Header Ads



முஸ்லிம்களுக்கு கதவடைப்பு - அரச ஆதரவு Mp க்கள் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் காட்டட்டும் என சவால் விடுக்கின்றேன்


கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம் பணிப்பளார்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும் பொதுமுகாமையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதற்கு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பிக்கள் அனுமதி வழங்கியுள்ளனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (07) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “கிழக்கு மாகாணத்தில் 75 சதவீதத்துக்கும் மேல் தமிழ் பேசும் மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தப் பாடசாலைகளை முகாமை செய்யும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் மட்டக்களப்பில் இயங்குகின்றது.

“இந்தப் பணியகத்துக்கு  தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொதுமுகாமையாளரும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாலர் பாடசாலை பணியகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களும், பாலர் பாடசாலை ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

“இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போதும் அவர்கள் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

“அதேபோல, கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம் மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் இந்தப் பாலர் பணியகத்தின் பணிப்பாளர் சபையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்பட வில்லை எனவும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

“கிழக்கிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் மக்களின் உரிமை என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்தோம். அதனால் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்.

“எனவே, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம்களுக்கு கதவடைப்புச் செய்யப் பட்டதற்கும், தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொதுமுகாமையாளரும் நியமிக்கப்பட்டதற்கும் கிழக்கு மாகாண அரசு ஆதரவு எம். பிக்கள் அனுசரணை வழங்கவில்லை என்றால், தமிழில் பணி புரியக் கூடிய ஒருவரையும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்திக் காட்டட்டும் என்று சவால் விடுக்கின்றேன்” என அவ்வறிக்கையில் இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.