Header Ads



ஹஜ் (பேசா) விசாக்களை ஒருபோதும், முறைகேடாக பயன்படுத்த மாட்டோம்


இம்முறை புனித ஹஜ் யாத்திரை செல்ல, சவுதி அரசினால் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகின்ற பேசா விசாக்கள் எவையும் முறைகேடாக பயன்படுத்தப் படமாட்டாது என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.


சவுதி அரசினால் எமது அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள பேசா விசாக்களை அரச தரப்பிலுள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்தப் போவதில்லை. அவை தொடர்பில் ஹஜ் குழுவுக்கோ அல்லது அது தொடர்பான எந்தவொரு அரச நிறுவனங்களுக்கோ தலையீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை.


ஹஜ் யாத்திரிகர்கள் செல்வதற்காக வழங்கப்படும் பேசா விசாகளை கடந்த கால அரச தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கையாண்டதைப் போன்று இம்முறை அரச தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கையாளப்போவதில்லை.


இது தொடர்பில் போலியான பிரசாரங்களை சில குறித்த எதிர்த்தரப்பு சமூக வலைத்தளங்கள் பரப்புரை செய்து வருகின்றன. அதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், 


எதிர்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசா விசாக்களைப் பெற்று புனித ஹஜ் யாத்திரைகளை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.


புத்த சாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சுதந்திரமாகவும் சகல வாய்ப்புக்களுடனும் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதற்குரிய அதிகாரிகளுக்கும் ஹஜ் குழுவினர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எனவே, புனித ஹஜ் யாத்திரையினை மேற்கொள்பவர்கள் தங்களுடைய ஹஜ் கடமைகளை நிறைவேற்றி வருவதற்கு திருப்தியான முறையில் சேவைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எமது அரசாங்கம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது என்றார்.

- இக்பால் அலி -

No comments

Powered by Blogger.