Header Ads



திலினியிடம் சிக்குப்பட்டாரா ஆனந்த தேரர்..?


நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்பவரிடம் தனது ஜீப் வண்டியை வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று -14- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


வசந்த சமரசிங்க சமூக ஊடங்களில்  கூறுவது போல் நான் எனது ஜீப் வண்டியை திலினி பிரியமாலியிடம் வழங்கவில்லை. வசந்த சமரசிங்க, இவ்வாறு பொய்களை கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த தலைவர்களை அவமதிக்க வேண்டாம். அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து குறித்து நான் வருத்தப்படுகிறேன்.


கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான பிரியங்கா ஜயசேகர என்பவரிடமே வழங்கினேன். ஜப்பானில் இருந்து எனக்கு வாகனம் ஒன்று அன்பளிப்பாக கிடைக்கவிருந்த காரணத்தினால், இதுவரை பயன்படுத்தி வந்த வீ.8 ஜீப் வண்டியை விற்பனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.


இதனடிப்படையில் வாகனத்தை விற்று பணம் தருவதாக பிரியங்கா ஜயசேகர கூறினார். எனினும் அந்த பணம் எனக்கு கிடைக்கவில்லை.


சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. பிரியங்கா ஜயசேகரவும் அந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி இருப்பவர்.


எந்த வகையிலும் திலினி பிரியமாலி என்ற பெண்ணை இதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.


எது எப்படி இருந்த போதிலும் பல பௌத்த பிக்குமார், திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் முதலீடு சம்பந்தமான விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி இருந்தன.

No comments

Powered by Blogger.