Header Ads



இஸ்லாமிய கலாச்சாரமும், பெளத்த அடிப்படைவாதத்தின் சவாலும்


(தமிழில் - இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி)

பொஸ்டன் குண்டுவெடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும் பல ஆதங்கங்கள் எனக்குள் எழுந்தன. முதலாவது ஹார்வர்டில் இருக்கும் எனது ஆசிரியருக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது.  இரண்டாவது யாரும் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. மூன்றாவது இதில் முஸ்லிம்களின் சம்பந்தம் இருந்திருக்கக் கூடாது. 

இறுதியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளக - வெளியார் அடிப்படைவாதம் இருந்தபோதிலும் நான் அதிகம் நேசிக்கும் அமெரிக்க நகரமான பொஸ்டனுடைய இயல்புகளான அறிவார்ந்த சுதந்திரம், பன்மைத்துவம், பரந்த நோக்குள்ள இடதுசாரி விழுமியங்களுக்கு இந்தக் குண்டுவெடிப்பு ஊறு விளைவித்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பாகும்.!

எனது ஆசிரியருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை விரைவில் அறிந்து கொண்டேன். பலர் கொல்லப்பட்டது சோகமான விடயம். அதிலும் என் மகனின் வயதையொத்த ஒரு எட்டு வயது சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். அமெரிக்கா தனக்கே உரித்தான அடிப்படைவாதிகளைக் கொண்ட ஒரு நாடு! வாஷிங்டன்… அது ஏனைய நாடுகளுடன் போர்செய்யும் போது  அமெரிக்க அடிப்படைவாதம் தெரிய வருகிறது. உண்மையில் சர்வதேச அடிப்படைவாதம் ஒரு தீவிரமான பிரச்சினை தான். அதிலிருந்து உருவாகும் பயங்கரவாதத்தில் உலகின் எல்லா அடிப்படைவாதிகளும் பங்காளர்கள் ஆகிறார்கள். 

தம்ம பதத்தில் வருவதைப் போன்று ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் கடந்த கால நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் எருதில் பூட்டப்பட்ட வண்டிலைப்போல் இப்போது அந்நாட்டைப் பின் தொடர்கின்றன. இலங்கையிலும் கடந்த காலத்தில் நாம் செய்துள்ள 'ஒன்று திரட்டிய' வினைகளால் விளையும் எதிர்வினை பற்றிய  நம் அனைவரினதும் அக்கறை  காலத்தின் தேவையாகும்.

இலங்கையன் என்ற வகையில் எனக்கு இன்னுமொரு எதிர்பார்ப்பும் உள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ள பவுத்த சிங்கள தேசியவாதத்தின் பண்பாடற்ற புதிய பதிப்பான பொது பல சேனா பற்றியது தான் அது! முஸ்லிம்கள் பவுத்த சிங்கள பெரும்பான்மைக்குள் ஊடுருவி அவர்களின் சமூக, கலாச்சார, பொருளாதார அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்கிறது அந்த அமைப்பு. இது எந்த அளவு உண்மை என எனக்குத் தெரியாது.  நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ஆடை விற்பனை நிலையம் பெண்களுக்கான வினோதமான ஒரு வகை  உள்ளாடைகளை சந்தைப்படுத்துகிறது. சிங்களப் பெண்கள் அதை அணிந்தால் அவர்களின் இன விருத்தி உறுப்புகளில் அந்த உள்ளடை பாதிப்பை உண்டு பண்ணுகிறதாம்! இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையை இல்லாதொழிக்க முஸ்லிம்கள் தீட்டிய  சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த ஆடை விற்பனை நிறுவனம் செயற்படுவதை நம்ப முடிகிறதா?  ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த எனது நண்பரொருவர் தனது நாட்டில் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த உள்ளாடைகளை வாங்க முயற்சித்தார். பொது பல சேனாவின் கருத்தின் படி அந்த உள்ளாடைகள் சிங்களப் பெண்களின் கருத்தரிக்கும் உறுப்புகளை மட்டுமே 'பதம் பார்ப்பதால்' அவர் அந்த எண்ணத்தைக் கைவிடவேண்டி ஏற்பட்டது! 

இப்படியான அபத்தமான கதைகள் ஒரு புறம் இருக்க சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வில் குறைபாடு இருப்பதை இரு சமூகங்களினதும் நலனில் அக்கறையுள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உள்ளாடை விவகாரம் போன்ற ஊர்க்கதைகள் தோன்றிப் பரவுவதற்கு புரிந்துணர்வின்மை தான் காரணம்என நான் நினைக்கிறேன். அவற்றில் உண்மை இல்லை என்பது ஒரு புறமிருக்க, தீவிர அரசியல் மயப்பட்ட கதைகள் தான் அவை என்பது கசப்பான உண்மையாகும்! அமெரிக்காவிலும் இவை காணப்படுகின்றன. மெக்கார்த்தியிஸம் அதன் ஒரு விளைவேயாகும். இன்னும் மெக்கார்த்தியிஸம் முழுமையாக இல்லாமல் போய்விடவில்லை.

இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிங்கள மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடும் இவை போன்ற வேறு கட்டுக்கதைகள் என்ன என நான் அறியேன். அவ்வாறு இருந்தால் இதைப் போன்ற 'மரை கழன்ற' வேடிக்கைக் கதைகளாகத்தான் இருக்கும்! தீவிரவாதம் எங்கிருந்து தோன்றினாலும் யாரும் நம்பாமலிருக்கும் பட்சத்தில் வேடிக்கையானது தான். ஆனால் பலர் அவற்றை நம்புகின்றனர். நிச்சயமாக சிங்கள மக்கள் அவற்றை நம்புவார்கள். உதாரணத்துக்கு பேஸ்புக்கை பாருங்கள்!  

எவ்வாறாயினும் பொஸ்டன் குண்டுவெடிப்பில் முஸ்லிம்களின் தொடர்பு இருந்திருக்கக் கூடாது என்ற எனது ஆதங்கத்துக்கு காரணம் பொது பல சேனா இனவாதிகள் அதனை வைத்து இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலைத் தொடர்வார்கள் என்பது தான். அது நடக்கவில்லை! (குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது பொதுபலசேனாவினர் அமெரிக்கா சென்றிருந்தனர். முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுபலசேனாவை அமெரிக்கா விரும்பலாம் என்று ஒரு கருத்து உள்ளது. அவ்வாறு இருக்கக் கூடாது என நான் விரும்புகிறேன்) அப்படி ஏதாவது இருந்தால் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தமது போராட்டம் சரியானதும், உண்மையானதும் என அவர்கள் கூறி இருப்பார்கள். 

ஆம். இஸ்லாமிய அடிப்படைவாதம் சிங்கள பெளத்த அடிப்படைவாதத்தை விடவும்  உலகமயப்பட்டது. உலக நாடுகளின் மீதான அமெரிக்க வல்லாதிக்க விஸ்தரிப்பு போக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு முதன்மைக் காரணி என்பதை நாம் சரியாகத் தெரிந்திருப்பதுடன் அனைவரும் அதனை ஊன்றி மனங்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய நாகரீகம் குறுகிய மனப்பாங்கையும், அடிப்படைவாதத்தையும் கொண்டதல்ல. அது பரஸ்பர புரிதல், நல்லெண்ணம், பகிர்தல் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமர்த்யா சென் அவர்கள் எழுதி 2005ல் வெளிவந்த 'ஆர்க்யூமென்டேடிவ் இந்தியன்' (Argumentative Indian) அந்த அம்சங்களை சிறப்பாக விவரிக்கின்றது. ஜன நாயக ரீதியில் அமைந்த திறந்த விவாதங்களை, உரையாடலை ஊக்குவித்த முஸ்லிம் அரசர்கள், அரசிகள் இந்தியாவில் இருந்துள்ளனர். அரபுகளாக அன்றி தம்மை அவர்கள் இந்தியராகவே கருதி ஆட்சி செலுத்தியுள்ளனர்.  

அறிவியல் மனித நாகரீகத்தில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு மகத்தானது. பேராசிரியர் மரியா ரோசா மெனோகல் அவர்களின் 'தி ஓர்னமன்ட் ஒப் த வேர்ல்ட்' நூலில் மத்திய கால ஸ்பெயினின், ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மக்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி சிறப்பாக எடுத்துரைக்கிறார். பின்னாளில் கத்தோலிக்க நகரமாக அடையாளப்படுத்தப் பட்டாலும் இஸ்லாத்தினதும் அரபுகளினதும்  கலாச்சாரமும் நாகரிகமும் அவற்றின் அதி உயர் ரசனையும் சிறப்புகளும் இன்று வரை வாழும் ஸ்பெயினின் 'சந்தியாகோ டி கொம்பொஸ்டெல்லா' நகரில்  இருந்து இந்தக் கட்டுரையை நான்  எழுதுகிறேன்.

தென்னாசியாவில் நவீன புலமைக் கலாச்சாரங்களின் வளர்ச்சிக்கு இஸ்லாம் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கு சான்றாக பல உருது, ஹிந்தி இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. தென்னாசியாவுக்கு முஸ்லிம் புலமையாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இலக்கிய நடைகள்  நமது இலக்கியங்களை மென்மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அவற்றில் 'கஸல்' ஒரு பிரபலமான உதாரணமாகும். பேராசிரியர் ஷம்சுர் ரஹ்மான் பாரூகி (எஸ்.எம்.பாரூகி) அவர்களின் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான 'தொன்மை உருது புலமைக் கலாச்சாரமும் வரலாறும்' என்ற நூல் எனது ஆசான் பேராசிரியர் முஹம்மது உமர் மேமன் அவர்களினால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேராசிரியர் எஸ்.எம்.பாரூகி அவர்களின் படைப்புகளை வாசிக்கும் போது இலங்கை முஸ்லிம் கல்விமான்கள் ஏன் இப்படியான ஆய்வுகளில் தமது கவனத்தை செலுத்துவதில்லை என்ற வினா என் மனதை நெருடும்! இலங்கை முஸ்லிம்களின் புலமைத் துறையில் இப்படியான சிறந்த இலக்கியங்களை காண விரும்புகிறேன்.. நிச்சயம் அவை தமிழில் இருக்கலாம்.  நமது முஸ்லிம் கல்விமான்கள் அவற்றை இனங்களுக்கிடையிலான ஆழ்ந்த புரிதலை, பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது வேணவா ஆகும். அதிலும் குறிப்பாக சிங்கள சமூகத்துடனான உரையாடலை மேலும் காத்திரமானதாக ஆக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் தமது புலமையை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகிறேன். இது ஒரு பெரும்பான்மை இனம் சார்ந்த கோரிக்கை அல்ல. இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பரந்த நோக்கைக் கொண்டது! அந்த வகையில் எனது நண்பர் தலைசிறந்த கவிஞர், பேராசிரியர் எம்.ஏ. நுஹுமான் அவர்களின் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. 

சிங்கள நாளிதழான 'ஜனரால' உடனான அவரது நேர்காணல் அந்த வகைப்பட்டது. தனது சாளரத்தினூடாக அந்த நேர்காணலில்  ஒரு மிதவாத, தாராளவாத முஸ்லிம் கல்விமானின் இதயத்தை 'ஜனரால' அழகாக வெளிப்படுத்தியது எனலாம்.   அவரைப் போன்ற பலரை நாம் முஸ்லிம் சமூகத்திலிருந்து முஸ்லிம் சமூகத்திலிருந்து எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறோம்( நிலார். என்.காசிம் உடைய சில நூல்களும் உள்ளன. அவற்றில் ஆய்வறிவை விட இதழியல் சார்பு அதிகம்) 

புதிய அறிவின் உருவாக்கம் பொஸ்டன் குண்டுவெடிப்புக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒப்பீட்டு இலக்கியத் துறையில் ஒரு உதய தாரகையான பேராசிரியர் சீசர் டொமினிக்ஸ் தனது புத்தம் புதிய பதிப்பான 'ரூட்லெஜ்' என்னும் நூலை எனக்குக் காண்பித்தார்.  

'உலக இலக்கியம் -  ஒரு வாசகன்' யாத்தவர்கள்: தியொ தான், மதா ரொசெந்தல் தொம்சன் மற்றும் சீசர் டொமினிக்ஸ். 

உலகம் முழுவதும் வியாபித்துள்ள மனித நடத்தையான எழுத்துத் துறையைப் பற்றிய நமது அறிவை வளப்படுத்துவதற்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு நிச்சயம் உதவும் என நினைத்தேன்.  அதன் முதலாவது கட்டுரையை  மேலோட்டமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு மின்னலடித்தது போலிருந்தது. உடனடியாக அந்த நூலை அவரிடமிருந்து இரவலாகப் பெற்றுக் கொண்டேன். பொது பல சேனா எழுந்து நின்று ஆடும் இக்காலப் பிரிவில் இலங்கை வாசகர்களுக்குத் தருவதற்கு காத்திரமான ஒரு விடயம் அந்தக் கட்டுரையில் இருப்பது என் கண்ணில் பட்டது!  அந்தக் கட்டுரை ஜுவான் அன்ட்ரிஸ் என்னும் கிறிஸ்தவ எழுத்தாளரின் 1782லும் 1799லும் பிரசுரிக்கப்பட்ட நூல் ஒன்றிலிருந்து எடுத்தாளப் பட்டிருந்தது. அதன் மொழிபெயர்ப்பாளர் சீசர் டொமினிக்ஸும் ஏனையோரும் தமது முதலாவது கட்டுரையிலேயே உலக இலக்கிய அறிவில் வாசகர்களது பரப்பெல்லையை விரிவாக்கும் வகையில் பங்களித்துள்ளனர்.  மேற்கின் "உலக இலக்கியம்" என்ற கருதுகோளின் முதன்மைப் பங்கு கோதேயைச் சாரும் என்பார்கள். இந்த ஆக்கம் ஐரோப்பாவின் அதற்கு முந்திய உலக இலக்கிய கருத்தாடல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. ஜுவான் அன்ட்ரீஸ் இத்தாலிய மொழியில் பல அத்தியாயங்களைக் கொண்ட பண்டைய இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கு தம்மை அர்ப்பணித்தவர்.  அவரது ஆக்கங்கள் ஐரோப்பிய இலக்கியங்களுடன் பாரசீக, இந்திய, சீன மற்றும் அரபு இலக்கியங்களை உள்ளடக்கிய அனைத்து இலக்கிய வகைகளின் போக்கு, அவற்றின் தற்கால நிலை மாற்றங்களை ஆராய்கின்றன. அவரது ஆயுளிலேயே பல பதிப்புகளைக் கண்ட ஒரு பேரிலக்கிய முயற்சி இது! 

இன்னும் ஒரு வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நவீன உலக இலக்கியத்தின் செழுமைக்கு ஐரோப்பியர் அல்லாதோரின் இன்றியமையாத பங்களிப்புக்கு ஐரோப்பா என்றும் கடமைப்பட்டுள்ளது என்பதை ஜுவான் அன்ட்ரீஸ் அவர்கள் மறுக்காது அதில் ஒப்புக் கொள்வதை  இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட விரும்புகிறேன். " நவீன ஐரோப்பிய இலக்கியம் அரபு இலக்கிய கர்த்தாக்களுக்கு கடமைப்பட்டுள்ளது. ஏனென்றால் தனக்கே உரித்தான அழகியல் ரசனையின் ஊடாக முன்னையது பிந்தியதை மீள் நிர்மாணம் செய்து  செறிவூட்டியுள்ளது” என அவர் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். "அரேபியர்கள் தமது அறிவுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தமது நூல்களை மொழிமாற்றம் செய்து கிரேக்க விஞ்ஞானத்துக்கு புத்துயிர் கொடுத்துள்ளார்கள். ஸ்பெயினின் ஊடாக அவர்களது அறிவின் ஒளி ஐரோப்பா எங்கும் இயற்கை அறிவியலாகப் பரிணமித்தது" என அவர் தொடர்கிறார். இஸ்லாத்தின் அறுவடையான அழகியல் கலைகளின் பல்வேறு கிளை அம்சங்களின் ஊடாக புதிய வகை கவிதைப் பாரம்பரியத்தை நமது பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தி, நமது கலாச்சாரத்தையும் நாட்டார்  இலக்கியங்களையும் மொழிகளையும் செழுமைப்படுத்தியதை மறுக்க முடியாது. அந்த வகையில் தான் ஐரோப்பாவில் இலக்கியம் மீளப் பிறந்தது! 

ஜுவான் அன்ட்ரீஸ் போன்ற ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபை துறவியின் பண்பட்ட வார்த்தைகள் இலக்கியத்துக்கு, கலாச்சாரத்துக்கு, நாகரீகத்துக்கு,  இஸ்லாத்தின், அரபிகளின் இன்றியமையாத பங்களிப்புகள் பற்றி விவரித்துச் செல்கின்றன. 'கீழைத்தேசவாதத்தின்' ஆரம்ப காலங்களில் கண்டுகொள்ள முடியாதிருந்த இப்படியான தகவல்களின் தொடராக அவர் சீன, இந்திய அறிவுப் பாரம்பரியங்களையும் சிலாகிக்கிறார்.

நம்மை நாமே புதிதாகப் புரிந்து கொள்ளல் இலங்கையர் என்ற வகையில் கலாச்சாரத் தூய்மைவாதங்கள் விரிக்கும் வலைகளில் சிக்கிக் கொள்ளாது மனிதப் பண்புகளை, கலாச்சாரங்களை எமக்கிடையே  பகிர்ந்து கொள்ள எமக்கே உரித்தான புதிய வழிவகைகளை தேடும் பாரிய பணி எமக்கு முன் உள்ளது. இந்த விடயத்தில் பொது பல சேனாவின் பெளத்த அடிப்படைவாதம் நமக்கெல்லாம் உதவப் போவதில்லை. அதற்கு மாறாக யதார்த்தத்தில் நம்மைப் பிணைத்திருக்கும் இன நல்லுறவுக்கான அடிப்படையாகிய 'பகிர்வு' என்ற அம்சத்தின் ஞாபகங்களை சிதைத்து சீரழிக்கும் வரலாற்றுத் துரோகமே அவர்களது 'பணி'யாக இருக்கப் போகின்றது! பண்படாத இந்தக் கூட்டத்தின் சித்தாந்த பிதாக்கள் பண்பாடற்ற தமது பின் சந்ததியினரைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதிருக்கின்றனர். கண்டி நகரில் கொடூரமான அவர்களது இனவெறித் துவேஷ உரைகளை காதால் கேட்டவன் என்ற வகையில் பொது பல சேனா தலைவர்களுக்கு  'பண்பாடற்ற' என்ற இடக்கரடக்கலைப் பாவிப்பது பொருத்தம் தான் என நினைக்கிறேன். 

இந்தக் கூட்டத்துக்கான மிதவாத முஸ்லிம்களின் எதிர்வினைகள் நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.  பல நூற்றாண்டுகளைத் தாண்டி  நீளும் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட இனங்களுக்கிடையிலான பகிர்தலை இனியேனும் சரியாகப் புரிந்து கொள்வதற்கான அறைகூவலை காத்திரமான முறையில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள்  விடுக்கவில்லை.

 'சிங்களத்துவம்' என்பது பல கலாச்சாரங்களினதும் பண்பாடுகளினதும் சங்கமம், அதன் பல்வேறு கூறுகள் ஏனைய கலாச்சாரங்களில் இருந்து நாம் பெற்றவை என்பதை சிங்கள சமூகம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. எமது உணவு வகைகளில் இருந்து முஸ்லிம்களின் தொடர்பை 'அறுத்தெறிய' வேண்டுமென்றால் சிங்கள சமையற் கலை அதன் பெரும்பாலான சுவை மற்று இரசனைக் கூறுகளை இல்லாதொழிக்க வேண்டிவரும். அதன் விளைவாக 'சிங்கள நாக்குகள்' தண்ணீரை விட்டுத் தூரமான மீன்களைப் போலாகிவிடும்! 

சாமுவேல் ஹண்டிங்டன் போன்றோர் நமக்கான ஒரு பொறியை தென்னாசியாவில் வைத்து விட்டனர். ஹண்டிங்டன் அமெரிக்க வலதுசாரிகளின் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  துரோணாச்சாரியார் அவார். அவரது ' நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்' அமெரிக்க விஸ்தரிப்புவாதத்தின் நலன்களை இலக்காகக் கொண்ட ஒரு வேலைத்திட்டமாகும்! அவர் உலகை வர்ணிக்கும் விதம் எளியது;  தட்டையானது; ஒற்றைப் பரிமாணமுடையது. ஒற்றை அடையாளம் கொண்ட விதத்தில் அவர் தெரிவித்த எதிர்வுகூறல்களை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திப் பாருங்கள். உதாரணமாக … அவரைப் பொறுத்த வரை இந்தியா ஹிந்துக்களுக்குரியது. இந்தியா என்ற தேசம் பல்வேறு மொழிகளின், மதங்களின், இனங்களின் அழகான ஒரு கலவை என்பதை அவர் வசதியாக மறந்து விட்டார். ஹண்டிங்டனுக்கு இலங்கை என்றால் பெளத்தம்! அதனால் தான் இந்த பெளத்த இனவாதிகள் ஹண்டிங்டன் போன்ற வலதுசாரி பாசிச சித்தாந்தவாதியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

பொது பல சேனா போன்ற அமைப்புக்களை வெறுமனே புறக்கணிப்பது அபாயகரமானது அதே வேளை அவர்களுக்கு சமய ரீதியாக முக்கியத்துவமளிப்பதும் தீங்கானது.  அவர்களது செயற்பாடுகளில் அவதானத்துடன் இருப்பது மட்டுமல்லாது நமது வரலாற்றை பகிர்ந்து கொள்வதைப் போன்று நமது நாளாந்த வாழ்வையும் ஏனைய இனங்களோடு அர்த்த புஷ்டியோடு பகிர்ந்து கொள்வது காலத்தின் தேவையாக மாறி இருக்கிறது.  

பொது பல சேனா கண்டியில் தமது நிகழ்ச்சி நிரல்களோடு கடைவிரித்த போது நான் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுகளுக்கான பாடத்தை ஆரம்பித்திருந்தேன். பேராசிரியர்களான நுஹ்மான் மற்றும் கார்மன் விக்ரமசிங்ஹ ஆகியோர் யாத்த 'அசல்வெசி அபி' (அயலவர் நாங்கள்) போன்ற மூன்று கதைகள் மாணவர்களின் வாசிப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.  அந்தக் கதைகளில் முஸ்லிம்   கிராமத்து வயல்வெளிகளில், பயிரிடும் நிலத்தில் மக்களுக்கு இருக்கும் உறவு, அவர்களுக்கிடையிலான பந்த பாசங்கள் சொல்லப்பட்டிருக்கும். முஸ்லிம் மக்களுக்கும் ஏனையோருக்கும் அந்த உணர்வுகள் பொதுவானவை.    

மறுதலையாக, பெரும் எண்ணிக்கையான பல்கலைக்கழக மாணவர்கள் பொ பொது பல சேனா கூட்டத்தில் அவர்கள் கக்கிய இனவாத நஞ்சை சுவைத்ததையும் காண முடிந்தது. இனவாத உணர்வுகளை தூண்டி விடுவது சுலபம். ஆனால் கல்வியை அதன் நோக்கமறிந்து கற்றவர்களுக்கு மத்தியில் அப்படியான உணர்வுகளை விதைப்பது சுலபமல்ல. சமூகங்கள் எவ்வாறு கலாச்சாரங்களையும் நாகரீகங்களையும் உருவாக்குகின்றன, பகிர்ந்துகொள்கின்றன என்பதை அறிவதற்கு கற்றலும், முயற்சியும் தேவை. 

எம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் இந்த சவாலை நாங்கள் முறையாக எதிர்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் பரந்த நோக்குடைய சிறப்பான, உயர்ந்த வரலாறும் கலாச்சாரமும் பல்வேறு பிரிவுகளாக சிதறுண்டு போவதை மவுனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் இழி நிலையை அனைவரும் அடைய வேண்டி இருக்கும். மனிதத்தை முதன்மைப்படுத்திய,  பலமான, ஆரோக்கியமான முழுமையை மீண்டும் அடைவதற்கான எல்லா சாத்தியங்களையும் தொலைத்தவர்களாக! 

இந்த கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னர் கிறிஸ்தவத் துறவி ஜுவான் அன்ட்ரீஸ் அவர்களுடன் ஆறுதலாக அமர்ந்து அவர் மனமுவந்து அளிக்கும் தேனீர் அல்லது கோப்பி ஒன்றைப் பருகுவதற்கு ஆசைப்படுகிறேன். ஏன் தெரியுமா? அவர் உலக இலக்கிய வரலாற்றை தொகுக்கும் போது அதன் மேன்மைக்கு சிறிதாகவோ பெரிதாகவோ பங்களிப்பு செய்த எந்த ஒரு மனித ஜீவியையும் மறக்காது தனது நன்றியறிதலை தெரிவித்தார். அப்படியான மனிதப் பண்பைத்தான் எதிர்பார்க்கிறேன்.   நான் ஒரு பவுத்தனாக வளர்க்கப்பட்டிருந்தாலும்  பொது பல சேனா போன்ற ஒரு அமைப்பின் தலைவர்களிடம் அவை போன்ற பண்புகளை எதிர்பார்ப்பது எப்படி? எனவே அதற்கு சரியான மாற்றாக தேனீர் கோப்பிக்கு பதிலாக தென்னஞ் சாராயத்தை தேர்ந்தெடுப்போம்! தென்னஞ் சாராயம் இலங்கையின் ஒரு கலாச்சார உற்பத்தி! சாராய உற்பத்தித் துறையின் காவலராக இருந்த குமாரதுங்க முனிதாசவின் பெயரால்! அது தான் இந்த இனவாதிகளுடன் உட்கார்ந்து 'அடிப்பதற்கு' தகுதி படைத்தது!

((லியனகே அமரகீர்த்தி - கட்டுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களப் பிரிவின் மூத்த விரிவுரையாளர். ஸ்பெயினின் சந்தியாகோ பல்கலைக் கழகத்தில் வருகைப் புலமையாளர்)

2 comments:

  1. ஏன்டா கண்ணு நாசமாப் போச்சு இந்த ஆக்கத்த நிறைவா வாசிச்சு முடிக்க கிட்ட.. நிர்வாகம் தயவுசெய்து பதிவிடும் ஆக்கங்கள நல்ல தெளிவான எழுத்துக்கள்ள போடுமாறு தயவாய் கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  2. Hi there, It is good u write this, but pls write sweet n short. write with not big quantity but need quality. it must be clear and big letter to read.

    ReplyDelete

Powered by Blogger.