ரிஸானா நபீக் மறைந்து 2 வருடங்கள்
மூதூரைச் சேர்ந்த சிறுமி ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு நாளையுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இவர் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய காலத்தில் குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக் சாட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இவரது மரண தண்டனையை நிறுத்துமாறு இலங்கை அரசு கோரியபோதும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரிசானா 1988 பெப்ரவரி 4 இல் கிழக்கிலங்கையில் மூதூர் கிராமத்தில் ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக இவர் தனது ஆரம்பப் படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார்.
தனது 17 வது அகவையில் 2005 மே 4 இல் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிய தடை உள்ளதால், இவரது பிறந்த திகதி தொழில் முகவரால் 02.-02.-1982 என மாற்றப்பட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. தலைநகர் ரியாதில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள தவாதமீ என்ற இடத்தில் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது தொழிலைத் தொடங்கினார். வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளைக் கவனித்துக் கொண்டார்.
2005 மே 22 இல், குழந்தையின் தாய் தனது குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்த போது, குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது. தான் அக்குழந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாகவும் ரிசானா தெரிவித்திருந்தார்.ஆனாலும், குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் இவர் நபீக் கொலை செய்ததாக வாதிட்டனர்.
காவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 ஜூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இரண்டு தடவைகள் சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது விடுதலைக்காக மனித உரிமை அமைப்புகள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
2010 ஒக்டோபரில், வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் எலிசபெத் மகாராணியிடம் இவ்விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும் 2013 ஜனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிஸானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதானது இலங்கையில் மாத்திரமன்றி உலகளவில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. சவூதி அரேபியாவின் ஷரீஆ சட்டம் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுவதற்கும் இச் சம்பவம் வழிவகுத்திருந்தது. எனினும் குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதையடுத்தே தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அரேபியா அறிவித்தது.
ரிஸானா நபீக் தனது குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காகவே வெளிநாடு சென்றிருந்தார். அவரது கனவை நனவாக்கும் பொருட்டு இலங்கை இராணுவத்தினால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு ரிஸானாவின் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment