Header Ads



லிபியாவில் ஆட்சிப் பொறுப்பு கைமாறியது



லிபிய இடைக்கால அரசு தனது ஆட்சிப் பொறுப்பை புதிதாக தேர்வான பாராளு மன்றத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டு ஓராண்டை எட்டும் நிலையில் அமைதியான முறையில் இந்த ஆட்சி மாற்றம் இடம் பெற்றது.

இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் நடந்த வைபவத்தில் ஆட்சி மாற்றத்திற்கான ஆவணத்தை பாராளுமன்றத்திற்கு தேர்வான மூத்த உறுப்பினரிடம் கையளித்தார். இதன்படி கடாபி அரசு கவிழ் க்கப்பட்டபோது அமைக்கப்பட்ட லிபிய இடைக்கால அரசு கலைக்கப்பட்டது.

அத்துடன் லிபிய வரலாற்றில் அமைதியான ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவானது.

“ஆட்சி உரிமையை தேசிய காங்கிரஸிடம் கையளிக்கிறேன். லிபிய மக்களின் பிரதிநிதியாக அது செயற்படும்” என்று இடைக்கால அரசின் தலைவர் அப்துல் ஜலீல் அறிவித்தார்.

எனினும் தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப் படுத்துவதில் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்ட அப்துல் ஜலீல், இடைக்கால அரசின் காலம் வரவேற் கத்தக்கது என குறிப்பிட்டார்.

எனினும் லிபியாவின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் மோதல் நீடிப்பதோடு ஒரு சில ஆயுதக் குழுக்கள் அதிகாரத்தை தம்வசம் வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோன்பு காலம் என்பதால் ஆட்சி மாற்ற வைபவம் நேற்று முன்தினம் இரவில் இடம் பெற்றது. இதனையொட்டி திரிபோலி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 200 பேர் கொண்ட பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான மொஹமத் அலி சலீமிடம் ஆட்சிப் பொறுப்புக்கான ஆவணம் கைய ளிக்கப்பட்டது. இதனையொட்டி திரிபோலியின் மாடியர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர்.

இந் நிலையில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள 200 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் புதிய அரசியல் அமைப்பு வரையப்பட்டு மீள் தேர்தல் ஒன்று நடத்தப்படும் வரையான காலத்திற்கு அரசொன்றை அமைக்கவுள்ளது. எனினும் எந்த குழுவும் பெரும்பான்மை பெறாத நிலையில் புதிய பாராளுமன்றம் முதல் முறையாக கூடியதன் பின்னரே அது குறித்து இணக் கப்பாடொன்றை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜுலை 7 ஆம் திகதி இடம் பெற்ற லிபியாவின் முதல் ஜனநாயக தேர்தலில் 200 ஆசனங்கள் கொண்ட பாராளு மன்றத்தில் 80 ஆசனங்களுக்கே அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. ஏனைய ஆசனங்கள் சுயேச்சை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதில் இடைக்கால அரசின் முன்னாள் பிரதமரின் லிபரல் கூட்டணி அதிகபட்சமாக 39 ஆசனங்களை வென்றது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் கட்டுமானத்திற்குமான கட்சி 17 ஆசனங்களை வென்றது. எனினும் சுயேச்சை உறுப்பினர்களில் தமக்கு அதிக ஆசனங்கள் இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் மொஹமட் சவான் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் இன்னும் ஒருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தின் தலைவர் மற்றும் இரு துணைத் தலைவர்களை தேர்வு செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். எனினும் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. TN


No comments

Powered by Blogger.