Header Ads



பிரான்ஸில் இஸ்லாமிய பற்றாளர்கள் இலக்குவைப்பு - சவூதி இமாம்களும் தப்பவில்லை

பிரான்ஸில் இருந்து இரு இஸ்லாமியவாதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் மேலும் மூவர் வெளியேற்றப்படவுள்ளதாகவும் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்தே பிரான்ஸ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டவ்லுஸ் நகரில் மொஹமட் மராஹ் என்ற முஸ்லிம் இளைஞன் தொடர்ச்சியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் அல்ஜீரியா, மாலி நாட்டைச் சேர்ந்த இருவர் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் மேலும் இருவர் வெளியேற்றப்படவுள்ளதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பிரான்ஸ் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 19 பேரை கைது செய்தனர். இதன்போது டவ்லுஸ் மற்றும் ஏனைய நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பிரான்ஸ் உள்நாட்டு புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதில் நாடுகடத்தப்பட்ட மாலி நாட்டவர் யூத எதிர்ப்பு மற்றும் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டுள்ளார். அதேபோன்று சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட அல்ஜீரியாவின் அலி பல்ஹதத் என்பவர் ஏற்கனவே 1994 ஆம் ஆண்டு மரக் தாக்குதலுடன் தொடர்புபட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிளவுட் ஜெயன்ட் குறிப்பிட்டார்.

தவிர சவூதி அரேபியாவின் இரு இமாம்கள் மற்றும் துருக்கி நாட்டவர், ஆயுதக் குழுக்களுடன் தொடர்புபட்ட துனிஷிய நாட்டவர் என மேலும் பலர் எதிர்வரும் காலத்தில் நாடு கடத்தப்படவுள்ளதாக பிரான்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ‘இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏற்க முடியாது. இது எமது புதிய கொள்கை அல்ல.
ஆனால் டவ்லுஸ்ஸில் ஏற்பட்ட சம்பவத்திற்கு பின் இந்த விடயத்தில் நாம் மேலும் விளிப்புடன் இருக்கிறோம்’ என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிளவுட் ஜெயன்ட் பி. எப். எம். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கிழக்கு நகரான நான்சியில் இடம்பெற்ற தனது தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் ‘எமது தேசத்தின் கொள்கைக்கு இணங்கி செயற்படாதவர்கள் எமது எல்லையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்றார்.

1 comment:

  1. என்னதான் நமது முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் தாக்கப் பட்டாலும் அல்லது சவூதி இமாம்கள் நாடு கடத்தப்பட்டாலும், சவூதி அரசாங்கம் மேலும் மேலும் பிரான்சிடமிருந்து பில்லியன் டாலர் கணக்கில், ஆயதங்களை வாங்கிக் குவிக்கும் சூடு, சொரணையில்லாமல்.

    எல்லாருக்கும் அந்திம காலம் நெருங்கி விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.