இலங்கை நீதிமன்றச் செயற்பாடுகளில் இந்திய தலையீடு
இலங்கையில் நீதிமன்றச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம் தலையீடு செய்தது குறித்து இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுடனான இராப்போசன சந்திப்பு ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கவலையை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த புதன்கிழமை இரவு அசோக் கே காந்தா கொழும்பு திரும்பிய பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய போது பிடிபட்ட தமிழ்நாட்டு மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்த சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம் நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தாம் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் சட்டமா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பருத்தித்துறை மாவட்ட நீதிவான் சிறிநிதி நந்தச்சேகரன் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

Post a Comment