Header Ads



முதலமைச்சராக போட்டியிடும் எண்ணம் கடுகளவும் இல்லை - ரவூப் ஹக்கீம் சொல்கிறார்

சம்மாந்துறை, மாவடிப் பள்ளி நிருபர்கள்
 
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் தனக்கு கடுகளவும் இல்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை  இரவு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற கட்சியாளர், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; எதிர்வரும்   கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் போட்டியிடப்போவதாக செய்திகள் பரவியுள்ளதை நான் அறிகின்றேன். இச் செய்தியில் எந்தவிதமான உண்மையும்  இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறி வைக்க விரும்புகின்றேன். முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததும் இல்லை.  இருக்கப் போவதும் இல்லை.

ஆனால் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு மூச்சுடன் செயற்படும். இதற்காக சகல அதிகாரங்களும் பயன்படுத்தப்படும் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதற்காக கட்சியின் போராளிகள் போராட வேண்டும்.

இன்று நாட்டில் பேசப்படும்  விடயம்  தான் தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு விவகாரம். பௌத்த தீவிரவாதம் கொண்ட சிறு குழுவும் ஒரு சில கடும் போக்கு அமைச்சர்களும் இதன் பின்னணியில் இருப்பதாக  எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைப் பள்ளிவாசல் உடைப்பு விவகாரமாக மட்டும் நாம் பார்க்கவில்லை. மாறாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள சதித் திட்டங்களின் முதற் கட்டமாகவே நாம் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களும் கவலை அடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் தனது உடனடிக் கவனத்தைச் செலுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.   எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்திலும் பாராளுமன்றக் கூட்டத் தொடரிலும் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்போம். இது தொடர்பாக தம்புள்ள பகுதியில் நியாயமான சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டால் அங்குள்ள பெரும்பாலான பெரும்பான்மை இன மக்கள் பள்ளிவாசலுக்கு ஆதரவாகவே  வாக்களிப்பார்கள் என்பது அங்கு  சென்றதன் பின்னால் எனக்கு விளங்கியது. ஜெனீவாவில் நமது நாட்டுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் வாக்களித்துள்ள நிலையில்,  அதற்காக நாம் பாடுபட்ட கையோடு  இப் பள்ளிவாசல்  உடைக்கப்பட்டு முஸ்லிம்களின் மனம் புண்படுத்தப்பட்டுள்ளமை எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இதில் கட்சியின் முக்கியஸ்தர்களான முழக்கம் மஜீட் ,மௌலவி எஸ்.எல்.ஹனீபா மதன், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்  மீரா சாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.