என்னைக் கொலை செய்தாலும், நான் நேசித்த ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முடியாது
(ஏ.எல்.ஜுனைதீன்)
தான் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளேனே தவிர தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை தேர்தலில் வெற்றிபெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை மற்றும் அச்சம் காரணமாக தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அரசியல்வாதிகள் தமது தேர்தல் தொகுதிகளில் படுதோல்வியை பெற்றுக் கொண்டு வீண் பேச்சுக்களைப் பேசுவது கேளிக்குரிய விடயம் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக விடுத்துள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ' கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என எவராவது ஒருவர் கூறுவதாக இருந்தால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேல் மாகாண முதலமைச்சராக நியமனம் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மாறியதைப் போன்று தென் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் பயணத்தை ஆரம்பித்து முழு நாட்டிற்கும் அதனை எடுத்துக்காட்ட முடியும்' எனக் கூறியிருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இக் கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முடியுமானால் வெற்றி பெற்று காட்டுமாறு எனக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல எவராவர் ஒருவருக்கு முடியுமானால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேல் மாகாண முதலமைச்சராக நியமனம் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மாறியதைப் போன்றே தென் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பயணத்தை ஆரம்பித்து முழு நாட்டிற்கும் அதனை எடுத்துக் காட்ட முடியும் என்பதே அந்த சவாலாகும்.
கடந்த காலங்களில் நான் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லை என்றால் மாகாண சபைகளுக்கான வேட்புமனு சபை உறுப்பினராக இருப்பதற்கு பொருத்தமில்லை என்றால் அண்மையில் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் செயல்பாட்டு நடவடிக்கைகளில் நான் பொருத்தமில்லை என்றால் எவ்வாறு ஒரு மாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராகுவேன்.
பொதுத் தேர்தல் ஒன்றின்போது ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வி அடைந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றி பெற முடிந்தது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாறாமல் பாதுகாக்க முடிந்தது.கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எம்மை வெற்றி தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத நபர்களாகவே அடையாளப்படுத்துகின்றனர். எனவே இது குறித்து ஒரு விடயத்தை சுருக்கமாகக் கூற வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயல்பாட்டு அரசியலில் நான் பிரவேசித்த நாளிலிருந்து வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் எவ்வாறாயினும் தொடர்ந்து தோல்வியை சகித்துக் கொண்டு பொது மக்களோடு இருந்துள்ளோம். நாம் மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு மக்களின் நாடித் துடிப்புக்களை அறிந்த நபர்கள் என்பதையே அதன் மூலம் புலப்படுத்துகின்றோம்.நாம் மக்களின் வாக்குகளாலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளோம். அதனை விடுத்து தேசியப் பட்டியலில் வரவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை மற்றும் அச்சம் காரணமாகவே தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அரசியல்வாதிகள் தமது தொகுதிகளில் படுதோல்வியைப் பெற்றுக் கொண்டு வீண் பேச்சுக்களைப் பேசுவது கேளிக்குரிய விடயமாகும். எனவே தற்போதாவது அவர்கள் முன் வந்து தாம் யார் என்பதை காண்பித்தால் சிறந்தது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் அவர்கள் திருந்த வேண்டும். தமது பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோர் தினமும் சஜீத் பிரமதாசவை அழிவுறவே செயல்பட்டனர். அவர்களுக்கு நான் ஒரு விடயத்தைக் கூற வேண்டும் என்னைக் கொலை செய்தாலும் நான் தொடர்ந்தும் நேசித்த ஐக்கிய தேசியக் கட்சியை கொலை செய்து அழிக்க முடியாது. இவ்வாறு சஜீத் பிரேமதாசவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment