Header Ads



அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு மக்களும் காரணம், மாற்றீடாக புதிய மக்கள் உருவாக வேண்டும்


அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மாணவர் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நான் அறிந்த காலத்திலிருந்து, நாட்டிலிருக்கும் அரசியல் முறை தவறு. அரசியல்வாதிகள் தவறானவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் தவறிழைக்கிறார்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள்.


ஆனால், தேர்தலினூடாக மக்களே அந்த அரசியல்வாதிகளை தெரிவுசெய்கிறார்கள். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடமோ அல்லது நிர்வாகமுறையிலோ ஜனநாயக முறை இல்லை அல்லது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவில்லை என்றால் அதற்கு மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.


வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நுழைதல், தாக்குதல் மேற்கொள்ளுதல், வாக்கு மோசடிகள் இடம்பெற்ற யுகமொன்றும் எமது நாட்டில் இருந்தது. அவ்வாறான காலப்பகுதியிருந்தே நாங்கள் வந்தோம்.


வாக்களிக்கும் உரிமையின் பெறுமதி மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயரிடுவதன் பெறுமதி போன்றவற்றை மக்கள் அறிந்திருக்காததால், இதுதொடர்பில் மக்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் நிலப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைப்பாடும் இருந்தது.


இருந்தபோதும், நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் புதிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்னரே புரிந்துகொண்டோம். அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் அதற்கு மாற்றீடாக புதிய மக்கள் உருவாக வேண்டும்.


இது எனது கருத்து அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்னர் பேர்டல் பிரிஸ் என்ற அறிஞரே இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.


எனவே, நாம் புதிய நிலைப்பாடுகளை கொண்ட புதிய மக்களை உருவாக்க வேண்டும். அவ்வாறான புதிய மக்கள் பாடசாலைகளிலும், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலுமே இருக்கிறார்கள். எனவே, இந்த தரப்பினரிடம் புதிய சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.