இன, மத, ஒற்றுமைக்கான அடையாளம் வரலாற்று சிறப்புமிக்க பெலந்த பிரதேசம்
- முஹம்மத் நஸ்ரான் -
களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதி, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பெலந்த கிராமம், வீதிய பண்டார பெருவீரன் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசமாகும்.
இந்தப் புராதன நகரம் வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக காணப்படுகின்றது. வீதிய பண்டார இலங்கை வரலாற்றில் ஒரு வீர நாயகன் ஆவார். அவர் ஒரு திறமையான போராளி ஆவார். ஒருமுறை, போர்த்துகீசியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட வீதியம் பண்டார, புத்திசாலித்தனமாக சிறையிலிருந்து தப்பித்து பெலந்த பிரதேசத்துக்கு வந்து கோட்டையை நிர்மாணித்தார். அப்போது முதல், பெலந்த அவரது கோட்டையாக அமைந்து காணப்பட்டது.
வீதிய பண்டார இளவரசரோடு இவ்வாறு வந்த முஸ்லிம் மக்கள் பெலந்த பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்களின் குடியிருப்புகள் பெலந்த ஆற்றின் மறுகரையில் அமைந்து காணப்பட்டன. இளவரசர் வீதிய பண்டாரவுடன் வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் ஆற்றின் குறுக்கே குடியேறியதால் அந்தப் பகுதியில்தான் முதல் முஸ்லிம் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக புராணக்கதைகள் கூறுகின்றன. இந்த பள்ளிவாசல் முதலில் களிமண்ணால் கட்டப்பட்டு, ஓலை வேயப்பட்ட கூரையைக் கொண்டமைந்து காணப்பட்டதோடு, பிற்பட்ட காலத்தில் அது சிமெந்து கற்களால் அழகுத்தோற்றத்தோடு கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் களிமண்ணால் கட்டப்பட்டு சமய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன் சரியான காலப்பகுதி ஆதாரபூர்வமாக குறிப்பிடப்படவில்லை. (இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு காணப்படுகின்றது.)
களிமண்ணால் கட்டப்பட்ட மிகச் சிறிய பள்ளிவாசலினது முதலாவது நம்பிக்கையாளராக அல்ஹாஜ் கபூர் செயற்பட்டார். அன்றைய காலத்தில் இந்த பள்ளிவாசலுக்கு முன்பாகவே பாடசாலையும் அமைந்திருந்தது. இவ்வாறு பள்ளிவாசலின் முன் அமைந்திருந்த பாடசாலையை தற்போதைய இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் கபூர் அவர்களே மேற்கொண்டுள்ளார். இப்பாடசாலையின் முதலாவது முஸ்லிம் மாணவராக முஹம்மது சாலி திகழ்கிறார்.
அல்ஹாஜ் கபூருக்குப் பிறகு, ‘தண்டல் அப்பா’ என அழைக்கப்பட்ட நைனா மரிக்காரே பள்ளிவாசலின் நம்பிக்கையாளராக செயற்பட்டு வந்துள்ளார். இவருக்குப் பிறகு, அல்ஹாஜ் ஹனிபா நம்பிக்கையாளராக இருந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அல்ஹாஜ் ஹனிபா அவர்களினது மகன் அல்ஹாஜ் முஸ்தபா அவர்கள் நம்பிக்கையாளராக திகழ்த்தார். மிகுந்த சிரமத்துடன் இந்த பள்ளிவாசல் செங்கற்களால் மீண்டும் கட்டப்பட்டதோடு முன் நுழைவாயிலும் சிற்பங்களுடன் கட்டப்பட்டது.
பின்னர், அல்ஹாஜ் மர்சூக் இந்த பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பெலந்த பகுதியில் உள்ள விகாரை மற்றும் பள்ளிவாசலுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் இவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். அப்போதைய அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடன் சேர்ந்து, இவரும் பெலந்த ரஜ மகா விஹாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய தேவமுல்ல கல்யாணவன்ச அவர்களும் மின்சாரத்தைப் பெறுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது அமைந்துள்ள பள்ளிவாசலோடு சேர்ந்து காணப்படும் தேயிலைத் தோட்டம் மற்றும் மையவாடி காணியை கொள்வனவு செய்வதற்கு அல்ஹாஜ் முஸ்தபா, அல்ஹாஜ் ஏ.டபிள்யூ. நதீம் மற்றும் அல்ஹாஜ் மௌசூக் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அதிக நிதிப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். மேலும், அல்ஹாஜ் வசுர்தீன் அவர்களும் தனது சொந்த காணியை பள்ளிவாசலுக்கு வக்பு செய்துள்ளார். அல்ஹாஜ் நதீமுக்கும் விகாரைக்கும் இடையிலான தொடர்பு மூன்று தலைமுறைகளாக இன்னும் வலுவாகவே காணப்படுகின்றன.
இளவரசர் வீதிய பண்டார காலம் முதல் இன்று வரை சிங்கள – முஸ்லிம்களிடையேயான பரஸ்பர புரிதலும் ஒற்றுமைப் பிணைப்பும் அவ்வாறே இருந்து வருகிறது. பெரும் சகோதரத்துவம் எம்மத்தியில் காணப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் நமது தற்போதைய ராஜ மகா விஹாரையின் பிரதம தேரர் ஆவார். இந்த அற்புதமான பிணைப்பின் அடையாளமாக சங்கைக்குரிய தேவமுல்ல கல்யாணவன்ச தேரர் திகழ்ந்து வருகிறார். அவருக்கு முன் காலமான பெலந்த பிரதம தேரருடன் பிரதேச முஸ்லிம் மக்களிடையே பெரும் பிணைப்பு காணப்பட்டது.
இந்தப் பிணைப்பினதும் ஒற்றுமையினதும் வலிமையால்தான் இன்றும் கூட, நாட்டின் எந்தப் பகுதியிலேனும் இன அல்லது மதப் பிரச்சினைகள் எழுந்தாலும், இக் கிராமத்தில் அத்தகைய பதற்றம் எதுவும் நடக்காமைக்கான காரணமாக அமைந்து காணப்படுகிறது. இக் கிராமத்தில் பேச்சுக்களிலேனும் அல்லது நடத்தைகளிலேனும் எந்த வித முரண்பாடுகளும் காண்பிக்காமைக்கான பிரதான காரணம் இந்த சகோதரத்துவ பிணைப்பாகும். தென்னிலங்கையின் இன மத ஒற்றுமைக்கான அடையாளத்தின் ஆதர்ஷமாக பெலந்த பிரதேசம் இனியும் அமைந்து காணப்பட பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli

Post a Comment