மலையாள ஊடகங்களில் வலம்வரும் ஒரு ஜும்மா உரை
ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் "ஆற்றுகால் பொங்கால் வழிபாடு" நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முழுவதும் இருந்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது காலங்காலமாக நடந்துவருகிறது..
திருவனந்தபுரம் மாநகரில் ஐந்து கி.மீ. சுற்றளவில் நடைபெறும் இந்த பொங்கல் வழிபாடு தினத்தில் இங்கு வரும் பெண் பக்தர்களுக்கு அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒத்தாசை செய்வது வழக்கம்.
இந்த ஐந்து கி.மீ. சுற்றளவில் 10க்கும் மேற்பட்ட ஜும்மா மசூதிகள் உள்ளதும், ஆற்றுகால் பொங்கல் தினத்தன்று இந்து சமூகத்தின் பெண்களுக்கு மசூதி நிர்வாகிகள் பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பதுண்டு.
இந்தாண்டுக்கான பொங்கல் வழிபாடு வருகிற மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பாளையம் மசூதி இமாம் டாக்டர் சுஹைப் மவுலவியின் ஜும்மா பயான் முக்கியத்துவம் பெற்றது.
""இந்தாண்டு ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் நிகழ்வு ரமலான் மாதம் வருகிறது.. நோன்பு காலம் என்பதால் நம்மவர் வீடுகளில் பகல் நேரம் உணவு சமைப்பது கிடையாது.
ஆனாலும் பொங்கல் வழிபாடு நடக்கும் 5கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள நம்மவர் வீடுகளிலும் மஸ்ஜித்களின் வாசல்களை திறந்து வைத்து மாநிலம் முழுவதும் இருந்து விருந்தினராக வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
அவர்களின் ஆசாரங்கள், சடங்குகள் சம்பிரதாய பொங்கல் வழிபாட்டில் நமக்கு பங்கெடுக்க முடியாது என்றாலும், திருவனந்தபுரம் வந்து குழுமும் இந்த லட்சக்கணக்கான சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உணவுகளை, பழம் மற்றும் குடிநீர் வினியோகிக்கவும், மசூதி வளாகத்தில் ஓய்வெடுக்கவும் கழிப்பறை பயன்படுத்தவும் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
புண்ணிய ரமலான் மாதத்தின் மிகமிக அதிகமான சந்தோஷத்தின், சகோதரத்துவத்தின், சினேகத்தின் செய்திகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.
இத்தகைய செயல்களின் மூலமே, அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரம், இஸ்லாமோபோஃபியா போன்றவற்றை எளிதில் வெற்றி கொள்ள முடியும்..."" என்ற சுஹைப் மவுலவியின் உரை மலையாள ஊடகங்கள் மதநல்லிணக்க செய்தியாக பகிர்ந்து வருகின்றனர்
Colachel Azheem

Post a Comment