பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே பிரித்தானியாவின் விருப்பமென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவர் நெஸ்லே பிரபு யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிகின்றபோதும் அரசியல் தீர்வை இன்னமும் அரசாங்கம் முன்வைக்காதிருப்பது கவலையளிப்பதாகவும் அவர்கள் ஆயரிடம் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்திற்கு செய்த பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவரும் அவரது பாரியாரும் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் யாழ்.ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பில் பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுத்தலைவர் ஆயரிடம் தெரிவிக்கையில்;
இலங்கைக்கு நான் பலமுறை விஜயம் செய்துள்ளேன். இலங்கையின் கடந்த கால மற்றும் தற்போதைய நிலைவரங்கள் குறித்து எனக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் அவதானித்தவற்றை விட தற்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. குறிப்பாக பாதை அமைப்புப் பணிகள் போதியளவு மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டாலும் மக்களின் வாழ்க்கைக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை காணக் முடிகின்றது.
இவையெல்லாம் ஒருபுறம் நடைபெற்றாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இன்னமும் ஒரு தீர்வை அரசாங்கம் முன்வைக்காதிருப்பது கவலையளிக்கின்றது.குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும்.
அனைத்து மக்களும் சமத்துவமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். இதற்கு நல்லாட்சி என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக மொழி தொடர்பில்இன்னமும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பல திட்டங்கள் செய்யப்படுவதாகக் கூறப்பட்டபோதும் அவற்றில் பெரும்பாலானவை செய்யப்படவில்லை. எனவே இதுதொடர்பில் தேசிய மொழிகள் மற்றும் மரபுரிமை அமைச்சுடன் நாம் கலந்துரையாடியபோது போதிய மொழிபெயர்ப்பாளர்கள், தட்டச்சு இயந்திரங்கள் மற்றும் ஆளணி வளம் இல்லையென்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
எவ்வாறான அரசியல் தீர்வை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் ஆயரிடம் வினவியபோது, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வதோடு, அனைவரும் சரிசமமாக வாழக்கூடய ஒரு தீர்வு தான் முக்கியம் என வலியுறுத்தியதுடன், தான் அரசியல்வாதியல்ல என்பதையும் அவரிடம் ஆயர் கூறினார்.
Post a Comment