Header Ads



சிலர் நவீன கால ஜாஹிலிய்யத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை

இம்மண்ணில் ஜனநாயக ரீதியாக அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் நீண்ட காலமாக மிக மோசமான வகையிலான வன்முறைகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமான இந்நிலைமைகளுக்கு நமது கட்சிக்காரர்களே மிகக்கூடுதலாக ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக  இருப்பதற்கென்றே மர்ஹும் அஷ்ரப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவாளர்கள் மிகக் கடுமையாக இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு அண்மையில் பள்ளிக்குடியிருப்பில் வட்டாரப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தலைமையுரை ஆற்றும்போது அக்கரைப்பற்று மு.கா. அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

இம்மண்ணில் ஜனநாயக ரீதியான தமது உரிமைகளை மையப்படுத்தியதாக அரசியலில் ஈடுபட்ட நமது கட்சிக்காரர்கள், வேட்பாளர், ஆதரவாளர் எனும் வேறுபாடின்றி மு.கா. வினர் என்பதற்காகவே தாறுமாறாகத் தாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள்.

தேர்தல் காலங்களில் கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள், வாள் வெட்டுக்களில் அகப்பட்டவர்கள், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமுற்றவர்கள், செவிப்பறை தாக்கப்பட்டவர்கள், தலையில் வெட்டுப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியவர்கள், தாக்குதல்களில் தப்பிப் பிழைக்காது உயிரிழந்தவர்கள், தீயிட்டுக் கொழுத்தியதால் வீடு வாசல்களை இழந்தவர்கள், வாகனங்களும், வியாபாரத்தலங்களும் தாக்கப்பட்டவர்கள், புனித றமழான் காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளைச் செய்ய விடாது நோன்பு துறக்கும் நேரத்திலும் குழப்பப்பட்டவர்கள் என நீண்ட பட்டியல்களே இவ்வன்முறைகளுக்குள் அடங்கியிருக்கின்றன.

நோன்பு துறப்பதற்கென்று ஒழுங்கு செய்யப்பட்ட பல இப்தார் நிகழ்வுகள் சமய உணர்வுகளும், மனித நேயச் சிந்தனைகளும் இன்றி மிகக் கேவலமான முறையில் குழப்பப்பட்டிருக்கின்றமையானது இத்தகைய வன்முறைகளோடு தொடர்புபட்ட கறைபடிந்த வரலாறாகும்.

இவ்வன்முறைகளில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்கள் கஞ்சா, மதுபானம் போன்ற போதைப் பொருள்களின் பாவனைக்கு முதலில் ஆளாக்கப்பட்ட பின்னரே இவ்வாறான வன்முறைகளிலும், குழப்பங்களிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை சமூக அக்கறையுடனும்இ கவலையுடனும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வன்முறைகளில் ஈடுபடுத்தப்பட்ட பலரின் குடும்பங்கள் இன்னும் வழக்குகளில் இருந்து விடுபடாமல் நீதிமன்றங்களில் அலைந்து திரிவதையும் வேறு சிலர் வாழ்விழந்து தவிப்பதையும் எம்மால் கவலையுடன் காணமுடிகிறது. 

இவ்வாறான வன்முறைகள் எந்தக் கோணத்திலிருந்து வந்த போதும் அவற்றையெல்லாம் மிகத் தைரியமாகவும், அர்ப்பணத்தோடும் முகங்கொடுத்து வந்த நமது மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள், மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் இக்கட்சியின் இப்பகுதி அமைப்பாளர் என்ற வகையிலும், மத்திய குழுத் தலைவர் என்ற கோதாவிலும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், மனிதாபிமானத்திற்குப் பொருந்தாமலும், நாம் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற இஸ்லாமிய விழுமியங்களுக்கு ஒவ்வாத வகையில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மேற்படி வன்முறைகளையும், அநியாயங்களையும் மனங்கூசாமல் வேடிக்கை பார்த்த பலர் இன்று அவற்றை தவறான நடவடிக்கைகள் எனக் கூறத் தலைப்பட்டிருக்கின்றனர்.

புத்திஜீவிகளிடமிருந்தும், பள்ளிவாசல் சம்மேளன அங்கத்தவர்களிடமிருந்தும், காலங்கடந்தாவது இவ்வாறான கருத்துக்கள் வன்முறைகளுக்கு எதிராகக் கிளம்பியிருப்பதை நாம் ஆரோக்கியமான விடயமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது. இவ்வமைப்புக்களில் அங்கம் வகிக்கும் சிலர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாம் மௌனித்து இருந்ததற்கு மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட புறநிலைச் சூழ்நிலைகளே காரணமாக அமைந்திருந்தன என்று அங்கலாய்க்கின்றனர்.

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஹலால் எதிர்ப்பு, பள்ளிவாசல்கள் உடைப்பு, ஹபாயாத் தவிர்ப்பு போன்ற முஸ்லிம் சமூகத்திற்கு விரோதமான செயற்பாடுகள் நடைபெறும் போதெல்லாம் மௌனித்து, சிந்தனையற்று வாளாதிருந்தவர்கள், தேர்தல் காலங்களில் மட்டும் உஷாரடைந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளைப் பாவித்து குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அறிவித்தல் செய்ததானது, நவீன கால ஜாஹிலிய்யத்தில் இருந்து இவர்கள் இன்னமும் விடுபடவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

இவ்வாறான கட்டுக்கடங்காத பல தொந்தரவுகளையும், வன்முறைகளையும், இம்மண்ணில் முகங்கொடுத்து வந்த மு.கா.வானது, 2009ல் இருந்து புதிய உத்வேகத்துடன் வளரத் தொடங்கியது. 2010ல் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் நமது கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அண்ணளவாக 3700 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டில் நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் இம்மண்ணிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். 2012ல் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்கு ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். இவையெல்லாம் இம்மண்ணில் மு.கா.வின் வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் விடயங்களாகவே பார்க்கப்படுகின்றன.

அண்மைக்காலமாக நாட்டில் நடைபெற்று வருகின்ற முஸ்லிம் சமூக விரோதச் செயல்காளால் விரக்தியடைந்த நமது சமூகத்தின் புத்திஜீவிகள் அபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்கி நமது உரிமைகளைப் பேரினவாதத்திற்கு தாரைவார்த்துக் கொடுப்பதானது, கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் கதையாகி விடக்கூடாது என்று சிந்திக்கத் தலைப்பட்டு விட்டார்கள். இச்சிந்தனையானது சமூகத்தின் உரிமைக்குரலான மு.கா.வை மீண்டும் இம்மண்ணில் வெற்றிபெறச் செய்யும் முனைப்பாகவே அமைகின்றது. இதனை நாமும் கருத்திற் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும் எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், மத்திய குழுவின் உப தலைவர் ஏ.எல். மர்ஜான், மூத்த உறுப்பினர்களான யூ.எல். ஆரிபீன், ஏ.எல். மொஹிதீன், எஸ்.எம். ஜாபீர், விரிவுரையாளர் முனாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.