இலங்கையர்கள் உள்ளிட்ட பலரிடம் பணமோசடி செய்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மியான்மரின் வடக்குப் பகுதியில் இணைய மோசடிகள், ஆள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘மிங்’ குடும்பத்தைச் சேர்ந்த 11 முக்கிய உறுப்பினர்களுக்கு சீனா இன்று (29) மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் (10 பில்லியன் சீன யுவான்) மதிப்பிலான நிதி மோசடிகளில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இக்கும்பல் மற்றும் மியான்மரின் ஏனைய குற்றக் குழுக்களால் கடந்த காலங்களில் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளம் தருவதாகக் கூறி மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 இலங்கையர்கள் கடந்த காலங்களில் பெரும் முயற்சியின் மத்தியில் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய கணினி வேலைகள் பெற்றுத் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Post a Comment