Header Ads



மது அருந்தியவர்களினால் பொது இடங்களில், தமக்கு பாதுகாப்பு இல்லை 71 வீதமான பெண்கள் தெரிவிப்பு


மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளதாக புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.


2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) நடத்திய இந்த ஆய்வில், நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 15 வயதிற்கு மேற்பட்ட 1,157 பெண்கள் பங்கேற்றனர்.


இவர்களில் பெரும்பாலானோர், மதுபோதையில் இருப்பவர்களால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.


குறித்த ஆய்வின்படி, பெண்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இடங்களாக,


பொது போக்குவரத்து (பேருந்து, தொடருந்து) 77%


வீதிகள்: 43.7%


பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்கள்: 43%


பொதுப் பூங்காக்கள்: 26.6%


வாடகை வாகன சேவைகள் (Taxi): 13.4%


போன்ற இடங்களில் இவ்வாறு பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மதுபோதையில் இருப்பவர்களால் 55.4 வீதமான பெண்கள் வாய்மொழி மூலமான துன்புறுத்தல்களுக்கும், 48.8 வீதமானோர் அசௌகரியமான முறையில் பின் தொடரப்படுதல் அல்லது உற்று நோக்கல் போன்ற செயல்களுக்கும் ஆளாகியுள்ளனர்.


அத்துடன், 36 வீதமான பெண்கள் உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.


மது அருந்தியவர்களின் நடத்தை மற்றும் அவர்களிடமிருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக 67 வீதமான பெண்கள் மிகுந்த கவலை அடைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.


அத்தோடு, துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, 66.2 வீதமான பெண்கள் அச்சம் காரணமாகவும், 47.6 வீதமானோர் அவமானம் காரணமாகவும் எவ்வித எதிர்ப்பையும் காட்டுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.


இதற்குப் பதிலாக, அவர்கள் குறித்த இடங்களைத் தவிர்த்தல் (67.3%), பயண நேரங்களை மாற்றியமைத்தல் (55.4%) போன்ற தற்காப்பு நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர்.


மதுபோதையில் இருப்பவர்களால் ஏற்படும் இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென 98.4 வீதமான பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.


குறிப்பாக முறையான முறைப்பாடளிக்கும் வழிமுறைகளை உருவாக்குதல்.


மதுப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.


காவல்துறையினரின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்.


தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகாரசபை (NATA) சட்டத்தை பலப்படுத்துதல் என்பனவாகும்.


பெண்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் மிகக் குறைவாக (1.2%) இருந்தபோதிலும், மது பாவனையாளர்களால் பெண்களுக்கு ஏற்படும் சமூகப் பாதிப்புகள் பாரதூரமானதாக இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.