கிண்ணியாவில் பஸ் நிலையத்தை உடனடியாக நிறுவுங்கள்
(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியாவுக்கென நிரந்தர பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது அவசியத்தேவையாகும். அதுவரை தற்காலிக பஸ் நிலையமொன்றை உடன் அமைக்க வேண்டுமென இந்த சபையில் பிரேரனை ஒன்றின் மூலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிண்ணியாப் பிரதேசம் சுமார் 75 ஆயிரம் மக்களைக் கொண்டது. திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகை அடிப்படையில் இது இரண்டாவது பெரிய பிரதேசமாகக் காணப்படுகின்றது. சுதந்திர காலம் முதல் இன்று வரை ஆளுங்கட்சிப் பிரதிநிதித்துவத்தைப் பெற்று வந்த பெருமை கிண்ணியாவுக்கு உண்டு. எனினும், இதுவரை பஸ்நிலையம் ஒன்று அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமை மிகுந்த கவலையைத் தருகின்றது.
எனது தந்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்கள் கடந்த 1994.06.23 ஆம் திகதி கிண்ணியாவுக்கான பஸ் உப டிப்போவை கொண்டு வந்தார்கள். 19 வருடங்கள் கழிந்த நிலையிலும், இன்றுங்கூட உப டிப்போவாகவே இது காணப்படுகின்றது என்பது துரதிஸ்டமானதாகும்.
தற்போதைய கௌரவ முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நிக்கோர்ட் திட்டத்தின் மூலம் இந்த டிப்போவுக்கு நிரந்தரக்கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டதைத் தவிர கடந்த 19 வருட காலத்தில் வேறு அபிவிருத்தி எதுவும் இங்கு நடந்ததாகத் தெரியவில்லை.
கிண்ணியா – திருகோணமலை, கிண்ணியா - மூதூர், கிண்ணியா – கந்தளாய், கிண்ணியா – கொழும்பு எனப் பல பஸ் பாதைகள் கிண்ணியாவில் இருந்த போதிலும் பஸ்வண்டிகளை நிறுத்திச் செல்வதற்கான ஒரு பஸ்நிலையம் (டீரள ளுவயனெ) இதுவரை கிண்ணியாவில் இல்லை.
இதனால் திருகோணமலை - கிண்ணியா என்றிருந்த பல பஸ் பாதைகள் திருகோணமலை - மூதூர் என மாற்றப்பட்டுள்ளன. முன்னர் இந்த பஸ்கள் பைசல்நகர், ஆலங்கேணி, குட்டிக்கராச் ஊடாக பயணஞ் செய்தன. அப்போது பொதுமக்களுக்கு சிரமம் இருக்கவில்லை. தற்போது இந்த பஸ்கள் பிரதான வீதி ஊடாக கிண்ணியா புகாரிச் சந்திவரை மாத்திரம் சென்று திரும்பி விடுகின்றன. ஆகையால் ஏனைய கிராம மக்கள் தமது போக்குவரத்துத் தேவைகளுக்காக பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு பிரதான காரணம் கிண்ணியாவில் பஸ் நிலையம் இல்லாமையாகும். ஏ 15 நெடுஞ்சாலையில் பயணிக்கும் எந்தவொரு பஸ்வண்டியும் கிண்ணியா நகருக்குள் வராமல் சென்று விடுகின்றன. இதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள், கல்விக்கல்லூரி மற்றும் ஆசிரியர் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, இந்தத் துன்பங்கள் உடனடியாக கலையப்பட வேண்டும். அதற்காக உடனடியாக தற்காலிக பஸ்நிலையம் ஒன்றை கிண்ணியாவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கௌரவ போக்குவரத்து அமைச்சர் அவர்களை நான் கோருகின்றேன். பஸ்நிலையம் நகரத்தை அண்டியதாக இருக்க வேண்டும் என்பதற்காக பின்வரும் இடங்களை நான் முன்மொழிகின்றேன். அவற்றுள் பொருத்தமான ஒரு இடத்தில் இந்த தற்காலிக பஸ்நிலையத்தை அமைக்கலாம்.
பழைய கிண்ணியாத் துறையடி. தற்போது இந்த இடம் எவ்வித பயன்பாடுமின்றி வெறுமனே இருக்கின்றது.
கிண்ணியா பொதுநூலகத்திற்கு முன்பாக உள்ள அப்துல் மஜீத் எம்.பி வீதியின் ஓரங்கள். இந்த வீதி ஓரத்தில் தாராளமான இடம் இருப்பதால் தற்காலிக பஸ்நிலையத்தை இங்கு அமைக்கலாம். கட்டையாறு புதிய பாலம் மற்றும் அபூபக்கர் எம்.பி வீதி என்பவற்றை மையமாக வைத்து ஒரு வழிப்பாதையை இங்கு உருவாக்க கூடிய வாய்ப்பு இருப்பதால் நெருக்கடிகளையும் குறைத்துக் கொள்ளலாம்.
கிண்ணியாவில் நிரந்தர பஸ்நிலையம் ஒன்று அமைக்க இன்னும் எவ்வளவு காலம் செல்லுமோ அதனை யாராலும் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் மேற்கூறிய ஓர் இடத்தில் உடனடியாக தற்காலிக பஸ் நிலையம் ஒன்று அமைக்க கௌரவ கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment