Header Ads



பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய, குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள்



அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.


இன்று (29) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.


பாராளுமன்றம் எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. 03ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை இதுவரை பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர 4ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை தினமும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.



அத்துடன், எதிர்வரும் 04ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அரசாங்கத்தின் தினப்பணிகள் குறித்து விவாதிப்பதற்கான நேரத்தை அரை மணித்தியாலங்களால் அதிகரிப்பதற்கும், இதன்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு நேரத்தைப் பெற்றுக்கொடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


இதற்கமைய பி.ப 4.30 முடிவடையவிருக்கும் அரசாங்கத்தின் தினப்பணிகளை விவாதிப்பதற்கான காலம் பி.ப 5.00 மணிவரை நீடிக்கப்படுகிறது. பி.ப 5.30 மணிவரை எஞ்சிய 30 நிமிடங்களும், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்தை நடத்துவதற்கும், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஒன்றுவிட்ட நாட்களை ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


ஒக்டோபர் 04ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க  செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2291/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை, 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2290/19ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை, 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்புமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2294/29 மற்றும் 2294/30 வர்த்மானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரு ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.




இதனை விடவும், இலங்கையில் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண் (Ease of Doing Business Index) பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணை என்பனவும் அன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. (இந்தப் பிரேரணை தொடர்பான மேலதிக தகவல்களை பாராளுமன்ற இணையத்தளத்தின் 2022.09.09ஆம் திகதி ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் இலக்கம் 2022/33 இன் கீழ் பார்வையிட முடியும்)



மேலும், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை நடைபெறும்.


ஒக்டோபர் 05ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை 1977ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் 2282/19ஆம் இலக்க வர்த்மானி மூலம் வெளியிடப்பட்ட கட்டளையை விவாதத்துக்கு எடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதன் பின்னர் பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது தினத்துக்காக நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் அரசியலமைப்புக்கான 22வது திருத்தச் சட்டுமூலம் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கமைய ஒக்டோபர் 06ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப5.00 மணி வரை நடைபெறும். பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் நடைபெறும்.


அதேநேரம், எதிர்வரும் 07ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதம் நடத்தப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.