மத்தியகிழக்கு போர் - தாக்கம் குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) நடைபெற்றது.
எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Post a Comment