Header Ads



அஹ்னாப் ஜஸீம் வழக்கு பெப்ரவரி 28 வரை ஒத்திவைப்பு


நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க இதற்கான உத்தரவை இன்று (6) பிறப்பித்தார். 

வழக்கு விசாரணைகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளல் மற்றும் சாட்சி விசாரணைகளுக்கான திகதியை குறிப்பதற்காக இவ்வாறு இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும், சாட்சி விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்தது. 

இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி ஒருவர் ஆஜரானதுடன், பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான எம். நுஹ்மான் மற்றும் ஹுஸ்னி ரஜித் ஆகியோர் ஆஜராகினர். 

அத்துடன் சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார். 

இந் நிலையிலேயே வழக்கு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்ப்ட்டிருந்த நிலையிலேயே 579 நாட்களின் பின் விடுதலை செய்யப்பட்டார். 

அத்துடன் அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளும் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

-ரஸ்மின்-


No comments

Powered by Blogger.