Header Ads



திலினி குறித்து இன்று நீதிமன்றில் கூறப்பட்ட முக்கிய தகவல்கள் - வெட்கத்தில் பின்வாங்கும் அரசியல்வாதிகளும், பிரபலங்களும்


திலினி பிரியமாலிக்கு சொந்தமான ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும், பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யவதற்கு தயங்குகின்றனர் என்று, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சீ.ஐ.டி) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், இன்று (19) அறிவித்தனர்.


மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில் வருமானம் ஈட்டாமல், சந்தேகநபர் எவ்வாறு 41 இலட்சம் ரூபாயை மாதாந்தம் செலவிட்டார் என்பது குறித்த தகவல் இதுவரையில் வெளிவரவில்லை என்று சீ.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.


மேலும், திலினி பிரியமாலிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று முறைப்பாடுகள் குறித்த மேலதிக அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர்.


பிரதான சந்தேகநபரான திலினி பிரியமாலிக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தற்போது நிலுவையில் இருப்பதாகவும் மன்றுக்கு சீ.ஐ.டியினர் அறிவித்தனர்.


மேலும், சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்தபோது பல அலைபேசிகளைப் பயன்படுத்தியதாகவும், அவரை பிணையில் விடுவிக்க 3 கோடி ரூபாய் கோரி, நபர் ஒருவரை தொடர்பு கொண்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தாகவும் குறிப்பிட்டனர்.


தமது சேவை பெறுநருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக் கூடியவை என்பதால், அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிய திலினி பிரியமாலி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ரகித ராஜபக்ஷ மற்றும் டசுன் நாகாவத்த ஆகியோர், தமது சேவை பெறுநருக்கு எதிராக சி.ஐ.டியினர் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குற்றம் சுமத்தினார்.


மேலும், தமது சேவை பெறுனர் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், சட்டப்பூர்வமான வியாபாரத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்து பல ஆவணங்களை சட்டத்தரணிகள், மன்றில் சமர்ப்பித்தனர்.


இதேவேளை, திலினி பிரியமாலிக்கு வர்த்தகர்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணை கைது செய்வதற்கு சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் கோரிக்கை விடுத்தார்.


விடயங்களைக் கருத்திற் கொண்ட கொழும்பு கோட்டை பதில் நீதவான் ஷாலினி பெரேரா, திலினி பிரியமாலி மற்றும் அவரது வர்த்தக பங்காளியான இசுரு பண்டார ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.  

No comments

Powered by Blogger.