'என் மகனை விருந்தினராக நடத்துங்கள்' - IS வசம் சிக்கியவரின் தந்தை உருக்கம்
ஐ.எஸ்.களிடம் சிக்கிய, அமெரிக்க கூட்டுப் படை விமானியை, விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை கைப்பற்றி, இஸ்லாமிய நாடு என்ற பெயரில், ஐ.எஸ்.அமைப்பு ஆட்சி செய்கிறது.
இதை எதிர்த்து, அமெரிக்கா தலைமையில் ஜோர்டான் உள்ளிட்ட அரபு நாடுகளின் கூட்டு படையினர், போர் விமானங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், ஜோர்டான் விமானி, முத் அல் கசீஸ்பி சென்ற விமானம், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் உயிர் தப்பிய முத் அல் கசீஸ்பியை, ஐ.எஸ்.கள் கைது செய்து, சிறை வைத்துள்ளனர்.
ஜோர்டானை சேர்ந்த முத் அல் கசீஸ்பி, சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அமெரிக்க கூட்டு படை விமானிகளில், முதன் முதலாக, ஐ.எஸ்.கள் கையில் சிக்கியவரும் இவர் தான்.
இந்நிலையில், முத் அல் கசீஸ்பியின் தந்தை, சயிப் அல் கசீஸ்பி, ராய்டர் 'டிவி'க்கு அளித்த பேட்டி: என் மகனை, பிணைக்கைதியாக்க வேண்டாம். அவன், சிரியா இஸ்லாமிய நாட்டில் உள்ள நம் சகோதரர்களின் விருந்தினர். கடவுள் பெயரால், இறை தூதர் நபியின் கருணையால், விருந்தினர் என்ற முறையில் வரவேற்பும், உபசரிப்பும் தாருங்கள். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐ.எஸ்.சின் ஏவுகணை தாக்குதல் தான் முத் அல் கசீஸ்பியின் விமானம் தகர்க்கப்பட காரணம் என்பதை மறுத்துள்ள அமெரிக்கா, அது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து என்று தெரிவித்துள்ளது.

Post a Comment