கடாபியே..! லிபியா மக்களை விட்டுவிடு, அழுது கெஞ்சிய தூதுவர்
நேற்று முன்தினம் இந்தியா உள்ளிட்ட 14 உறுப்பினர்களுடன் கூடிய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், லிபியா மீது பொருளாதார தடை, ராணுவ நடவடிக்கை, கடாபி உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை, சொத்து முடக்கம், லிபியா மீது விமானம் பறக்க தடை, சர்வதேச கோர்ட்டில் கடாபியை கொண்டு வந்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை கொண்டு வரும் ஒரு தீர்மானத்தை, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன.
இக்கூட்டத்தில், லிபியாவின் ஐ.நா., தூதர் முகமது ஷால்கம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர்,"உங்களை நான் தான் ஆள வேண்டும்; இல்லையெனில் உங்களை நான் கொல்வேன் என்று கடாபி கூறுகிறார். இப்போது லிபியா ஒன்றுபட்டுள்ளது.
லிபியா மக்களை விட்டு விடுங்கள் என்று என் சகோதரர் கடாபியிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அப்பாவிகளை கொல்லாதீர்கள். இறுதியான, விரைவான, அதே நேரம் துணிவான முடிவு எடுக்கும்படி பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு, ஐ.நா.,வுக்கான லிபியா துணைத் தூதர் இப்ராகிம் டப்பாசியை கட்டிப் பிடித்து கதறி அழுதார். இப்ராகிமும் அழுதார்.
உள்ளம் உருக்கும் இந்தக் காட்சியால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சிறிது நேரம் ஸ்தம்பித்தது. பின், மற்ற தூதர்கள் எழுந்து வந்து ஷால்கமுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று லிபியா மீது பொருளாதார தடை குறித்து விவாதிப்பதற்காக மீண்டும் கவுன்சில் கூடியது. இந்த இரண்டாவது கூட்டத்தில், லிபியாவில் நிலவும் வன்முறையை கட்டுப்படுத்துவது, பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு, நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் லிபியா மக்களின் கோரிக்கைகளை அங்கீகரித்தல் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன.

Post a Comment