Header Ads



ரமழான் காலத்து மருத்துவ ஆலோசனைகள்



டாக்டர் எம்.ஜே.எப். ஸாமியா

ஒரு மனிதன் எவ்வாறு உடல், உள மற்றும் ஆன்மிக ரீதியாக ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதை இஸ்லாமிய வாழ்க்கை முறை படிப்படியாக எமக்குக் கற்றுத் தருகின்றது. நோன்பு நோற்பதன் மூலம் எமது உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் பழகுகின்றோம். அந்த வகையில் ரமழான் மாதம் எமது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நோய்களிலிருந்து நாம் நிவராணம் பெற பெரிதும் உதவுகின்றது.

1. நோன்பு நோற்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை?

இலங்கையைப் பொறுத்தவரை நோன்பு நோற்கும் நேரம் 12-14 மணித்தியாலங்கள். நாம் உண்ணும் உணவு சமிபாடடைய 3-4 மணித்தியாலங்கள் தேவை.

குளுக்கோஸ் உடலுக்கு சக்தியை வழங்கும் பிரதான சக்தி மூலம். உடல் சக்தியைப் பெற உணவுப் பதார்த்தத்திலுள்ள குளுக்கோஸை முதலில் பயன்படுத்தும். அவை முடிவடைந்த பின் உடலானது ஈரலிலும் தசைகளிலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் குளுக்கோஸை பயன்படுத்தும். அவையும் முடிவடைந்த பின் உடலில் மேலதிகமாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பை அனுசேபமடையச் செய்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும். நீண்டகால தொடர்ச்சியான பட்டினியின் பின்னரே உடலானது தசைக் கலங்களிலுள்ள புரதச் சக்தியை பயன்படுத்தும். இந்நிலை போசணைக் குறைபாடு (Starvation) எனப்படும் ஆரோக்கியமற்ற நிலையாகும். 

நோன்பு காலத்தில் 12-13 மணித்தியாலங்களின் பின்பு நாம் மீண்டும் உண்பதால் உடலானது இழந்த சக்தியை மீண்டும் பெற்றுக் கொள்வதோடு மேலதிக சக்தியை சேமித்தும் வைத்துக் கொள்ளும். எனவே, நோன்பினால் போசணைக் குறைபாடு ஒருபொழுதும் ஏற்படாது.  

மாற்றமாக மேலதிகமாக கொழுப்பில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை அகற்ற சிறந்ததொரு வழிமுறையாக நோன்பு இருக்கின்றது. நோன்பு நோற்று சில நாட்களில் குருதியில் சில ஹோமோன்களின் அளவு அதிகரிக்கும் (Endorphins). இது விழிப்புணர்வை அதிகப்படுத்தும் உள ஆரோக்கியத்தை ஊக்கப் படுத்தும். 

2. ரமழான் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்

நோன்பு நோற்பது உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். ஆனால், ஒழுங்கான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளாவிடின் நோய்வாய்ப்பட நேரிடும். நோன்பாளியின் உணவுப் பழக்கமே உடல் ஆரோக்கியத்தையும் நோயையும் தீர்மானிக்கும் காரணியாகும். நோன்பு கால உணவுப் பழக்கம் ஏனைய கால உணவுப் பழக்கத்தை விட மாறுபட்டதாக, விடே உணவுகளாக இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் அதிகமாக உண்பது உடலுக்கும் இபாதத்துகள் செய்து ஆன்மிகத்தை வளர்க்கவும் இடையூறாக அமையும்.

தவிர்க்க வேண்டிய உணவு          
அதிகமாக பொரித்த உணவு (பொரித்த சம்ஸா, பொரித்த பெட்டீஸ், பக்கோடா...)
 அதிக இனிப்பு வகை (குளாப்ஜாமுன், பூந்தி, ரஸகுல்லா...)
 அதிகம் கொழுப்பு நிறைந்த உணவு வகை: எண்ணெயில் சமைத்த கறிவகை
 Caffeine உள்ள பானங்கள்: தேனீர், கோப்பி

எடுக்க வேண்டிய உணவுகள்
 தானியங்கள், அவித்த கொழுக்கட்டை, baket சம்ஸா
 பாலுணவுகள்: புடின், யோகட்
 எண்ணெயின்றி சுட்ட ரொட்டி (சப்பாத்தி), எண்ணெயின்றி செய்த Pastry
 பழச்சாறுகள் (Cool இல்லாமல்)

தவிர்க்க வேண்டிய சமையல் முறைகள்
 நன்றாக பொரித்த உணவு வகை                    
அதிக எண்ணெய் கலந்த கறிவகை
 Caffeine அடங்கியுள்ள பானங்கள்: சிறுநீர் உற்பத்தியை தூண்டி உடல் நீரிழப்பை அதிகரிக்கும்.

கடைப்பிடிக்க வேண்டிய சமையல் முறைகள் 
அவித்த, மிதமான பொரித்த உணவு வகை    
Grilling or bakiyng கோழியிறைச்சி, மீன்
 கறி சமைக்கும்போது பயன்படுத்தும் எண்ணெயின் அளவைக் குறைத்து அதற்குப் பதிலாக சிறிதளவு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எண்ணெய்த் தன்மையை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவு நிறையுணவாக இருக்க வேண்டும். மேலும் மெதுவாக சமிபாடடையக்கூடிய உணவு வகையாகவும் இருக்க வேண்டும். 

இப்தாரின்போது பேரீத்தம்பழத்தையும் பழச்சாறுகளையும் உண்ண வேண்டும். இது இழந்த சக்தியை விரைவாக பெற்றுத் தரும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்பி உண்ட பால், பேரீத்தம்பழம், ஆட்டிறைச்சி, ஓட்ஸ் ஆகிய உணவுகளையும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஒலிவ், அத்திக்காய், பேரீத்தம்பழம், திராட்சைப்பழம், பருப்பு வகை போன்ற உணவு வகைகளையும் எடுக்க வேண்டும்.

01. நீரிழப்பு

பொதுவாக நோன்பில் அதிகமாக நீரிழப்பு ஏற்படும். சிறுநீர், வியர்வை போன்றவை மூலம் உடல் நீரை இழக்கின்றது. நீரிழப்பானது சிறுநீரகத்தின் தொழிற்பாட்டின் தன்மையிலும் தங்கியுள்ளது.

நோன்பு நோற்கும்போது போதியளவு நீரை அருந்துவது அவசியம். தவறும் பட்சத்தில் நீரிழப்பை ஈடுசெய்ய முடியாது போனால் நோன்பை விட நேரிடும். இன்னும் சிறுநீரக நோய்களுக்கு மற்றும் உயர் குருதியமுக்க நோய்களுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகளுக்கும் நீரிழப்பு அதிகமாகும். 

நீரிழப்பின் தன்மையைப் பொறுத்து சுகயீனம், பலவீனம், தசைப்பிடிப்பு, தலைசுற்று, ஒருநிலைத் தன்மையின்மை, மயக்கம் போன்றன ஏற்படலாம். தலைசுற்று அல்லது ஒரு நிலைத்தன்மை இல்லாத நிலையோ ஏற்படின் நீரை ஓரளவு சீனியுடன் கரைத்து குடிப்பது சிறந்தது.

நீரிழப்பு காரணமாக மயக்கம் ஏற்படின், உடலை கிடையாக வைத்து இரண்டு கால்களையும் தலையின் மட்டத்தை விட உயர்த்துதல் வேண்டும். அவசரமாக அருந்துவதற்கு நீராகாரம் வழங்க வேண்டும். 

2. தலைவலி

ரமழான் காலங்களில் தாக நீரிழப்பு, போதிய ஓய்வின்மை, தூக்கமின்மை போன்றவற்றினாலும் நோன்பு துறந்தவுடன் குளிர்பானங்களை அருந்துவதினால் சளி அதிகமாவதினால் தலையிடி ஏற்படலாம்.

நோன்பு நோற்கும்போது அதிக நீரை அருந்துவதன் மூலமும் உரிய மருந்துகளை உட்கொள்வதன் மூலமும் தலைவலியைக் கட்டுப்படுத்தலாம். தொடர்ச்சியாக தலையிடி காணப்படின் வைத்தியரை நாட வேண்டும். 

3. ஒற்றைத் தலைவலி

நோன்பு காலத்தில் உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக மேலதிக கொழுப்புகள் குருதியுடன் சேர்வதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். 

நீரிழப்பு மற்றும் குருதியில் குளுகோஸின் அளவு குறைவதினாலும் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். எனவே, ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்துவதுடன், வெய்யிலில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

4. நீரிழிவு

வெல்லக் குறைப்பு மாத்திரை பாவிக்கும் நீரிழிவு நோயாளிகள் ரமழான் காலத்திற்கு முன்னதாகவே வைத்தியரிடம் ஆலோசனை செய்து, முடியுமானவர்கள் நோன்பு நோற்கலாம். எனினும், இப்தாரிலிருந்து ஸஹர் வரையான உணவுப் பழக்கத்தில் அதிக கரிசனை காட்டல் வேண்டும். அதிகமாக உண்ணக்கூடாது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய உணவு வகைகளையே உண்ண வேண்டும். 

அதிக நேரம் தொழிற்படும் வெல்லக் குறைப்பு மாத்திரைகளுக்குப் பதிலாக குறுகிய நேர தொழிற்பாடுள்ள மாத்திரைகளை வைத்தியரின் ஆலோசனையுடன் மாற்றிக் கொள்வது நல்லது.

அடிக்கடி குருதியில் குளுக்கோஸின் அளவை பரீட்சித்துக் கொள்ள வேண்டும். குறை குருதி குளுக்கோஸ் நிலையும் ஆபத்தானது. இது மயக்கத்திற்கு அல்லது வலிப்பு நோய்க்கு இட்டுச் செல்லலாம். தலை சுற்று, அதிக வியர்வை, ஒருநிலைத் தன்மையின்மை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் இனிப்பான பானத்தை அருந்த வேண்டும். அல்லது அதிக சீனியுள்ள இனிப்பு வகையை நாவின் கீழே வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயுடன் ஏனைய இதய வலி (Angina), Heart failure, கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக நோய்கள், கை கால் விறைப்பு, தொடுகை உணர்ச்சியின்மை போன்ற நோயுள்ளவர்கள் கட்டாயமாக வைத்திய ஆலோசனையின்படியே நோன்பு நோற்பதை தீர்மானிக்க வேண்டும். 

5. ஆஸ்த்மா

ஆஸ்த்மா நோயாளிகள் மருந்துகளை சரியான நேரத்திற்கு அருந்துதல் வேண்டும். வைத்தியரின் ஆலோசனையுடன் வாயினால் அருந்தும் வில்லை மருந்துகளுக்குப் பதிலாக Inhaler வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவை நேரடியாக நுரையீரலினுள் தொழிற்படுவதினால் பக்கவிளைவுகள் குறைவானது.


நோன்பு காலத்தில் உடல் உஷ்ணத்தை தணிப்பதற்காக குளிரான உணவு வகையை அதிகமாக உண்ணுவதனாலும் (உதாரணம்: தயிர்) ஆஸ்த்மா தாக்கம் ஏற்படலாம்.

ஆஸ்த்மா நோயாளிகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவுகளை அளவோடு உண்ண வேண்டும். அதிகாலையிலோ அல்லது இரவிலோ குளிக்காமல் ளுஹர் நேரத்திற்கு சற்று முன்னால் குளித்துக் கொள்வது சிறந்தது. குளிர்பானங்களை அவசியம் தவிர்த்தல் வேண்டும்.

6. உயர் குருதியழுத்தம்

உயர் குருதியழுத்தம் உள்ளவர்களும் மருந்துகளை உரிய நேரத்திற்கு உள்ளெடுக்க வேண்டும். நோன்பு காலங்களில் பசியுடனிருப்பதால் குருதியழுத்தம் குறைவாகத்தானே இருக்குமென முடிவெடுத்து மருந்துகளை உள்ளெடுக்காமலிருப்பது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி பக்கவாதத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, வைத்தியரிடம் சென்று குருதியழுத்தத்தை பரிசோதித்து அதற்கேற்ப மாத்திரைகளை ஒழுங்காக உள்ளெடுக்க வேண்டும். 

உப்பைக் குறைத்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். 

இயலுமான வரை அதிகம் நீரருந்த வேண்டும். 

வைத்தியரின் ஆலோசனையுடன் நீர்ப்போக்கு மாத்திரைகளைக் குறைத்து பாவிக்கலாம். 

உயர் குருதியழுத்தமுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டும். 

7. தாழ் குருதியழுத்தம்

பலவீனம், களைப்பு, ஒருநிலைத்தன்மையின்மை, நடுக்கம், சாதாரண, நாளாந்த வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலை, தலையிடி, நெஞ்சு படபடப்பு போன்ற அடையாளங்கள் காணப்படின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து வைத்தியரின் ஆலோசனைப்படி நடத்தல் வேண்டும். 

8. நெஞ்செரிவு / Gastritis / Hiatus Hernia

இரைப்பையானது உணவை சமிபாடடையச் செய்வதற்காகவும் பக்றீரியாக்களை அழிப்பதற்காகவும் அமிலத்தன்மையான சுரப்புகளைச் சுரக்கின்றது. அவ் அமிலச் சுரப்புள் அளவுக்கதிகமாக சுரந்தாலோ அல்லது இரைப்பையின் மேற்புறத்தில் உள்ள வால்வில் குறைபாடு காணப்பட்டாலோ நெஞ்செரிவு (Heart burn) எற்படும்.

நோன்பு பொதுவாக அமில உற்பத்தியின் அளவைக் குறைக்கும். ஆனால், உணவைப் பார்த்தாலோ அல்லது மணத்தை நுகர்ந்தாலோ அமிலச் சுரப்பி அதிகமாகச் சுரந்து நெஞ்செரிவு ஏற்படலாம்.

இரைப்பை அழற்சிக்காக மருந்துகளை எடுப்பவர்கள் ஒழுங்காக அவற்றை எடுக்க வேண்டும். மேலும் உணவுப் பழக்கத்தில் முக்கிய கவனமெடுத்தல் வேண்டும். 
எண்ணெய் வகையான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
 பொரித்த உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
 உறைப்பான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
 4 Caffeine உள்ளடக்கிய பானங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

தலையையும் நெஞ்சுப் பகுதியையும் சற்று உயர்வாக வைத்து உறங்குதல் வேண்டும்.

10. தசைப்பிடிப்பு 

கல்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனியங்களின் குறைபாட்டினால் ஏற்படுவது. உயர் குருதியழுத்தமுள்ளவர்களும் சீறுநீரக நோயாளிகளும் தசைப்பிடிப்பு ஏற்படின் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும். இலையுடன் கூடிய காய்கறிகள், பசளிக் கீரை கரட், பேரீத்தம்பழம் மற்றும் பாலுணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

11. மூட்டு வலி

ரமழான் காலத்தில் அதிகமாக நின்று வணங்கும் போது அல்லது ஓரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது மூட்டு வலி ஏற்படுகின்றது.

ரமழான் காலத்தில் முன்பிருந்தே உரிய உடற்பயிற்சி செய்து கால்களை பலப்படுத்துவதன் மூலம் ரமழானில் இலகுவாக அமல்களைச் செய்யலாம். மூட்டு வலி நோயுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் மருந்துகளை உரிய நேரத்துக்கு எடுப்பதன் மூலம் வலியைக் குறைத்துக் கொள்ளலாம்.

அல்ஹஸனாத்

1 comment:

  1. Arumaiyaana aalosanaikal Dr ku emathu nanri nonbin aarampattil eluthi irukkavendum Allah nada villai.....

    ReplyDelete

Powered by Blogger.