1990 இருண்ட அத்தியாயம் - யாழ்ப்பாண முஸ்லீம் செல்வந்தர்கள் கடத்தலும், இனச்சுத்திகரிப்பும்


- எம்.எஸ். முஹம்மத் - 


1990 ஜுனில் ஆரம்பித்த இரண்டாவது ஈழப்போரில்  கிழக்கு மாகாணத்தில் புலிகள் பின்னடைவை சந்தித்து இருந்தார்கள். இலங்கை படைகளை எதிர்ப்பதில் அதிக வல்லமை கொண்டவர்களாக காணப்பட்ட LTTE முஸ்லிம்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கிழக்கு மாகாண புவியியல் அமைப்புகளையும் LTTE உறுப்பினர்களையும்  அடையாளம் கண்டுகொள்வது முஸ்லிம்களுக்கு இலகுவாக இருந்த காரணத்தினால் புலிகளால்  முஸ்லீம்  ஊர்க்காவல் பட செயற்படத் தொடங்கிய 1990 ஆகஸ்ட் 12 ஏறாவூர் தாக்குதலுக்கு பிற்பட்ட காலத்தில் முன்னரை போன்று தாக்குதல்களை நடத்தமுடியவில்லை. LTTE பின்வாங்கிச் செல்லவேண்டிய நிலையே காணப் பட்டது. 


தங்கள் பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் என்பதால் வடக்கில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்து தமது பழிவாங்கலை செய்யலாம் என கிழக்கு LTTE தலைமைகள் நினைத்தன. 


ஆனால் அவ்வாறு வடமாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை கொன்று குவித்தால் சர்வதேச ரீதியாக அழுத்தத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுவதுடன் தமிழீழ கோரிக்கைக்கு உள்ள வெளிநாட்டு ஆதரவுகளை இழக்க வேண்டிவரும் என்று  புலிகளின் ஆலோசகர்கள் கருதினர்.  அதற்காக நடத்த பட்ட  ஒரு கூட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டதாக புலி உறுப்பினர் சிலர் மூலமாகவும் அதில் கலந்து கொண்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்த விடயமும் அந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. 


இதனால் முஸ்லிம்களை கொள்ளையடித்து விட்டு வடமாகாணத்தை விட்டு துரத்தி விட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றினோம் என்று சொல்வதற்கான தீர்மானத்தை எடுத்தனர். புலிகளின் ஆயுத கையறுப்பும் நீண்ட நாட்களுக்கு யுத்தத்தை நடத்த போதுமானதாக இருக்கவில்லை.   1990 செப்டம்பர் 30 ஆம்  நாள் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம்களை கட்டம் கட்டமாக வெளியேற்றுவது என தீர்மானிக்கப் பட்டது. முஸ்லிம்களிடம் கொள்ளையடிக்கப் படும் பணத்தை கொண்டு தமது ஆயுதக்கொள்வானானாவை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். வெளியேற்ற முன்னர் முஸ்லீம் செல்வந்தர்களை கடத்தி   அவர்களிடம் கப்பம் பெரும் நடவடிக்கையை புலிகள் முன்னெடுத்தனர். 


அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஹாஜியார் என அழைக்கப் பட்டவர்களிடம் பணம் இருக்கும் என்ற வகையில் சிலர் கடத்தப் பட்டனர். சிலர் ரமலான் நோன்பு காலங்களில் ஏழைகளுக்கு தம்மிடமுள்ளதை தாராளமாக வழங்கி உதவி செய்ப்பவர்கள் இருந்தார்கள். அவாறான தனவந்தர்களையும் கடத்தி கப்பம் கேட்டார்கள். 


அந்த வகையில் யாழ் கோட்டை முற்றுகை முடிவடைந்த  1990 செப்டம்பர் 13 ஆம் திகதிக்கு பின்னர் தயாரிக்கப் பட்ட பட்டியல் பிரகாரம் பலர் கடத்தப் பட்டனர்.  ஒக்டொபர் முதலாம்  திகதிக்கும் ஒக்டொபர் 18  ஆம் தித்திக்கும் இடையே  20 க்கும்  மேற்பட்ட முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப் பட்டனர். அவர்களில் 21  நபர்கள் சுமார் 518 நாட்கள் முதல் 565 நாட்கள் வரை புலிகளின் திறந்த சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.  ஏனையவர்களின் வீடுகளை பரிசோதித்து அவர்கள் சித்திரவதையின் பொது சொன்ன பொருளாதார நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் விடுதலை செய்தனர். 


இவர்களை விட இன்னும் 32 பேர் தையல் வேலைகளுக்காகவும், புலி உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் , கட்டாய முன்னரங்க நிலைகளில் பங்கர் வெட்ட கடத்துவதற்கு வந்த சமயம் தப்பியோடியதற்காகவும், ஏனைய ஆயுத குழுக்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு கடத்தப் பட்டு பயிற்சி பெற்றதற்காகவும் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரை தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.  அவர்களில் இருவர் புலி உறுப்பினர்களாக இருந்தனர். கிழக்கு மாகாண நிலைமையை அடுத்த முஸ்லீம் புலி உறுப்பினர்களிடம் ஆயுதங்கள் பறிக்கப் பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் உயிருடன் திரும்பவில்லை. 


அவ்வாறு நீண்ட நாட்கள் கப்பத்துக்காக கடத்தி வைக்கப் பட்டவர்களில் பின்வருவோர் குறிப்பிடத் தக்கவர்கள்.  எம்.எஸ்.ராசிக் (செயின் ஸ்டோர்ஸ்),  ஏ.எல். சுபுஹான், எம்.ஏ.சி. முபீன் (மாக்ஸ்  டிரான்ஸ்போர்ட்),  எம்.ஏ.சி. மிஹிலார், எஸ்.எம். ஜாபிர் (எஸ்.எம். மீரான்சாஹிபி  டிரான்ஸ்போர்ட்) ,  ஏ.சி. அப்துல் ஜப்பார், சுல்தான் அப்துல் காதர் (ரஸ்மினின்  வாப்பா),  எம்.கே.  அப்துல் காதர் (கெளிறு- MKS ஜுவல்லர்ஸ்)  , அப்துல் கரீம் (டிசைன் டெக்ஸ்டைல்ஸ்) , (சியானால்) தாஹிர் , ஜமால், சதக்கத்துல்லாஹ் ரஷீத் (ஹனி பேக்கரி),  ,  புர்ஹானுத்தீன் , எம்.ஆர். ரஹ்மத்துல்லாஹ், முஹ்ஸின் ,      அப்துல் அஸீஸ்  இக்பால்  (LKS ஜூவல்லர்ஸ் ), இப்ராஹிம் ,      முத்து நசீர், புஹாரி சுபியான் மௌலவி.  மட்டக்களப்பை சேர்ந்த காலித் என்பவரும் கடத்தப் பட்டிருந்தார்.  அவர் ஒரு சாதாரண வியாபாரி. பிறகு அவரை விடுவிப்பதாக அழைத்து சென்றனர். அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. 


இவர்களில் பலர் வெளிஅமைப்புகளில் பெரும் கோடீஸ்வரர்கள் போல் காணப்பட்டாலும் இவர்கள் தமது நீண்ட நாள் சேமிப்பு மூலம் ஹஜ்ஜை முடித்தவர்களுக்கு , தமது வருமானத்த்தில் மிச்சமானதை தானதர்மம் செய்யும் வள்ளல்களாகவும் காணப் பட்டர்கள் அல்லாமல் அவர்களது சேமிப்பில் கோடிக்  கணக்கான பணம் இருக்கவில்லை.  கூப்பன் கடையில் வேலை செய்தவர்களும் பணக்காரர் என தவறாக அடையாள படுத்தப் பட்டு கடத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு கடத்தப் பட்டு நீண்ட நாட்களின்  பின்னர் விடுவிக்கப் பட்ட வைத்தி மீரான்சாஹிப் என்பவர் தான் ஒரு சாதாரண கூப்பன் கடை தொழிலாளி. ஆனால் தன்னையும் கடத்தி சித்திரவதை செய்து பணம் கேட்டார்கள் என்றும்  தன்னுடன் வைக்கப் பட்டிருந்த ஏனையவர்களிடம் புலிகள் எதிர்பார்க்கும் பணம் இல்லையெனவும் பத்திரிகையில் அறிக்கை விட்டிருந்தார்.


தனிப்பட்ட பகைகள் காரணமாகவும் சிலர் செல்வந்தர்கள் எனவும் புலிகளுக்கு எதிரானவர்கள் எனவும்  காட்டிக் கொடுக்கப்பட்டு கடத்தப் பட்டிருந்தனர்.  


இவர்களில் எம்.கே. எஸ் . நகை கடை உரிமையாளர் எம்.கே. அப்துல் காதர்  அவர்கள் தங்க கட்டிகளையும் நகைகளையும் பணத்தையும் இன்றைய மதிப்பில் சுமார் 220 மில்லியன் ரூபாய் பெறுமதியானவற்றை  கொடுத்த பின்னரும் கூட தலையில் பொலித்தீன் பை கட்டி அதற்கு நீரை நிரப்பி மூச்சு திணற செய்த போது பரிதாமாக உயிரிழந்தார். அவரது உடல் சாவகச்சேரியில் புதைக்கப் பட்டதாக தகவல். கடத்தி வைக்கப் பட்ட உண்மையான செல்வந்தர்கள் சிலர் ஏழு இலட்சம் முதல் 30 இலட்சம் வரை (1990 பெறுமதி) கொடுத்தாலும் அவர்களையும் ஒரு வருடத்தின் பின்னரே விடுதலை செய்தனர். இதற்கு காரணம் ஏற்கனவே வெளியேற்றப் பட்டு சிங்கள பிரதேசங்களுக்கு சென்றவர்கள் இராணுவத்துடன் சேர்ந்து தமக்கெதிராக செயற்பட்டால் இவர்களை கொள்ளுவோம் என எச்சரித்து அவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். 


சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அங்கு காய்களை நடத்தி வந்த முஸ்லிம்கள் நால்வர் கடத்தப் பட்டனர். அவர்களும் சுமார் 518 நாட்களின் பின்னரே விடுவிக்கப் பட்டனர். அவர்களின் பெயர்கள்  பின்வருமாறு. 


எம்.எப். யூசுப், சாவகச்சேரி அப்துல் ரஹீம், சுல்தான் கலீல் (சுல்தான்ஸ்  டிரான்ஸ்போர்ட்),  ஏ.சி. அப்துல் ஜப்பார் போன்றவர்கள் 1990 ஒக்டொபர்   10 ஆம் தித்திக்கும் 13 ஆம் தித்திக்கும் இடையில் கடத்தப் பட்டனர். அவர்களும் 508 நாட்களின் பின்னரே  விடுதலை செய்யப் பட்டனர். 


வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேச முஸ்லிம்களின் வெளியேற்றம் மிகவும் அடக்குமுறையுடன் சர்வாதிகார ரீதியாக நடத்தப பட்டது.  அவர்களில் சிலர் கடத்தப் பட்டனர். சாவகச்சேரியில் 48 மணி நேர அவகாசம் வழங்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் 2 மணி நேர அவகாசமே வழங்கப் பட்டது. அவர்கள் தங்கள் நகைகளையும் பணத்தையும் கொண்டு செல்லலாம் என்று கூறிவிட்டு சோனகர் நகரின் ஆசாத் வீதி, ஜின்னாவீதி, ஐந்து சந்தி, மன்பவுல் உலூம் மதரஸா சாந்தி போன்றவற்றில் தடுக்கப் பட்டு சகலரும் ஐந்து சந்திக்கு நாவலர் வீதி வழியாக செல்லுமாறு கூறப்பட்டார்கள். மேற்படி சோதனைசாவடிகளில் பைகள் மற்றும் போக்கட்கள் பரிசோதிக்கப் பட்டு பணம் நகை என்பன பறிக்கப் பட்டன.  ஐந்து சந்தியில் எஸ். எம் டிரான்ஸ்போர்ட் கடை சந்தியில் வைத்து ஆண்களும் பெண்களும் வேறாக பிரித்தெடுக்கப் பட்டனர். 


சிறு பாலகர்கள் முதல் முதியோர் வரை அத்தனை பெரும் முழுமையான உடல்பரிசோதனை செய்யப் பட்டனர். 


எஞ்சிய பணம் நகை மூன்றுக்கு மேற்பட்ட உடைகளை, கைக்கடிகாரங்கள், சுடுதண்ணீர் போத்தல்கள் போன்ற அனைத்தும் ஐந்து சாந்தி (இறுதி) சோதனை சாவடியில் பறித்தெடுக்கப் பட்டன. 


பாலகர்கள் கையிலிருந்த  காப்புகள், மோதிரங்கள்,  நகைகள் அனைத்தும் பறித்தெடுக்கப் பட்டன. பாலகர்களின் உள்ளாடைகளும் பரிசோதிக்கப் பட்டன. சிறுவர்களின் கைகளில் இருந்த  மோதிரங்களில் இருக்கமானவை கத்தரிக்க கோலால் வெட்டி எடுக்கப் பட்டன. அவ்வாறு சேயும் சில  சிறுவர்கள் காயமடைந்தனர். ஒரு சிறுமியின்  காதில் இருந்த  காதணியை கழட்ட முடியாத நிலை ஏற்பட்ட போது பெண் புலி உறுப்பினர் ஒருவர் அதனை இழுத்து பறித்தார். இதனால் அந்த சிறுமியின் காத்து ஓட்டை சோணை வரை கிழிந்து இரத்தம்  கொட்டியது. சிறு வீறிட்டு அழுத்தும் இங்க இருந்து அங்காள உமது பிள்ளையை கொண்டு போம் என  ஏனைய பெண் புலிகள் சொன்னார்கள்.  


வக்கிர புத்தியுள்ள இரக்கமற்ற இவ்வளவு கொடூரமான மனிதர்களை அந்த முஸ்லிம்கள் அதற்கு முன்னரும் பின்னரும் சந்தித்ததில்லை. 


தனி நபர் கடத்தல்களில் தொடங்கி செல்வந்தர் கடத்தலாகி, இன்ச் சுத்திகரிப்பு வெளியேற்றம், கொள்ளை , வழிப்பறி என  1990 கரிய ஒக்டொபர்  நிகழ்வுகள் நடந்து 36 வருடங்களாகின்றது. 


1990 இல் கடத்தப் பட்டு காணாமலாக்கப் பட்ட  22 பேருடன் வவுனியாவில் வைத்து 1991 மே மாதம்  23 ஆம் நாள் கடத்தப் பட்ட 9 பேருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை 31 ஆகும்.  இவர்களுக்கு இதுவரை எந்த நஷ்ட ஈட்டும் வழங்கப் படவில்லை என்பதை அரசாங்கத்தின் கவனத்துக்கு நாம் கொண்டுவருகின்றோம். 


மேலும் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் இன்னும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப் படாத இடங்களாக  யாழ்ப்பாணம் மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும்  காணப்டுகின்றது. 


சாவகச்சேரி, மண்கும்பான், நயினாதீவு, பருத்தித்துறை, சுன்னாகம்,  கொடிகாமம் , போன்ற பகுதிகளில் சிறியளவில் வாழ்ந்த முஸ்லிம்களும் யாழ்ப்பாணம் சோனகர் நகர், பொம்மைவெளி   புதிய சோனகர் தெரு, புதுக்குடியிருப்பு நூர் நகர்,  ஷாபி நகர்,   பறைச்சேரிவெளி , சூரியவெளி போன்ற  பிரதேசங்களில் மீள் குடியேற்றம் முறையாக அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளவேண்டியுள்ளது.  சுமார் 200 குடும்பங்கள் காணியும் வீடும் அற்றவர்களாக உறவினர் நண்பர்கள்   வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் கடந்த 17 வருடங்களாக வாழ்கின்றனர்.  


அதே போன்று கிளிநொச்சி நகர பகுதி, கரச்சி  பிரதேசசபையின் கீழுள்ள  கரடிப்போக்கு பிரதேசம், திருநகர் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முறையாக முன்னெடுக்கப் படவில்லை. 


எனவே இவர்களுக்கான முறையான வீட்டமைப்புத் திட்டம் ,  கல்வித்திட்டம், தொழில்  வாய்ப்புகள், தொழில்த்துறை   கல்விகள்,   போன்றவற்றை யாழ்ப்பாண மாவட்ட   மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கும்  வழங்க வேண்டும்.

No comments

Powered by Blogger.