Header Ads



நடுவானில் கணவருக்கு மாரடைப்பு - 80 வயது மனைவி விமானத்தை தரை இறக்கினார்


அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் ஜான் (81). விமானி ஆக இருந்தார். அவரது மனைவி கெலன் காலின்ஸ் (80). இவர்கள் இருவரும் தங்கள் விடுமுறை கழித்துவிட்டு 'செஸ்னா' என்ற குட்டி விமானத்தில் புளோரிடாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். விமானத்தை ஜான் ஓட்டினார். விமானம் விஸ்கான்சின் நகருக்கு அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஜானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவர் மயங்கி சாய்ந்தார்.

இதனால் ஹெலன் காலின்ஸ் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தை தரையில் இருந்து வானில் ஏற்றவும், கீழே இறக்கவும் மட்டுமே ஓரளவு பயிற்சி பெற்று இருந்தார். ஆனால் இதுவரை விமானத்தை ஓட்டி பழக்கமில்லை. இருந்தாலும் மனதில் துணிச்சலை வரவழைத்த அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தனது கணவரின் நிலை குறித்து தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த பயிற்சி விமானி ஜேம்ஸ் கொலின்ஸ் என்பவர் விமானத்தை ஓட்டி தரை இறக்குவது குறித்து ரேடியோ மூலம் வழி நடத்தினார்.

அதன்படி ஹெலன் காலின்ஸ் அந்த விமானத்தை ஓட்டினார். இதற்கிடையே விமானத்தின் வலது புற என்ஜினில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. இருந்தாலும் லாவகமாக செர்ரி லேண்ட் விமான நிலையத்தை 10 முறை வட்டமடித்த பிறகு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். அந்த விமானம் 1000 அடி தூரம் வரை சென்று 2 அல்லது 3 முறை குலுங்கிய பிறகு மண்ணில் புதைந்தபடி நின்றது.

ஆனால் அதற்குள் அவரது கணவர் இறந்துவிட்டார். அதை அறிந்த ஹெலன் காலின்ஸ் அதிர்ச்சியும், மனவருத்தமும் அடைந்தார். இதற்கிடையே விமானம் குலுங்கியபடி தரை இறங்கியதால், அவரது முதுகு மற்றும் இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டது. எனவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், விமானத்தை தன்னந்தனியாக ஓட்டி தரை இறக்கிய அவரது மன உறுதியை அதிகாரிகளும், ஊழியர்களும் பாராட்டினார்கள்.

No comments

Powered by Blogger.