Header Ads



கட்டாய 2 நிபந்தனைகளை விதித்துள்ள பொதுஜன பெரமுன - இல்லையேல் ஆதரவளிக்கமாட்டோம் என பகிரங்கமாக அறிவிப்பு


இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


நேற்று (15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் தலைவிதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் தங்கியுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியானது இரண்டு கட்டாய நிபந்தனைகளை விதித்துள்ளது.


இதற்கமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறும் விதி மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதைத் தடைசெய்யும் விதி ஆகியவற்றை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புகின்றது.


கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது கோரிக்கைகளை இறுதியாக தெரிவிக்கவுள்ளது.


பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்ற நிலையில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சவை இலக்கு வைத்து இரட்டை குடியுரிமை விதி, 20ஆவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டது.


அவர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவராவார். 19ஆவது திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளில் எமக்கு பிரச்சினைகள் உள்ளன.


சட்டத்தின்படி அவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்களின் செயல்களை சவாலாக கருத முடியாது.


இது ஒரு அரசாங்கத்திற்கு மிகவும் பாதகமானது எனவே அவை மாற்றப்பட வேண்டும்.


இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் ரணில் விக்ரமசிங்க எங்களுடைய ஜனாதிபதி தான், ஆனால் அவர் எங்களின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளாது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இணைந்து அவசரப்பட்டு 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் தோல்வியின் அவமானத்தை அவர் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அவருக்கு வெளிப்படையாக கூறவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.