கருணாநிதியின் தமிழீழ கனவு - தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது இலங்கை அரசாங்கம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி முன்வைத்துள்ள தமிழீழ கோரிக்கை பிரசாரத்தின் எதிர்காலத் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை அவதானித்து இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் தமிழீழம் உருவாக இந்தியா ஆதரவும் அழுத்தமும் வழங்க வேண்டுமென்று கருணாநிதி ஆரம்பத்தில் வலியுறுத்திய போது அது இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தில்லை என்பதால் அது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் அப்போது தெரிவித்துவிட்டது.
எனினும் கருணாநிதி தமது தமிழீழ கோரிக்கை பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதுடன், இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் எம்.பி.யான ரி.ஆர்.பாலுவும் கருணாநிதியின் இந்த கோரிக்கையை அண்மையில் இந்திய பாராளுமன்றத்திலும் வலியுறுத்தியிருந்தார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட வந்திருந்த தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கும் ரி.ஆர்.பாலுவே அப்போது தலைமை தங்கியிருந்தார்.
ஆகவே கருணாநிதியின் இந்த பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது பற்றி இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தனவை தொடர்பு கொண்டு கேட்ட போது,
எமது அரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கம் வகிப்பது போன்று இந்திய அரசாங்கத்திலும் பல கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியினருக்கும் அவரது கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது அந்த வகையில் இந்த கருத்தை இந்திய அரசாங்கம் தெரிவிக்கவில்லை. இதை நாம் இந்திய அரசாங்கத்தின் கருத்தாகவும் கருதவுமில்லை.
இந்தியாவிலும் பல மாநிலங்கள் இருக்கின்றன. காஷ்மீர் உட்பட பல மாநிலங்களிலும் பிரச்சினைகள் நிலவுகின்றன. இலங்கையில் தனித் தமிழீழம் கொடுத்தால் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு தனியாக பிளவுபடும் நிலைமை ஏற்படும். ஆகையால் இது இந்திய அரசின் கருத்தல்ல. இதற்கு நாம் பதிலளிக்க வேண்டியதுமில்லை என்று கூறினார்.
எனினும் தமிழகத்தின் முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து வரும் இந்த பிரசாரமானது இலங்கையின் நிலைமை பற்றிய போதிய புரிதல் கள் இல்லாத அரசியல் தலைவர்களினால் வலுப்பெறும் நிலை வந்துவிட்டால் நிலைமை பாரதூரமாகி விடாதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்;
"எதிர்கால பிரசாரங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை அவதானித்து எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து நாம் செயற்படுவோம்' என்று அவர் தெரிவித்தார்

Post a Comment