Header Ads



லிபியாவின் புதிய ஜனாதிபதியாக முகமது மகரீப் தெரிவு

லிபியாவில் அதிபராக இருந்த சர்வாதிகாரி மும்மர் கடாபியின் 35 ஆண்டு கால ஆட்சிக்கு, போராட்டத்தின் மூலம் முடிவு கட்டினர். மேலும் புரட்சிப் படையினரால் கடாபியும் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தேசிய மாற்று கவுன்சிலிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 200 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்றத்துக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. அதில் 80 இடங்களை அரசியல் கட்சிகள் பிடித்தன. 120 இடங்களில் சுயேட்சை எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தேசிய மாற்று கவுன்சில் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்திடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. அதில் முகமது மகரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 113 ஓட்டுகள் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட அலிஷிடான் 85 ஓட்டுகள் பெற்றார்.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது மகரீப் சர்வாதிகாரி கடாபியின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார். இவர் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காதியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இங்கிருந்து தான் கடாபிக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை இவர்தான் தலைமை தாங்கி நடத்தி கடாபியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். இவர் தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு பொருளாதார நிபுணர். இந்தியாவில் லிபியா தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

கடாபிக்கு எதிராக செயல்பட்டதால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் அவர் நாடு கடத்தப்பட்டார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர் எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அது தனக்கு வழங்கப்பட்ட பெருமைமிகு கவுரவம் என்றும் குறிப்பிட்டார். லிபியாவில் புதிய அரசியல் சட்டம் அடுத்த ஆண்டு இயற்றப்பட உள்ளது. அப்போது புதிய பிரதமரும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Magarief, middle, had made several attempts to put an end to the rule of the late Muammar Gaddafi [AFP]

No comments

Powered by Blogger.