Header Ads



சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்யும் பணியை JVP காரியாலயத்தில் இருந்து முதலில் ஆரம்பிக்க வேண்டும்


 (இராஜதுரை ஹஷான்)


சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


எரிபொருள் கையிருப்பில் எவ்வித நெருக்கடியும் தற்போது ஏற்படவில்லை.எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் எரிபொருள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.


எரிபொருள் விநியோகஸ்த்தர்களுக்கு நூற்றுக்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு காலத்திலும் இந்த பிரச்சினை காணப்பட்டது.


 எரிபொருளின் விலை உயர்வடையும் போது வழங்கப்பட்ட  மேலதிக கட்டணம் அதிகரிக்கப்படும். இது ஒருமுறையற்றதொரு செயற்பாடாகவே காணப்பட்டது.


 முன்னாள்  மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தற்போது இந்த அரசாங்கம் 3 ரூபாய் மேலதிக தொகையை வழங்குவதை இடைநிறுத்துவதாக  பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளார்கள்.


அரசாங்கம் இவ்விடயத்தின் தான்தோன்றித்தனமாக செயற்படாமல், எரிபொருள் விநியோகஸ்த்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் அரசாங்கம் ஒருசில விடயங்களில் தன்னிச்சையாக செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு  பிரதான காரணியாக அமைகிறது.


பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை குற்றஞ்சாங்கம் குற்றஞ்சாட்டுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்கான ஆரம்பத்தை மக்கள் விடுதலை முன்னணியே ஆரம்பித்து வைத்தது.


விடுதலை புலிகள் அமைப்பின் ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது. மிகுதி ஆயுதங்கள்  அழிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்  அரச படைகளில் இருந்து கைப்பற்றிய பெரும்பாலான ஆயுதங்கள் முழுமையாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவில்லை.சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில்  உண்மையை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவதை வரவேற்கிறேன். தலதாமாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி தான் தாக்குதல் நடத்தியது. ஆகவே அதற்கு அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.