அமெரிக்கா - இலங்கை உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை
அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிற்கும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கும இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை யின் உள்ளீடுகளை அரசு பகிரங்கப்படுத்த வேண்டுமென அநுரகுமார திசாநாயக்க எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவா தீர்மானம் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது ஒருமைப்பாடுள்ள நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினையில் சர்வதேச தலையீட்டுக்கான நுழைவாயிலை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னர் நாடு முக்கியமான தருணத்தில் உள்ள நிலையில் சர்வதேச சக்திகளின் பிடியிலிருந்த நாட்டினைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இந்நிலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் இதனைப் பாரதூரமான விடயமாக்கக்கூடாது. முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து நிலைமையை மேலும் சிக்கல் நிலைக்குள் தள்ளக்கூடாது. அமெரிக்க பிரேரணையின் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட உயரதிகாரிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மின்சாரக் கதிரையில் அமர்த்தப்படுவார்களென்றும் கூறப்படுகின்றது.
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஊடகங்களில் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட்ட பின்னர் அமைச்சர் பீரிஸின் கருத்தினை ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தனிப்பட்ட கருத்தென விவரிக்கின்றார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரின் கருத்தினை மற்றொரு அமைச்சர் நிராகரிக்கின்றார். இந்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களிடையே முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது.
ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து வெகுவிரைவில் வெளியிடப்படுமெனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அந்தக் காலம் எப்பொழுது? அரசு தனது நிலைப்பாட்டினை எப்பொழுது வெளியிடும். அரசாங்கத்திற்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலைமை மாற்றப்படவேண்டும். அமெரிக்கா தலைமையிலான வல்லரசு நாடுகள் குறைந்த செலவில் சிறு நாடுகளில் முதலீடுகளை முன்வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதேவேளை முதுகெலும்பில்லாத சில நாடுகள் வல்லரசு நாடுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை அவசியமானதொன்று தான் ஆனால், உறுப்பு நாடுகளுக்கு அங்கு சம உரிமையும் நீதியும் வழங்கப்பட வேண்டும். எந்தவிதமான பாரபட்சமும் இன்றி அச் சபை செயற்பட வேண்டும். ஏகாதிபத்திய நாடுகளின் முடிவுகளைத் திணிக்கும் ஒரு சபையாகவே ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டுவருகின்றது.
சர்வதேச சமூகம் ஒரு நியாயமான அமைப்பில்லை. காலத்துக்குக் காலம் தேவைக்குத் தேவை அதன் செயற்பாடுகள் மாறியவண்ணம் உள்ளன.எந்தவொரு நாட்டிலும் உள்ள வளங்களை இலக்காகக் கொண்டே மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருகின்றன. இன்றைய எமது அரசாங்கம் ஏகாதிபத்தியத்துடன் மோதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவே பலர் கூச்சலிடுகின்றனர்.தேசப்பற்றுள்ள அமைச்சர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மக்களின் விவசாயக் காணிகளை அமெரிக்காவின் டோல் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு வழங்குகின்றார்கள். இதனால் 5000 ஏக்கர் காணி அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சொத்தாகியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்கள் தற்பொழுது அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அமெரிக்காவின் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கான தூதுவராக இருந்தபோது பாதுகாப்பு செயலாளரான கோதாபய ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் உள்ளீடுகளை அரசு வெளிப்படுத்த வேண்டும். பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான யுத்தம் இடம்பெறும் நிலையில் இலங்கை எத்தரப்பிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கையின் வளங்களை அமெரிக்கா பயன்படுத்த இணக்கம் தெரிவிக்கும் வகையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எமது ஆட்புல எல்லையை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முற்றுமுழுதான அனுமதி அந்த உடன்படிக்கை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் தேசப் பற்று அங்கவீனமானதாகவே உள்ளது. அரசு தமது தேவைக்கேற்ப தேசப்பற்றினைப் பயன்படுத்திக் கொள்கின்றது. பொறுப்புக் கூறுவது தொடர்பாக அமெரிக்கா கேள்வி எழுப்புவது நகைச்சுவை மிக்க விடயம். வியட்நாம், ஈராக், ஆப்கான் மோதல்களை உலகம் மறந்துவிடவில்லை.
இந்நிலையில் பொறுப்புக் கூறுதல் அல்லது மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு அமெரிக்காவுக்கு அருகதை இல்லை. இலங்கையில் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற கலவரங்கள்தான் பின்னர் பாரிய மோதல்களாக யுத்தக் களங்களாக உருமாறின. ஆனால், அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளினால் தான் கலவரங்கள் மோதல்களாக மாற்றம் பெற்றன. சர்வதேச சூழலில் இலங்கைக்கு முரணான சூழ்நிலை காணப்படும் நிலையில் எமது வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். புரிந்துணர்வின் மூலம் எமது வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும்.
இந்தியாவின் தேசிய நலனுக்கு சாதகமாகவே இலங்கை மீதான இந்திய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென்பது அவர்களின் முடிவாக உள்ளது. போர் வெற்றியில் திளைத்திருந்த அரசு ஏனைய விடயங்கள் தொடர்பாக அக்கறை கொள்ளவில்லை. ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான வீதியில் 22 இராணுவ முகாம்கள் உள்ளன. அந்நிலையைப் பார்க்கும் போது அங்கு சிவில் நிர்வாகமா இராணுவ நிர்வாகமா நடைபெறுகின்றதென்ற சந்தேகம் எழுகின்றது.
யுத்தத்தின் பின்னரும் அரசு வட பகுதி மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் தவறிழைத்துள்ளது. இராணுவ அதிகாரத்தினை விஸ்தரித்துவரும் அரசு வடபகுதி மக்களின் இராணுவம் தொடர்பான மனோ நிலையை அரசு இன்னமும் புரிந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

Post a Comment