Header Ads



மிகப்பெரிய வலையில் சிக்க நேரிட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்


 இன்று ஒரு இலட்சம் ரூபா வருமானம் ஈட்டும் நபர் மிகப்பெரிய வரி வலையில் சிக்க வேண்டி நேரிட்டுள்ளது, ஒரு நாட்டிற்கு வரி வருவாய் தேவை, ஆனால்,பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு வரி விதிப்பதன் மூலம்,அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகுவதே நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில், பெரும் முதலாளிகளை வரி வலையிலிருந்து விடுவிப்பதும் உள்நாட்டில் நடப்பதைக் காணலாம்.இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை.ஒரு நாட்டிற்கு இலகுவான மற்றும் வெளிப்படையான வரிக் கொள்கையொன்றே தேவை.இதற்கான திட்டமிட்ட மற்றும் முறையான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்."


ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தாண்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று  (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.


ஒக்டோபர் 15 ஆம் திகதி "வெள்ளைப் பிறம்பு தினம்" என்பதை நினைவு கூர்ந்த சஜித் பிரேமதாஸ,அன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பார்வையற்றோருக்காக "நயனாலோககம" ஆரம்பித்ததாகவும்,தான் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது "சியநெதுகம" பார்வையற்றவர்களுக்கு உரித்தாக்கி மாற்றியமைத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.


அவ்வாறு விசேட தேவையுடையோரின் தேவைகளைப் பாதுகாப்பதும்,அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறானவர்களுக்கான கொடுப்பனவை கடந்த மாதம் முதல் வழங்க தற்போதைய அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


இந்த வரிகள் மூலம் அனைத்து சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகள் அழிந்து போகலாம் எனத் தெரிவித்த அவர்,இது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.