Header Ads



சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐ.நா. உலக நாகரிகங்களின் கூட்டமைப்பு (UNAOC) உச்சி மாநாட்டில் இலங்கை பங்கேற்பு


சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உலக நாகரிகங்களின் கூட்டமைப்பு (UNAOC) 11-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவுக்கு சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் தலைமை தாங்கினார். உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் (High Level Segment) இலங்கையின் சார்பில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், உலக நாகரிகங்களுக்கிடையிலான நம்பிக்கை, சகவாழ்வு மற்றும் நிலையான அமைதிக்கு உண்மையான உந்து சக்தியாக அமைவது பேச்சுவார்த்தையே (Dialogue) என்பதை வலியுறுத்தினார். அவர் ஆற்றிய முழு உரையும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


இவ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரெஸ், UNAOC-இன் உயர் பிரதிநிதியும், இஸ்லாமோபியாவை எதிர்க்கும் ஐ.நா. சிறப்புத் தூதுவருமான திரு. மிகுவேல் ஏஞ்சல் மோரட்டினோஸ் ஆகியோரையும் தூதுவர் அமீர் அஜ்வத் சந்தித்து உரையாடினார் “மனிதநேயத்திற்கான இரு தசாப்த உரையாடல் – ஒரு பல்துருவ உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வை நோக்கி முன்னேறும் புதிய சகாப்தம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் உச்சி மாநாட்டில், 21 அமைச்சர் மட்டப் பிரதிநிதிகள், 18 பிரதி அமைச்சர் மட்டப் பிரதிநிதிகள், 5 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், 66 சிரேஷ்ட அதிகாரி மட்ட பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 103 உத்தியோகபூர்வ தூதுக்குழுக்கள் பங்கேற்றன. மேலும் தனியார் துறை, சிவில் சமூக அமைப்புகள், கல்வியியாளர்கள், இளைஞர்கள், கலை, விளையாட்டு மற்றும் ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தூதுக்குழுக்கள் அமைதியான சகவாழ்வுக்கான அடிப்படைகளாக உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவை  தொடர்பான தங்களது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த 11-ஆவது உச்சி மாநாடு இளைஞர்களை வலுப்படுத்தி, அமைதி கொள்கைகளை ஊக்குவித்தல்,தேசங்களுக்கு மத்தியிலான பரஸ்பர புரிந்துணர்வு கூட்டணிக் கலாசாரத்தை  வளர்ததல்  பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியது.

இந்த நிகழ்வின் இறுதியில், UNAOC தனது மூன்றாவது தசாப்தத்தில் நுழையும்போது மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகளுக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை வகுத்துக் கூறும் ரியாத் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


UNAOC 11-ஆவது உலக மன்றத்தில் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ஆற்றிய முழு உரை


மாண்புமிகு தலைவர்களே! மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே!

முதலில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக மன்றத்தை நடத்தி வழங்கிய சவுதி அரேபிய இராச்சியத்திற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயரிய உலக சேவையின் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள UNAOC-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக விவகாரங்களில் மிக முக்கியமான சந்திப்பாக இருக்கின்ற இந்த மதிப்புமிக்க மன்றத்தில் உரையாற்றுவது எனக்கு பெரும் பெருமையாகும்.

ஐக்கிய நாடுகள் நாகரிகங்களின் கூட்டமைப்பின் கொடியின் கீழ் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்ற உரையாடல்கள், பரஸ்பர புரிந்துணர்வு என்பது நாளாந்தம் புதுப்பிக்கப்படும் ஒரு உயிருள்ள முயற்சி என்பதை நினைவூட்டுகின்றன.  பொதுவான மனிதத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கே அதற்கு  அடிப்படையாக அமைகிறது.

 

பல்வேறுபாடுகள் மனித வரலாற்றை ஒன்றிணைக்கின்றன என்ற நம்பிக்கையிலேயே இந்த கூட்டமைப்பு உருவானது. எனினும், அதிகரித்து வரும் பிளவுகள், சகிப்புத்தன்மையின்மை மற்றும் நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைவு ஆகியவை, உரையாடல் தான் அமைதிக்கான அத்தியாவசிய சக்தியாகத் தொடர வேண்டும் என்பதை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன.

பல் துருவ உலகில், பல குரல்கள் உலக விவகாரங்களை வடிவமைக்கும் நிலையில், நேர்மையுடனும் திறந்த மனத்துடனும் செவி மடுக்கும் நமது பொறுப்பு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இலங்கை இந்தக் காட்சிநிலையுடன் உறுதியாக நிற்கிறது.

மாண்புமிகு பிரதிநிதிகளே,

சமூகத்தின் பல துறைகளை ஒன்றிணைக்கும் இந்த மன்றம், யாரையும் விலக்காத உரையாடலே நாம் நாடும் அமைதியான மற்றும் அனைவரையும் உள்வாங்கிய உலகிற்கு மிகச் சிறந்த பாதை என்பதை உணர்த்துகிறது.

பல இன, பல மதங்களைக் கொண்ட நாடாகிய இலங்கை, மரியாதையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடலிலிருந்தே அமைதியான சகவாழ்வு உருவாகிறது என்பதை கற்றுள்ளது. மீள்கட்டமைப்பை முன்னெடுத்து வரும் நிலையில்,  ஒவ்வொருவருக்கும் எமது கூட்டு எதிர்காலத்தில் இடம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்குடன் அனைவரையும் உள்வாங்கிய புத்தாக்க இலக்குடன் செயல்படுகிறோம்.

இந்தப் புதிய காலகட்டத்தில், கூட்டமைப்பின் இலக்கு மேலும் ஆழமடைய வேண்டும். உரையாடல் என்பது நெருக்கடி காலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், நம்பிக்கையையும் கூட்டுப்பொறுப்பையும் உருவாக்கும் முயற்சி தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

வேறுபாடுகள் தொடர்ந்தாலும், செவிமடுத்தல், புரிந்துகொள்ளுதல், நேர்மையுடன் செயல்படுதல் போன்ற எளிமையான ஆனால் ஆழமான மனித உறவுகளின் சக்தியில் மீண்டும் நம்பிக்கையைப் புதுப்பிக்க வேண்டும்.

 

மாண்புமிகு பிரதிநிதிகளே,

இலங்கையின் சூழலில், UNAOC “இளைஞர்களுக்கான மூலோபாய அமைதிக் கல்வி” போன்ற திட்டங்களை ஆதரித்து, இலங்கைப் பாடசாலைகளில் இளைஞர்களை அமைதிக் கல்வியியாளர்களாகப் பயிற்றுவித்து வருகிறது.

மேலும், இலங்கையில் பல்வேறு செயல்பாடுகள் மூலம் மதங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல், சமூக ஒற்றுமை மற்றும் சமூகங்களுக்கிடையிலான புரிதலை ஊக்குவித்தல் ஆகிய பணிகளில் UNAOC ஈடுபட்டு வருகிறது.

மத வழிபாட்டு தலங்களைப் பாதுகாப்பது முதல், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை முன்னேற்றுவது வரை, இந்த கூட்டமைப்பின் பணிகள் பரந்த பன்முக ஒத்துழைப்பு நோக்கத்தை வளப்படுத்தி வருகின்றன.

மாண்புமிகு பிரதிநிதிகளே,

UNAOC உருவாக்கத்திற்கு ஊக்கமளித்த கொள்கைகள் இன்றும் மிகுந்த பொருத்தத்தைக் கொண்டுள்ளன. உரையாடலை நம்பிக்கை, இணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கான உண்மையான இயக்க சக்தியாக மாற்றுவதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம். நாகரிகங்களுக்கிடையிலான பரஸ்பர மரியாதையே நமது பொதுவான மனிதத்துவத்தின் அடித்தளம் என்பதை இந்த மன்றம் நினைவூட்டட்டும்.

இலங்கைத் தூதரகம்

ரியாத்


No comments

Powered by Blogger.