நீர்மூழ்கி கப்பல் மூலம், மலேசிய விமானத்தை தேட முடிவு..!
காணாமல் போன மலேசிய விமானத்தை, ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல் மூலம் தேட, ஆஸ்திரேலியா திட்ட மிட்டுள்ளது.
மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து கடந்த மாதம், 8ம்தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், மாயமானது. 239 பேருடன் சென்ற இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், சென்னை பெண் உள்பட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின், 10க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி காலாவதியாகி விட்டதால், அதிலிருந்து வரும் சிக்னல் மறைந்து விட்டது.
இதையடுத்து, ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை அனுப்பி, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவங்க உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கடற்படை தளபதி, அங்கஸ் ஹூஸ்டன் தலைமையில், மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்கிறது. கடந்த ஆறு நாட்களாக, எந்த சிக்னலும் கிடைக்காததால், ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.

Post a Comment