Header Ads



டிரம்பின் அறிவிப்பு பற்றி, பாலத்தீனர்கள் கூறுவது என்ன..?


டிரம்பின் முன்மொழிவை நேரடியாகத் தங்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாகவே பாலத்தீனர்கள் பார்க்கின்றனர்.


பாலத்தீன அதிபரான முகமது அப்பாஸ், காஸாவில் இருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அழைப்பை "சர்வதேச சட்டங்களின் மீதான தீவிர விதிமீறல்" எனவும் அப்பாஸ் குறிப்பிடுகிறார்.


"எங்கள் மக்களின் உரிமைகள் மீதான எந்த மீறலையும் அனுமதிக்க முடியாது, நாங்கள் பல்லாண்டுக் காலமாகச் சிரமப்பட்டிருக்கிறோம், மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம்" என்று அப்பாஸ் கூறுகிறார்.


ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலத்தீன குழுவின் தலைவரான ரியாத் மன்சூர் பேசுகையில் பாலத்தீனர்கள் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்தவற்றைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். "பாலத்தீனர்களை நல்ல இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தங்களின் அசலான வாழ்விடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்கட்டும்" எனவும் மன்சூர் குறிப்பிட்டார்.


காஸா முனையில் வசிக்கும் சாதாரண பாலத்தீன மக்கள் இதை தண்டனையின் வடிவமாகப் பார்க்கின்றனர். காஸாவில் இருந்து பிபிசியிடம் பேசிய 43 வயதான மகமூத் அல்மாஸ்ரி காஸாவில் வசிக்கும் ஒருவர்கூட டிரம்ப் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றார்.


"நாங்கள் இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே இருந்தாலும் சரி, எங்கள் வீடுகளை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம், டிரம்ப் போன்றோர் அமெரிக்கர்கள் யாரையாவது அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறி நிரந்தரமாக வேறு எங்கேனும் குடியேறுமாறு கேட்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.


காஸாவில் வசிக்கும் 28 வயது பெண்ணான செனபெல் அல்கவுல் டிரம்பின் முன்மொழிவுகளை "மிகவும் அபாயகரமானது" எனக் குறிப்பிடுகிறார். "வலி, பட்டினி, அழிவு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்வதால் காஸா மீதான எங்கள் உரிமையை எளிதாக விட்டுத் தருவோம் என்று டிரம்ப் நினைக்கிறார்" எனவும் செனபெல் கூறுகிறார்.


பிபிசியிடம் பேசிய பாலத்தீன வழக்கறிஞரான யூஸ்ஸெஃப் அல்யாதத், "காஸாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை, அழுத்தம் கொடுக்கும் கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இது காஸா மக்களைத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவொரு தீங்கிழைக்கும் நடவடிக்கை" என்று குறிப்பிடுகிறார்.


நெவின் அப்தெலால் போன்ற பாலத்தீனர்கள் மறுகட்டமைப்பு திட்டம் என்ற ஒன்று இருக்குமானால், அதை பாலத்தீனர்களின் கரங்களால் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மறுகட்டமைப்பு முடியும் வரை அங்கு தற்போது இருக்கும் நல்ல இடங்களுக்கு மக்கள் நகர வேண்டும். ஆனால் ஒருவரும் வெளியேறக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். BBC

No comments

Powered by Blogger.