Header Ads



இடுப்பு பட்டியை மேலும் இருக்கமாக கட்டும், ஒரு வரவு செலவுத் திட்டமே இது - பொருளியல் விரிவுரையாளர் கணேசமூர்த்தி


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டம் அமையுமா என்பது குறித்து, பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்ககழத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியிடம் வினவியது.


இம்முறை தாக்கல் செய்யப்படுகின்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?


'இந்த வரவு செலவுத்திட்டத்தில் பெரியதொரு பங்களிப்பு வழமையாகவே நிதி அமைச்சுக்கு வழங்கப்படும். இரண்டாவதாக பொது நிர்வாக அமைச்சுக்கும், மூன்றாவதாக பாதுகாப்பு அமைச்சுக்கும் இதன் பங்களிப்பு காணப்படும். அபிவிருத்தி சார்ந்த வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்க முடியாது. கடன்களை செலுத்துவதாக தெரிவித்து, நிதி அமைச்சுக்கு பாரியதொரு தொகை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. வழமையாக நாட்டிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய அமைச்சுக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் காணப்படுவதாக தென்படவில்லை. நிவாரணம் தரும் வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்க முடியாது.


இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஏனைய வருடங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களை விடவும் மாறுபட்ட ஒரு வரவு செலவுத்திட்டமாக இது அமையக்கூடுமா?


இல்லை. அப்படி சொல்ல முடியாது. ஏற்கனவே இருக்கிற நிகழ்ச்சி நிரலுக்கு மாறி போகும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. வழமை போன்று குறிப்பிட்ட சில அமைச்சுக்களுக்கு மாத்திரமே ஒதுக்கீடுகள் பெரிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய அமைச்சுக்களுக்கோ, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அமைச்சுக்களுக்கோ நிதி போதிய அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு நிவாரணம் தேவைப்படுகின்ற காலப் பகுதி இது. ஏனெனில், வறுமை பெரியளவில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இலங்கை 2009ம் ஆண்டு இருந்த நிலைமைக்கு வறுமை பின்நோக்கி சென்றுள்ளது. அப்படியான நிலைமையில், பொதுமக்களுக்கான நிவாரணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.



சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு என்ன நடக்கும்?


சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த காலப் பகுதியில் கட்டாயம் உதவி செய்வது அவசியமானது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளே, இலங்கையில் 70 வீத கைத்தொழில் துறையாக காணப்படுகின்றது. அவர்களுக்கு நிவாரணம் என்ற விதத்தில் குறைந்த சலுகைகளுடனான கடன்கள் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும்.


அது மாத்திரமன்றி, குறிப்பிட்ட காலப் பகுதிக்கு இந்த நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்டுள்ள வரி விதிப்பின் படி, ஒரு லட்சம் ரூபா என்பது இந்த காலப் பகுதியில் பெரிய பணம் கிடையாது. ஒரு லட்சம் ரூபாவிற்கு மேலதிக வருமானத்தை பெறும் நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிட வேண்டும் என்றால், அவர்களினால் நிச்சயமாக தாக்குபிடிக்க முடியாது. ஏனெனில், உற்பத்தி செலவு ஒரு பக்கத்தில் அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.


சாதாரண தொழில் முயற்சி ஒன்றில் மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாவிற்கு அதிகமான வருமானத்தை பெற முடியும். வருமானம் என்பது இலாபம் கிடையாது. லாபத்தின் மீதான வரி இல்லை இது. இது வருமான வரி. செலவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தே, வருமானத்தை பார்க்க வேண்டும். இங்கு வருமானத்தை மாத்திரமே பார்க்கின்றார்கள். செலவை பார்ப்பது இல்லை. வருமானத்திற்கு வரியை செலுத்த சொல்கின்றார்கள். செலவை பார்த்தால் தானே லாபத்தை பார்க்க முடியும்.


வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரியை அறவிடுவதன் மூலம், செலவை கருத்திற் கொள்ளாது வரியை அறவிடுகின்ற போது, இலாபம் என்ற ஒன்றே சாதாரண தொழில் முயற்சியாளர்களுக்கு இல்லாது போகும் வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றது. முழுமையாகவே இல்லாது போகும் வாய்ப்பு உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் கேள்வி குறியாகியுள்ளது.


ஏற்றுமதிகள் மீதான வரி அதிகரிப்பு குறித்து?


'ஏற்றுமதி மீதான வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எங்களுக்கு அந்நிய செலாவணி தற்போது முக்கியமாக தேவைப்படுகின்றது. டாலர் நாட்டிற்குள் வர வேண்டும்.


இலங்கையிலுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு தற்போது சுமார் 70 வீதமாக காணப்படுகின்றது. இலங்கையிலிருந்து வெளியில் செல்கின்ற பொருட்களின் விலை அதிகரிப்பு 70 சதவீதம் என்றால், ஏற்றுமதி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு என கருத வேண்டும். அதற்கு மேலதிகமாக மற்றுமொரு வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமாயின், இலங்கையின் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி தன்மை வாய்ந்ததாக இருக்காது.


எதிர்பார்க்கப்படுகின்ற ஏற்றுமதி வருமானத்தை திரட்டுவது கடினமாக இருக்கும். ஏற்றுமதி சந்தையை இழக்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். எல்லா பக்கத்திலும் நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையிலேயே, இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது." என கூறுகின்றார்.


வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், இலங்கையின் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும்.


இதனால், வேலையின்மை பிரச்னை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகிறது.


2026ம் ஆண்டு வரை இலங்கை பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என கணிப்பீடு ஒன்று காணப்படுகின்றது.


இவ்வாறான பின்னணியில், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டும்.


2023ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டமானது, கடந்த காலங்களில் இலங்கையர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் சாத்தியம் உள்ளதா?


''இல்லை... இல்லை... நிச்சயமாக இல்லை. எந்தவொரு பிரச்னைக்கும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தீர்வாக அமையாது. இதனை வெளிப்படையாகவே சொல்ல முடியும். இப்போது காணப்படுகின்ற பொருளாதாரத்தை இதே மட்டத்தில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கின்றார்களே தவிர, மீண்டெழுவதற்கான வரவு செலவுத்திட்டமாக பார்க்க முடியாது.


கடன் வழங்கிய நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் கடன் வழங்கவுள்ள சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிற்கு அடிபணிந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையுமா?


இல்லை. அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிகளுக்கு அமைய, சில வேளைகளில், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு அமைய, வரி திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த காலத்தை நாங்கள் பார்க்க வேண்டும். சில அரசாங்கங்கள் வந்து, சர்வதேச நாணய நிதியத்தை காரணம் காட்டி, தங்களின் சொந்த தேவைக்காக வரிகளை அதிகரித்த சந்தர்ப்பங்கள் உண்டு.


1970ம் ஆண்டு காலப் பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் அவர் தான் நினைத்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை ஒரு சாட்டாக பயன்படுத்தினார். கட்டாயமாக நாங்கள் இந்த வேலையை செய்ய வேண்டும், சர்வதேச நாணய நிதியம் பணம் தருவதாக சொல்லியிருக்கின்றது. அதை செய்யாவிட்டால், சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது. ஆகவே, அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சொன்னார். இவரும் அதையே தான் சொல்லுகின்றார்.


இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்திருக்கின்றது. அதிலிருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கத்திற்கு பணம் தேவைப்படுகின்றது. ஆகவே வரியை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க சொல்கின்றார். சர்வதேச நாணய நிதியத்தை பகடை காயாக பயன்படுத்தி, தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் இருக்கலாம். கடந்த கால அனுபவங்கள் அப்படி இருந்தன. அடிபணிகின்றது என்பது வேறு. இலங்கைக்கு டாலரும் கிடையாது. ரூபாவும் கிடையாது. அதனால், கடன் வழங்குநர்கள் கூறுகின்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலையில் இருக்கின்றது. இது அடிபணிந்து போகின்றது என்று சொல்வதற்கு இல்லை. வழியில்லாத ஒரு நிலைமை இது.


1993ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியின் கீழ் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத்திட்டமாக இந்த வரவு செலவுத்திட்டம் அமைகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?


ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத்திட்டமாக இதனை பார்க்கக்கூடாது. தற்போது ஆட்சியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதற்கு பின்னணியில் உள்ளது. ஆனால் ஒரு சில அம்சங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் விடயங்கள் அதில் இருக்கின்றன. வரி தொடர்பிலான விடயங்கள், தனியார் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உள்ளீடுகள் போன்றவை ஐக்கிய தேசியக் கட்சியின் விடயங்களாகப் பார்க்கலாம். மற்றும்படி, துறைசார் அலகுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் பார்க்கும் போது, வழமையாக இருந்து வருகின்ற அதே நிலைமை தான் காணப்படுகின்றது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் விடயங்கள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்ளதாக காணப்படுகின்றது என இதுவரை வெளியான தகவல்களின் படி உறுதிப்படுத்தப்படவில்லை.


தற்போதைய ஜனாதிபதியின் மாமாவான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் வரவு செலவுத் திட்டத்தை ஒத்ததாக, அவரது மருமகனின் வரவு செலவுத் திட்டம் அமையுமா? ஏனெனில், ரணில் விக்ரமசிங்க, தனது மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமே அரசியலை கற்றுக்கொண்டார். ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரியாவாகியுள்ள ரணில் விக்ரசிங்க, தனது மாமனாரை பின்பற்றி வரவு செலவுத் திட்டத்தை தயாரித்திருப்பாரா?


இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அதை இந்த வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுவது கடினம். இந்த வரவு செலவுத்திட்டத்தை அப்படி ஒப்பிட முடியாது. ஏனென்றால், அப்போது இருந்த சூழ்நிலை வேறு. அப்போது இருந்த நிலைமைகள் வேறு. அப்போது அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு வேறு. ஒரு சில முக்கிய பங்களிப்புக்கள் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது அதை அப்படி பார்ப்பது கஷ்டம்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை உள்ளுர் நிபந்தனைகளை விடவும், வெளிநாட்டு நிபந்தனைகளையே நம்புகின்றார். சில வேளைகளில் அந்த ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கலாம்.  ஆனால், பொருளாதார வளர்ச்சிக்காக உடனடி தீர்வுகளை வழங்குவதாக தெரியவில்லை.


பணவீக்கம் அதிகரிக்கவில்லை. பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன என்பதை காட்ட வேண்டிய கட்டாய தேவையில் தற்போதைய அரசாங்கம் உள்ளது. பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் குறைவடைந்துள்ளதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நாணய மாற்று விதத்தை பிடித்து வைத்திருக்கின்றார்கள். சந்தையிலுள்ள நாணய மாற்ற விகிதமாக தோன்றவில்லை. இதனூடாக அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புகின்றது என்பதை காட்டுகின்ற நடவடிக்கையாக இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி எதிர்வரும் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என்றால், அதற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு சுமார் 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன. இந்த நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது யோசிக்கப்படுகின்றது. வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கான நிதியை திரட்டிக் கொள்வது மிக மிக கடினமானது .


இது வளர்ச்சிக்கான வரவு செலவுத்திட்டம் கிடையாது. இடுப்பு பட்டியை மேலும் இருக்கமாக கட்டும் ஒரு வரவு செலவுத் திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தை பார்க்க முடியும். ஆனால், அது எந்தளவிற்கு போகும் என்பதை கூற முடியாது

No comments

Powered by Blogger.