Header Adsபடகு விபத்து: ஒரே குடும்பத்தில் 11 பேர் வபாத் - விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டது எப்படி..?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு குடும்பத்தில் தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரைப் பறிகொடுத்தனர். படகுச் சுற்றுலாவில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதே அதிக உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த கேரள அரசு உறுதியளித்துள்ளது.


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்வது வாடிக்கை. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.


விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர்.


ஹோமி பாபாவின் மரணம் - இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்துவதற்கான சதியா அல்லது விபத்தா?


படகில் சுமார் 40 பேர் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது. 22 பேர் உயிரிழந்தனர். 5 பேர் நீந்தி உயிர்தப்பினர். 10 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் ஒருவரின் நிலை மட்டும் என்னவென தெரியவில்லை. இதன் அடிப்படையில் விபத்து நடந்த இடம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.


பரப்பனங்காடி கூனும்மாள் வீட்டில் சைதலவி, அவரது சகோதரர் சிராஜ் ஆகியோரின் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பெயர் ஜல்சியா, ஜரீர், நைரா, ருஷ்தா, சஹாரா, சீனத், ஷாம்னா, ஹஸ்னா மற்றும் சஃப்னா மற்றும் சிராஜின் மனைவி மற்றும் அவரது 10 மாத குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.


குன்னும்மாள் சைத்தலவியின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த வாரம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதற்காக தங்கள் பூர்வீக வீட்டிற்குச் சென்றனர்.


குழந்தைகள் அந்த இடத்தைப் பார்க்க விரும்புவதால் குடும்பம் தூவல்தீரத்திற்குச் சென்றது. சைதலவி அனைவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றாலும், படகு சவாரியை கண்டிப்பாக தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.


இந்த விபத்தில் குன்னும்மாள் ஜாபிரின் மனைவி ஜல்சியா, மகன் ஜரீர், குன்னும்மாள் சிராஜின் மனைவி, குழந்தைகள் ஷாம்னா, ஹஸ்னா, சப்னா ஆகியோர் உயிரிழந்தனர். சிராஜின் 10 மாத குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தது.


ஆபரேட்டர்கள் குடியிருப்பாளர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை சேவை தொடங்கும் போது படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், ஆபத்தான முறையில் நகர்ந்ததாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.


“படகு நகரும் போது ஒரு பக்கமாக வளைந்து காணப்பட்டது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. சேவையை நிறுத்துமாறு படகு ஓட்டுநரை நாங்கள் எச்சரித்தாலும், அவர் எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டார்,” என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


படகு விபத்தில், மலப்புரம் செட்டிப்பாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரிழந்தனர்.


ஆயிஷாபி (38) மற்றும் அவரது குழந்தைகள் அடிலா ஷெரின் (13), அர்ஷன் (3), அட்னான் (10) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆயிஷாபியின் தாய் சீனத்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திரூறங்காடி மருத்துவமனையில் 8 உடல்கள் உள்ளன. இறந்தவர்களில் குழந்தைகள் அதிகம் என்பது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்விபத்தில் நசருதீன் என்ற கண்ட்ரோல் ரூம் போலீஸ்காரரும் இறந்துள்ளார். விபத்துக்குள்ளான படகில் அவர் குடும்பத்துடன் பயணித்ததாக தெரிகிறது.


தூவல் தீரம் கடற்கரையில் படகு விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மீனவர் பிரகாசன், பிபிசி தமிழிடம் கூறுகையில்,


"படகில் தண்ணீர் புகுந்த போதும் ஓட்டுநர் தொடர்ந்து அழமான பகுதியிலேயே போட்டை செலுத்தினார் . படகை உடனடியாக கரைக்கு கொண்டு வந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம்.


விபத்துக்குள்ளான படகு சுற்றுலாவுக்கு ஏற்றதல்ல எனவும் , இது ஒரு மீன்பிடி படகு, சுற்றுலாப் படகு போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, என்றார். சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்படும் படகுகள் பொதுவாக தட்டையான அடிப்பகுதியைக் கொண்டுள்ளன, இதனால் அவை எளிதில் மூழ்கும் வாய்ப்புகள் குறைவு. எனினும், இந்த படகின் அடிப்பகுதி போதுமான அகலமாக இல்லை" என்றார்.


சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.


இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசே ஏற்கும் என்பன போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


“இந்த விபத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். விசாரணைக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். மாநிலத்தில் முந்தைய பேரிடர்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆய்வு நடத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரள படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் ஆறுதல்


மலப்புரம் தானூரில் படகு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்களின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.


இவ்விபத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இரண்டு அடுக்குகொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை. உல்லாசப் படகு கவிழ்ந்த போது அதிலிருந்த ஒருவர் கூட லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. BBC

No comments

Powered by Blogger.