300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கவலை
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர். வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருவதாக இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில வாகனங்களுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வாகன வியாபாரிகள் அல்லர், மாறாகத் தமது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி குடும்பத் தேவைக்காக எல்லைத் தாண்டிய கடன் கடிதங்கள் முறையின்கீழ் வாகனங்களை இறக்குமதி செய்த சாதாரண பொதுமக்களாவர்.
"நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றினோம், ஆனால் இப்போது தண்டிக்கப்படுகிறோம்" என வேதனை தெரிவிக்கும் உரிமையாளர்கள், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment