வஸீம் தாஜுதீன் ராஜபக்ஷ குடும்பத்தினதும், நாமலினதும் நெருங்கிய நண்பன் என்றிருந்தால்..?
ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் திடீர் விபத்தொன்றினால் ஏற்பட்ட மரணமொன்றல்ல, அது ஒரு கொலை என்பதாக அது விடயம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த நீதிமன்ற மருத்துவக் குழு அறிவித்துள்ளது. தாஜுதீனின் மரணம் திடீர் விபத்தொன்றினால் ஏற்பட்டது என்பதாகத்தான் எமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், மருத்துவர்களின் அறிக்கை முடிவு வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது.
தாஜுதீன் மரணிக்கும் பொழுது அவருடைய உடல் வாகனத்தின் இடப்பக்க முன் ஆசனத்தில் காணப்பட்டதாக விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் செலுத்தி வரப்பட்ட வாகனம் மதிலில் மோதுண்டு தீப்பற்றியது என்றால் அவருடைய உடல் இடப்பக்க முன் ஆசனத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. தாஜுதீனின் மரணம் தாக்குதல்களாலும் காயங்களாலும் இடம்பெற்றுள்ளது என்பதாகவும் வாகனம் தீப்பற்ற ஆரம்பித்ததுடன் அல்லது தீப்பற்று வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவருடைய மரணம் இடம்பெற்றிருக்கலாம் என்பதாகவும் நீதிமன்ற மருத்துவ குழு தெரிவிக்கின்றது.
தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை சொல்வதற்கு காரணிகளாய் உள்ள மற்றுமுண்டான விஞ்ஞான ஆய்வு ரீதியான சாட்சிகளையும் இம்மருத்துவக் குழு முன்வைத்துள்ளது. கொலையுடன் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்ற விதம், வீதியில் பொருத்தப் பட்டிருந்த CCTV ெகமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளும் இது ஒரு கொலை என்பதைச் சொல்வதற்கு உதவியாகக் கொள்ளப்படவுள்ள தாகவும் சொல்லப்படுகின்றது.
கொலைக்கான ஆதாரங்களாக முன்வைக்க முடியுமான விடயங்கள் மற்றும் கொலையாளிகளை பொலிஸார் அடையாளம் கண்டு இருப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தாஜுதீனின் மரணம், ராஜபக்ச ஆட்சிக் காலப் பகுதியில் ஒரு திடீர் விபத்து. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், 2015 மார்ச் மாதத்தில் இத்திடீர் விபத்து தொடர்பில் முறையான பரிசோதனை ஒன்றை நடாத்துவதற்கு பொலிஸார் ஆரம்பித்தனர். காலம் கடத்தப்பட்டு வந்தாலும் அப்பரிசோதனை பலமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதனைக் காண முடிகின்றது.
வசீம் தாஜுதீனின் கொலை விவகாரத்தை மீள திரும்பிப் பார்க்கும் பொழுது, முக்கியமான பல விடயங்களை அவதானத்திற்கு கொண்டுவர முடிகின்றது. நாமல் ராஜபக்ச குறிப்பிடுவதன் படி, தாஜுதீன் ராஜபக்ச குடும்பத்துடன் மிக வும் நெருங்கியதொரு தோழன். அத்தோடு அவர்களுடன் எப்போதும் ரக்பி விளையாடியவர்.
ஆனால் இவ்வகையில் மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் திடீர் விபத்தொன்றில் மரணிக்கும் பொழுது அவர்கள் நடந்து கொண்டுள்ள விதம் சாதாரணமானதா? தாஜுதீனின் நல்லடக்க நிகழ்விலாவது ராஜபக்ச புதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வாகனம் தீப்பற்றி தாஜுதீன் இறந்ததன் பின்னர், அது தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நாரஹேன்பிட்ட ஷாலிக்கா மைதானத்திற்கு அருகாமையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்திருக்கலாம்.
வாகனத்திற்குள் இருக்கும் உடல் சாரதி ஆசனத்தில் காணப்படவில்லை என்றிருந்தால் முதல் பார்வையிலேயே அதைக் கண்டுகொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு கஷ்டமிருந்திருக்காது. அதன் பிரகாரம், இது திடீர் விபத்தொன்றல்ல என்பதை ஒரு நொடிப்பொழுதில் விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் இருக்கலாமா?
வாகனம் ஷாலிக்கா மைதானத்திற்கு அருகாமையிலுள்ள மதிலில் மோதுண்டுள்ள விதம், மோதுண்டதனால் மதிலில் ஏற்பட்டுள்ள சேதா ரங்களின் நிலை மற்றும் வாகனம் தீப்பற்றி யமையும் தீடீர் விபத்தொன்று ஏற்படும் விதத்தை விடவும் சந்தேகத்திற்குரியது என்பதை அவ்வதி காரிகள் தங்களுடைய அனுபவத்தின் மூலம் விரைவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
அவ்வாறு இடம்பெற்றிருந்தால் தாஜுதீனின் மரணம் ஒரு கொலை என்பதாக சந்தேகப்பட்டு விசாரணைகளை அவ்வேளையிலேயே ஆரம்பித்திருக்கலாம். ஆனால், நடந்தது என்ன? மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மூலம் பல சேவை நீடிப்புக்களை பெற்ற, அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக பணியாற்றி வந்த அப் போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, தாஜுதீனின் மரணம் ஒரு திடீர் விபத்தொன்றினால் ஏற்பட்டது என்பதாக உடனடியாக ஊடகங்களுக்கு அறிவிப்புச் செய்ததன் மூலம், கனத்த திரையொன்றினால் சம்பவத்தை முற்று முழுதாக மூடிவிட்டார்.
நாமல் ராஜபக்ஷ கூறுவதன் பிரகாரம், தாஜுதீன் ராஜபக்ஷ குடும்பத்தினதும் நாமலினதும் நெருங்கிய தோழன் என்றிருந்தால், குறைந்த பட்சம் அம்மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றியாவது ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் பொலீஸில் விசாரித்திருக்கலாம். அவ்வாறு விசாரித்திருந்தால் மரணம் தொடர்பிலான சந்தேகங்கள் எவ்வகையில் உள்ளன என்பதை பொலிஸாரிடமிருந்து தெரி ந்துகொள்ள வாய்ப்பிருந்திருக்கும்.
தமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் மரணித்த விதம் சந்தேகத்துக்குரியது என்பதாக ஏதாவதொரு துப்புக் கிடைக்கும்பொழுது அவர் நடந்துகொள்ளும் சாதாரண விதம் எத்தகையது? குறிப்பாக அவர் ஒரு அழுத்தம் கொடுக்கக் கூடிய நபரொருவராக இருந்தால், அந்நிலையில் நாமல் ராஜபக்ஷ தன்னுடைய தந்தையான மஹிந்தவிடம் தனது நண்பனின் மரணம் சந்தேகத்திற்குரியது; அதனால் முடியுமான சகல அமைப்பிலும் அதற்கு பொறுப்புச் சொல்லக் கூடியவர்களை கண்டுபிடிப்பதற்கு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துமாறு சொல்ல வாய்ப்பிருந்தது.
தமிழில் – ஹெட்டி ரம்ஸி

Post a Comment