''இம்முறை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி, தமிழ்பேசும் தரப்புக்களின் கைகளில் இல்லை'
ஜனாதிபதி தேர்தல் 2015
சிறீ லங்கா ஒரு ஜன நாயக நாடு. இங்கு குடியுரிமை கொண்ட எவரும் எவருக்கும் வாக்களிக்கும் உரிமையை கொண்டுள்ளனர். நாட்டின் தலைவரை தெரிவு செய்வதென்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு கடமையாகும். தாம் விரும்பியவரை தெரிவு செய்யும் உரிமை இருந்த பொழுதிலும் சிறுபான்மை மக்களை பொருத்தவரை சமூகம் அதன் பாதுகாப்பு அதன் அபிவிருத்தி என்பவற்றை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய ஒரு கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது வெற்றியை நிலைநாட்டிக்கொள்ளும் நோக்கிலேயே நகர்வுகளை மேற்கொள்வது தெளிவாக தெரிகின்றது. அதனால் இவர்களால் தான் சார்ந்த சமூகம் பிழையான வழிகளில் இட்டுச்செல்லப்படுகின்றது. இது விடயத்தில் தமிழ் பேசும் சமூகம் மிக விழிப்புணர்வுடன் தமது இனங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது அத்தியாவசியாகும்.
எமது நாட்டின் அரசியல் யாப்பில் வழஙகப்பட்டுள்ள அதி உயர் அதிகாரங்களுக்கமைய ஆளும் தரப்புக்கே மீண்டும் ஜனாதிபதியை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பல்வேறு தரப்பு மக்களின் பல்வேறு பட்ட கருத்தியல் வேறுபாடுகளையும் ,தேவைபாடுகள், பிரச்சினைகள் என்பவற்றையும் மையமாக கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகள் காணப்படுவதும், அவை தத்தமது கோணத்தில் தேர்தல் களத்தை எதிர்க்கொண்டு மக்களின் அவதானத்தை திருப்ப முயல்வதும் ஜனநாயக பண்பாகவே நோக்கப்படுகின்றதுறது.
இருந்த போதிலும், ஆகமங்களில் அதீத நம்பிக்கை கொண்ட ஆசிய நாட்டவர்கள், தாம் பின்பற்றும் ஆகமங்களின் வழிகாட்டல்களுக்கொப்ப மனித நேயத்துடனும், செய்நன்றி மதிப்பவர்களாகவும் இருந்து வருகின்றார்கள் என்பதை மறுத்து விட முடியாது. இங்கு கூற விளைவதெல்லாம் என்னவென்றால், அன்மித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களில் 80% சதவீதமானோர் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த துணிந்த நிலையில் இருந்தாலும், சிங்கள பௌத்தர்கள் சுமார் 35% வீதத்தினரே அவ்வாறான நிலையில் இருக்கின்றார்கள். எனவே, இன்றைய கள நிலவரத்தின்படியும் ஆளும் தரப்பு மீண்டும் ஜனாதிபதியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கு, தமிழ் பேசும் மக்கள் ஒரு விடயத்தை உற்று நோக்க வேண்டியவர்களாவர். அதாவது, சிறுபான்மை மக்களிடம் காணப்படுமளவுக்கு சிங்கள பௌத்தர்கள் இடத்தில் இனவாதம் காணப்படவில்லை என்ற உண்மையும், அவர்கள் இன்னும் செய்நன்றி மதிப்பவர்களாக இருந்து வருவதுமாகும். தமிழ்பேசும் மக்களின் இனவாதமானது அவர்கள் சார் இனரீதியான கட்சிகளின் அரசியல் தலைகளின் எண்ணிக்கை மூலம் நாம் காணும் அதே இடத்து சிங்கள பௌத்தர்களது இனரீதியான கட்சிகளின் அரசியல் தலைகளின் எண்ணிக்கையின் மூலம் அவர்கள் இன்னும் இனவாத எண்ணக்கருவில் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதை அறியலாம்.
இந்த நாட்டில் பிரிவின வாதம் இருந்தது, பயங்கரவாதம் இருந்தது. அது ஒரு இனத்தின் சுமார் 50% வீதமானோரை மரணிக்கச் செய்தும், குடி அகற்றியும் அழித்தது.இன்னோர் இனத்தின் கர்ம வீரர்களையும் அது பழி கொண்டது. யுத்தத்தில் மிதவாதிகளாக இருந்த பிரிதோர் இனத்தையும் அது விரட்டி அடித்தும், மரணிக்கச் செய்தும் அழித்தது.வடக்கு-கிழக்கில் மக்கள் தமது உறவுகளையும், உடமைகளையும் இழந்தனர். தெற்கு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் கொல்லப்பட்டனர். இரவிலும், பகலிலும் மரண அச்சம் நிலவி வந்தது. மாணவர் கல்வியும், மத அனுஷ்டானங்களும் பாதிப்புற்றன. பயங்கரவாதிகளும், அரசும் இதனை பகடைகாயாக உருட்டினரே தவிர முடிவுக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி சகல இன மக்களுக்கும் சகஜ வாழ்வை ஏற்படுத்தினார். நாட்டின் இறைமையை காத்தமைக்காக சர்வ தேசம் அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனைந்து கொண்டிருக்கிறது.
1983ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசானது பொலிசாருக்கு ஒரு வாரகால விடுமுறை கொடுத்துவிட்டு தமிழ் மக்களை உயிருடன் எரித்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட உடனேயே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலை அமுல் படுத்தும் வாய்ப்பு இருந்த போதிலும், அதற்கு இடமளிக்காது யுத்த முடிவினை காலம் தாழ்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்தது மட்டுமல்லாமல், பாதுகாப்புகளையும் செய்தார். இன்றளவிலும் வடக்கு-கிழக்கு பகுதி வாழ் மக்களுக்கு அவர்களின் அபிவிருத்திக்கு பங்காற்றி வருகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஒரு அமைதியான சகஜ வாழ்வை தமிழ் பேசும் மக்கள் கூட்டம் அனுபவித்துக்கொண்டே அவரை பொய்யாக விமர்சித்து வருகின்றது. இவ்வாறு விமர்சிக்க முடியுமாக இருப்பது; அவர் யுத்தத்தை முடித்தமையால், நாம் இன்று உயிர் வாழ்வதின் காரணத்தினால் ஆகும். இந்த உண்மையை தமிழ் பேசும் சமூகங்கள் ஏன் மறந்து விட்டன?
சமூக அபிவிருத்தி பணியில் தாமதம் இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம் அவை தமிழ் பேசும் அரசியல் தலைமைகளால் பேசி தீர்க்கப்பட வேண்டியவையாகும்.
வடக்கு-கிழக்கு மீள் குடியேற்றத்திலும், குடியேறியவர்களுக்கான அடிப்படை வசதிகளும் பிரச்சினைகள் இருக்கிறது. இராணுவ முகாம்கள் தனியார் நிலங்களை உள்ளடக்கி இருக்குமாயின் அவை விடுவிக்கப்படவேண்டும். ஆனால் இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது. அவை அரச காணிகளில் அமையப்பெற வேண்டும்.
இந்த நாட்டில் 23% அளவில் வாழும் சிறுபான்மை மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் சொத்துரிமையோடு சுதந்திரமாக வாழலாம். ஆனால், 70% மாக உள்ள சிங்கள மக்கள் நாட்டின் 1/3 பகுதி நிலப்பரப்பில் வாழ வாய்ப்பில்லை என்பது கசப்பான உண்மையாகும். வடக்கு-கிழக்கிலும் சிங்கள மக்கள் வாழ வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். ஆனால், அக்குடியேற்றங்கள் அரச காணிகளில் அமையப்பெற வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை.
இன்று சர்வதேசமும், புலம் பெயர் தமிழ் மக்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அது உள்நாட்டில் அமைதியாக வாழும் மொத்த தமிழ் பேசும் சமூகங்களினதும் சகஜ வாழ்வை அழிக்க முனையும் செயலாகும்.இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
ஈராக், லிபியா, சிரியா, போன்ற முஸ்லிம் நாடுகளின் இறைமையில் தலையிட்டு அரசியல் அஸ்திரத் தன்மையை ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வாறு தோற்றுவித்ததோ? அதே போன்று அமெரிக்காவுக்கு அடிபணியாத ஶசிறீ லங்காவையும் அதன் அரசியல் தலைமையையும் சின்னாபின்னமாக்கி அரசியல் அஸ்திரத்தன்மையை உருவாக்கி, ஒரு பொம்மை அரசியலை உருவாக்குவதன் மூலம் சர்வ தேசத்தின் தேவைக்கேற்ப நாட்டையும் அபிவிருத்தியையும் முடக்கி கலகம் உருவாக்குவதே அவர்களது நோக்கமாகும். மேற்சொன்ன முஸ்லிம் நாடுகளில் போன்று ஶசிறீ லங்காவில் கலகம் உண்டு பண்ணத் தெரிவு செய்யப்பட்டவரே பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் ஆவார். அவர் இதனை இன்று உணர வாய்ப்பில்லை.தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்ச்சியாக தேர்தல்களில் அரசாங்கத்தை புறக்கணித்து வந்தமையால் சிங்கள பௌத்தர்களது வாக்கு அரசுக்கு அதிகம் தேவைப்படுகின்றதுறது. எனவே பொது பல சேனாவின் காய் நகர்த்தல்களின் பலனை அரசு அடைய விளைகிறது.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம், தமிழ், அரசியல் தலைகள் மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியானால் அவரை அவ் ஆசனத்தில் அமர்த்திய பங்காளியாக பொது பல சேனாவே இருக்கும். அந்நிலையில் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ பொது பல சேனாவின் அழுத்தங்களில் சிலதுக்கேனும் உடன்பட நேரிடும். அது அழுத்கமை சம்பவங்களையும் விஞ்சிய மியன்மாராகக் கூட இருக்கலாம். அது நாட்டிலும், சமூகங்களுக்கு மத்தியிலும் ஒரு படு பயங்கர நிலையை உருவாக்கலாம். அவ்வாறு நிகழும் வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், சர்வதேசம் தனது நோக்கில் முதலாவது வெற்றிப் படியை ஏறிவிடும். அது ஐக்கிய நாடுகளின் இராணுவத்தை கொண்டு குவிப்பதாக இருக்கும். அத்தோடு சிறுபான்மை மக்களின் சகஜ வாழ்வு கேள்விக் குறியாகிவிடும்.
வரலாற்றில் இந்த வடு ஏற்பட சிறுபான்மை அரசியல் தலைமைகளும் சிறுபான்மை மக்களுமே குறிப்பாக முஸ்லிம், தமிழ் சமூகங்களே காரணம் என்ற அவப்பெயர் பதியப்படும். அது எமது சந்ததிகளையும் பாதிக்கும்.
இன்றைய தமிழ் பேசும் அரசியல் தலைமைகளின் ஜனாதிபதி தேர்தல் சார் நகர்வானது தனது சமூகத்தின் நன்மை கருதியதொன்றல்ல. அது எதிர்வரும் பொது தேர்தலில் தமது பாராளுமன்ற நுழைவுக்கான வெற்றிசார்ந்த ஒரு நகர்வாகும் என்பது உண்மையான காரணமாகும்.
இங்கு தமிழ் பேசும் சமூகங்கள் தமது அரசியல் தலைமைகளால் பலி கொடுக்கப்படுகின்றது. என்வே, தலையை பாதுகாத்துக் கொள்வது தமிழ் பேசும் ஒவ்வோர் குடிமகனதும் தனிப்பட்ட பொறுப்பாக மாறி விட்டுள்ளது. அதனை அவர்கள் சரியாக செய்தார்களா என்பது எதிர்வரும் ஒன்பதாம் திகதி வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டதும் வெள்ளிடை மலையாக தெரியப்போகும் ஒன்றாகும்.
தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்ற(UCNC) த்தினால் 2015 ஜனாதிபதி தேர்தல் குறித்து வழங்கும் தெளிவூட்டல் ஆவது, நீங்கள், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது மைத்திரி பால சிறிசேனவுக்கோ வாக்களியுங்கள். ஆனால், எல்லோரும் ஒரு தனி நபரை தெரிவு செய்து சமூகங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டாம். வாக்குகளை இரு தரப்புக்கும் பகிர்ந்தளியுங்கள். ஏனெனில் இம்முறை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் பேசும் தரப்புக்களின் கைகளில் இல்லை. அது சிங்கள பௌத்த மக்களின் கட்சி சாரா தரப்பினர் கைகளுக்குப் பரிமாற்றம் பெற்றுள்ளது என்பதாகும்.
L.A.U.L.M.நளீர்
பொதுச் செயலாளர்
தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் (UCNC)
.jpg)
Post a Comment