Header Ads



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு, ஓய்வு பெறுவது தொடர்பில் 3 நிபந்தனைகள்


இலங்கை தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெற விரும்பும் அல்லது ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் தொடர்பாக 3 நிபந்தனைகை விதிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த நேற்று (07) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வருமாறு,

1. தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர்கள், தங்களது ஓய்வு தொடர்பான முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 3 மாத காலத்திற்கு முன்னதாக அறிவிக்க வேண்டும்.

2. வெளிநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான 'No Objection Certificates’ (NOCs) (ஆட்சேபனை இல்லை) எனும் கடிதமானது, ஓய்வுபெற்றுள்ள தேசிய வீரர்களுக்க, அவர்கள் ஓய்வு பெற்ற திகதியிலிருந்து ஆறு மாதம் நிறைவடைந்த பின்னரே வழங்கப்படும்.

3. லீக் தொடர்கள் இடம்பெறுவதற்கு முன்னரான பருவத்தில் இடம்பெற்றுள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் 80% போட்டிகளில் விளையாடியிருந்தால் மாத்திரமே, LPL போன்ற உள்ளூர் லீக் தொடர்களுக்கு ஓய்வுபெற்ற தேசிய வீரர்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

மேற்படி தீர்மானங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதாக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இலங்கை அணியின் ஒரு சில வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து வருகின்றனர் என்பதோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் உடற் தகுதி தொடர்பான இறுக்கமான கொள்கைகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.