Header Ads



இனியொரு தம்புள்ளை சம்பவம் நடக்காதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும்..!

ஏப்ரல் 20ம் திகதி இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகும். இலங்கை வரலாற்றில் நாம் அறிந்த நாளில் பள்ளிவாசல் ஒன்றில் ஜும்ஆத் தொழுகை நிறுத்தப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
பட்டப்பகலில் பொலிசார் முன்னிலையில் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டு ஜும்ஆத் தொழுகை நிறுத்தப்பட்ட தம்புள்ளை நிகழ் வானது இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு விழுந்த ஒரு பேரிடியாகும்.
யுத்தத்திற்கு பிறகு இந்த நாட்டில் நல்லிணக்கம் புரிந்துணர்வினை ஏற்படுத்த பாடுபடும் ஒரு காலகட்டத்தில் தம்புள்ளைப் பள்ளிவாசல் சம்பவம் இடம்பெற்றிருப்பது இந்த நாட்டை எந்தத் திசைக்கு இழுத்துச் செல்லுமோ
என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதல் உடனடியாகத் திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு தாக்குதல் அல்ல. கடந்த சில வாரங்களாக ரன்சிரி தம்புளு தரப்பின் அனுநாயக்கரான இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தலைமையிலான குழு ஒன்று முன் அறிவித்தல் கொடுத்து 20ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்வதாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பினைச் செய்ததும் பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜும்ஆத் தொழுகையை ஒத்திப்போடுமாறு முஸ்லிம் தரப்பிடம் கேட்டிருந்தார்கள். இவ்வாறான நிகழ்வு ஒன்று நடைபெறப் போகின்றது என அறிந்திருந்தும் பாதுகாப்புத் தரப்பு மூலமோ அரசியல் தலைமைத்துவத்தின் பங்கு பற்றல் மூலமோ இதனைத் தடுப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. யார் இந்த தவறை விட்டிருந்தாலும் இது ஒரு பாரதூரமான தவறாகும்.

சர்வதேச மட்டத்தில் எமது தாய் நாட்டை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ஒரு தரப்பினர் தீவிர முயற்சிகளை மேற் கொண்டிருக்கும் வேளை இவ்வாறான ஒரு கசப்பான நிகழ்வு நடைபெறாமலிருப்பதனைத் தடுப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் 1962 முதல் இயங்கி வரும் ஒரு பள்ளிவாசலாகும். பலர் இப்பள்ளிவாசல் இரு வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று எனக் குறிப்பிடுகின்றார்கள். இது முற்றும் தவறானது. இப்பள்ளிவாசலில் நிர்மாண வேலை நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது. உண்மையிலே அண்மைக்காலத்தில் இப்பள்ளி வாசலில் நிர்மாண வேலைகள் எதுவும் நடை பெறவில்லை.

புனித பூமி பிரதேசத்தில் புதிதாகப் பள்ளி வாசலை நிர்மாணிக்கின்றார்கள் இதனையே நாம் எதிர்க்கின்றோம் என இந்த பள்ளிவாசலை எதிர்க்கும் பௌத்த தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது உண்மைக்குப் புறம்பானது. பௌத்த புனித பிரதேசத்துக்குள் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றினை நிர்மாணிக்காது தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட் டிருக்காது என்றும் சிங்களத் தரப்பில் சிலர் தெரிவிக்கின்றனர்.

(இந்த ஆசிரியர் தலையங்கத்தை முழுமையாக பிரசுரிக்க முடியாமல் போனமைக்காக வருந்துகிறோம்)

No comments

Powered by Blogger.