சம்மாந்துறை போன்ற எல்லைப்பிரதேசங்களிலுள்ள அரசகாணிகளையும், அப்பகுதிகளில் வாழுகின்ற முஸ்லீம்களின் குடியிருப்புக் காணிகளையும், அம்மக்களது நெற்காணிகாணிகளையும் கபளீகரம் செய்து வந்தமை சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு தற்போது சற்றுத் தணிந்து போயுள்ள நிலையில் மீண்டும் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்தில் முழுமையாக முஸ்லீம்கள் வாழும் ஒரு பிரதேசத்தை கைப்பற்றி பௌத்த தேவாலயம் மற்றும் பௌத்த கோபுரங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இம்முயற்சியானது பொத்துவில் பிராந்தியத்தையும், அங்குவாழ் மக்களையும் குறிப்பாக முஸ்லீம்களை அச்சத்திற்குள்ளாக்கி வருவதாக பொத்துவில் பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கழுகுப் பார்வைக்குத் தெரிவித்;திருந்தார்.

சரி இந்த பொத்துவில் பிரதேசத்தினை பார்க்கின்றபோது பொத்துவில் நகரம் ஒரு உல்லாசபுரியாகும். வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளும், உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள உல்லை எனப்படும் அறுகம்குடா கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் செல்வர். இயற்கையுடன்கூடிய அழகிய கடற்கரையாகவும், மிகவும் இரம்மியமான இயற்கையான குடாக்கடலாகவும் காணப்படும் இடமே இந்த அறுகம்குடாவாகும். இங்கு பல பெரியளவிலான உல்லாச விடுதிகளும், சிறியளவிலான உல்லாசக் கொட்டகைகளும் காணப்படுகின்றன. வெளிநாட்டவரும், உள்நாட்டவரும் இங்கே விடுதிகளை உருவாக்கி வியாபாரம் செய்துவருகின்றனர். பொத்துவில் பிரதேசத்திற்கு வருகின்ற உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளின் கண்களுக்கு கவரும் இன்னுமொரு இடமும் உண்டு. அந்த இடத்தைப்  பார்க்கின்றவர்களின் மனதில் அழகுணர்ச்சியை ஏற்படுத்துவிடும். அதுதான் மணல்மலை எனப்படும் மணல் பிரதேசமாகும். அறுகம்குடாவை அண்டியதான ஒரு பெரும் மலை ஒன்று பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றது. அதுதான் மணல்மலை. பொத்துவிலுக்கு வந்து செல்கின்ற எவரும் இந்த மணல் மேலேறி அறுகம்குடாவையும், அதனோடு இணைந்த இயற்கையையும் இரசித்துவிட்டுத்தான் செல்வர்.

இந்த மணல்மலை எவ்வாறு உருவானது என்பதற்கு சரித்திரம் ஒன்றும் உள்ளது. முன்னொருகாலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் சுனாமி ஏற்பட்டு கடல் பெருக்கெடுத்து அறுகம்குடா கடலிலிருந்த மணல் முழுவதும் இடமாற்றப்பட்டு தற்போதைய மணல்மலை இருக்கும் இடத்திற்கு இயற்கையாக வந்தாகவும், இங்கிருந்த சிற்றரசன் ஒருவரின் மாளிகை மணில் புதையுண்டு போனதாகக் கூறப்படுகின்ற கதையும் இப்பிரதேச மக்களால் கூறப்படுகின்றது. அவ்வாறு புதையுண்டு போன அந்த மாளிகை அமைந்துள்ளது இந்த மணல்மலையின் கீழே என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் இப்பிரபிரதேசத்திற்குள் புதையுண்டுபோனதாகக் கூறப்படும் பழங்கால மடாலயமொன்றை கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட புதை பொருள்கள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைந்திருந்தனர். இது விகாரைக்கு முகுது விகாரை என்று பெயர்வைத்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட விகாரை, மற்றும் ஏனைய பொருள்களையும், இடிபாடுகளுடன் காணப்படும் கட்டிடத்தையும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் அங்கேயே பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பழங்காலப் பொருள்களையும், இடிபாட்டுடன் காணப்படும் இடத்தையும் மணல்மலையைப் பார்க்க வருகின்ற உல்லாசப் பயணிகளினதும் பார்வைக்குள்பட்டன. பார்த்தார்கள், இரசித்தார்கள். பாடசலை மாணவர்களும் பழங்கால பொருட்களை பார்வையிடத் தொடங்கினர். அத்துடன்; இப்பிரதேசம் கடற்கரையை அண்டிய பிரதேசமாக இருப்பதாலும், பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாலும் இந்த பிரதேசத்தின் முக்கியத்துவம் பேரினவாதிகளின் கண்களில் பட்டபோதுதான் இந்த இடத்தை முழுமையாக காவுகொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பௌத்த மதப் பெரியார்கள் இங்கு வருவதும், போவதுமாக இருந்தபோது பௌத்த துறவி ஒருவர் இதற்குப் பொறுப்பாக்கப்பட்டிருந்தார். அந்த பௌத்த துறவியின் இருப்பிடத்திற்காக அப்பகுதிவாழ் முஸ்லீம் மக்கள் வீடு கட்டிக் கொடுத்தும் உதவி செய்திருந்தனர். 

ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஏனெனில் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் ஒரு முஸ்லீம். பொருள்களைப் பாதுகாத்ததும் முஸ்லீம்கள். நன்றியை தக்கவைத்துக் கொள்ளாது அவர்களுக்கே துரோகமிழைக்க முயற்சிக்கின்றனர். இது என்ன நியாயமிது. ஏனெனில் இப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் தீட்டப்பட்டபோதுதான் மக்களும் கொதித்தெழுந்தனர். அவர்களுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். பௌத்த கோபுரம் மண்மலையில் அமைப்பதுடன், அப்பகுதியில் வாழும் மக்களினது குடியிருப்புக் காணிகளும் பறிமுதல் செய்வதற்கான முயற்சிகளும், முகுது மகாவிகாரைக்கு வந்து செல்வதற்கான புதியபாதைகள் அமைக்கும் ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. 

அங்குவசிக்கின்ற பௌத்த துறவியின் உத்தரவுகளுக்கு அமைவாக மேலிடத்திலுள்ள அதிகாரிகள் இயங்குகின்றனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முயல்வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டு முகுது மகாவிகாரை என்கிற பெயரை தக்கவைக்க, சிங்களப் பிரதேசங்களில் இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் எதிரொலியாக இப்பகுதிக்கு நாள் தவறாமல் பெரும்பான்மையின மக்கள் வருகைதர ஆரம்பித்தனர். பொத்துவில் பிரதேச சபையினரின் கடுமையான முயற்சிகள் காரணமாக தற்போது இந்த இடத்தில் கட்டப்படவிருந்த சுமார் 200 அடி உயரமுடைய தாதுகோபுரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியை முஸ்லீம்களோ, பாடசாலை மாணவர்களோ சென்று பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் அங்குவாழும் பௌத்த துறவியால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்;பிடத் தக்கதாகும்.

இது பொத்துவில் பிரதேசமாக இருந்தாலும் மணல்மலை அமைந்துள்ள இப்பகுதியை மதுரஞ்சேனை என்றே அழைக்கின்றனர். இங்கு வாழ்கின்ற ஏழை முஸ்லீம்கள் தங்களது ஜீவனோபாயத்தை நிறைவு செய்வதற்காக கடலை நம்பி வாழ்கின்றனர். அடிக்கடி  பெரும்பான்மையினர் வருவதனைத் தொடர்ந்து அங்கு நிரந்தரமாக வாழும் முஸ்லீம்கள் மத்;தியில் பயஉணர்வும் ஏற்பட்டுள்ளது. புதைபொருள் காணப்படும் பிரதேசத்தை எல்லைப்படுத்தி, வரையறுத்து எல்லைக் கட்டைகளும் நடப்பட்டன. ஆனால் அந்த எல்லைகளைத் தாண்டி முகுது மகா விகாரையை மீண்டும் கட்டுவதற்குரிய காணியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு நடப்பட்டுள்ள எல்லைக் கட்டைகளும் இரவோடு இரவாக முஸ்லீம்கள் வாழும் எல்லைகளையும் தாண்டி நடப்பட்டு உள்ளே வரவும் செய்கின்றன.

இத்தனைக்கும் மேலாக இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் கல்வித் தாகத்தை மேற்கொள்வதற்குரிய பாடசாலை ஒன்றை அமைக்கும் பணியில் சில இளைஞர்கள் முயற்சித்தபோது அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளும் இங்குவாழ்கின்ற பௌத்த துறவியினால் மேற்கொள்ளப்பட்டன. இங்கு நீண்டகாலமாக இயங்கி வருகின்ற முன்பள்ளிப் பாடசாலை ஒன்றும் உள்ளது. முறையான பாடசாலையை அமைக்கும் திட்டத்திற்கு தடை ஏற்பட்டாலும் தூரத்திலுள்ள தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் ஒருபகுதியை, இங்குள்ள தற்காலிக கட்டிடம் ஒன்றில்; பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டும் வருகின்றன. 

அண்மையில் இங்கு சிங்கள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கத் தக்கவாறு கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடம் தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்ற ஒருபிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள பௌத்த மடாலயத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் எப்போதுமே இப்பிரதேசம் பெரும்பான்மையின மக்களின் வருகையும், அவர்களது போக்குகளும், அங்கு நிரந்தரமாக வாழுகின்ற முஸ்லீம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பௌத்தவிகாரை என்பார்கள், பின்னர் புனித பூமி என்பார்கள், பின்னர் மக்களை எழுப்பியே விட்டுவிடுவார்கள் என்கிற பய உணர்வும் இங்குவாழ் முஸ்லீம்களிடத்தில் ஏற்பட்டுள்ளன. இதனை தீவிரமாக ஆராய்ந்து மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையினர், புத்;திஜீவிகள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே, உல்லை பிரதேசத்தில் புத்தர் சிலை விவகாரம் சில காலங்களுக்கு முன்னர் விஸ்பரூபமாக இருந்தது. தற்போது பொத்துவில் பிரதேசத்தில் கலாச்சார சீரழிவுகள் மேலோங்கிவருகின்றன. முழுமையாக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்ற அறுகம்பே பிரதேசம் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு அங்குள்ள பல இடங்கள் பெரும்பான்மையினருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. 

அண்மைக்காலமாக மத்தின்பெயரால் இந்நாட்டில் பல்லின மக்கள் வாழும் உரிமையை அறுத்தெறிய முற்பட்டுள்ள பேரினவாதிகள் தற்போது வாழும் இடத்தின் உரிமையைக்கூட பலாத்காரமாக பெற்றுக் கொள்ளும் மனிதாபிமானமற்ற ஒரு நடத்தைக் கோலத்தை பொத்துவில் மணல்மலை அமைந்துள்ள மதுரஞ்சேனையில் ஏற்படுத்த முனைந்துள்ளனர். இலங்கை வாழ் முஸ்லீம்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மதக் கடமைகளைப் புரிவதற்கும், ஹலாலான உணவு மற்றும் வாழ்க்கைழய வாழ்வதற்கும் தடையாக பேரினவாதிகளின் சொல்லாடல்கள் வசைபாடல்களாக உயிர்ப்பித்துள்ள நிலையில் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலமையை மாற்றியமைக்கும் உரித்துக்கள் சமுகத்தின் அரசியல் உரிமையை கொண்டாடும் முஸ்லீம் தலைவர்களிடமும், முஸ்லீம் கட்சிகளிடமும் காணப்படுகின்றன. ஆனால் இவர்கள் இன்று கையறதத் தகாதவர்களாக காணப்படுகின்றமை இந்நாட்டு முஸ்லீம்களுக்கு கிடைத்திருக்கின்ற சாபக்கேடாகவே பார்க்கின்றேன் என்று முஸ்லீம் மதப்பெரியார் ஒருவர் தெரிவித்தார். 

எனவேதான், இந்நாட்டில் ஜனநாயகப் பண்புகள் மேலோங்குவதற்கும், மனித உரிமைகளும், மதரீதியான ரிமை பாதுகாப்புக்களும் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளில் முஸ்லீம் அரசியல் வாதிகள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பொத்துவில் பிரதேசத்தின் எல்லைப் புறங்கள் வேறு பெயர்களால் பறிக்கப்பட்டு வந்துள்ளமை நினைவிற்கொண்டு, மதுரஞ்சேனை மக்கள் வாழுமிடத்தையும் பறித்துவிடாது பாதுகாக்கும் நிலையை தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளன. இதனை அனைவரும் புரிந்து கொண்டு மாற்று நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்துவத்குரியவாறு அரசியல் அதிகாரத்தின் ஊடாக நாட்டின் ஜனாதிபதியிடம் நிலைமையை சரியான முறையில் வித்திடவேண்டும். அத்துடன் முகுது மகா விகாரையை  பெரியளவில் அமைக்கும் நிலையை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையேல் பொத்துவில் பிரதேசமும் பெரும்பான்மைச் சமூகத்திடம் மண்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். 

2 comments:

  1. இருக்கிற பள்ளிகளை உடைப்பார்களாம் இல்லாத ஒரு இடத்தில பன்ஸல கட்டுவார்களாம் என்னங்கடா உங்கட அட்டூளியங்களுக்கு ஒரு எல்லையே இல்லையாடா...

    ReplyDelete
  2. poththuvil makkal perumpaanmai makkalukku kaanikali vitpathaiyum niruththa vendum.

    ReplyDelete

Powered by Blogger.