Header Ads



JVP ஊழல் அற்ற கட்சி, மைத்திரி ரணில் தோல்வியடைந்தவர்கள் - நாட்டின் இன்றைய நிலைக்கு அரசியல்வாதிகளை பாராளுமன்றம் அனுப்பிய மக்களே காரணம்


இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினால், சர்வதேச உதவிகள் கிடைக்கும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியும் என்று கூறப்படுவதை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, மக்களால் நிராகரிக்கப்பட்டவர். எனவே அவரை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு உலகின் எந்த நாட்டுக்கும் கூறமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று தொடர்பான வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்தபோதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜேவிபியுடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்புவதாக கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர கூறியமை தொடர்பில் கருத்துரைத்த, பொன்சேகா, ஜேவிபி ஊழல் அற்ற கட்சி என்று குறிப்பிட்டார்.

எவருக்கும் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளமுடியும்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரை பொறுத்தவரையில் தம்மை பொறுத்த வரையில் நம்பிக்கையில்லை.

அவரும் தோல்வியடைந்த தலைவர் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவேண்டுமானால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும்.

எனினும் சர்வதேச நாணய நிதியம் தரகுப்பணம் தராது என்பதன் காரணமாகவே அரசாங்கம், ஏனைய நிறுவனங்களிடமும் நாடுகளிடமும் நிதியுதவியை கோருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இன்று மூன்று வேளை உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு விவசாயத்துறை தொடர்பில் இரசாயன பசளைகளை ரத்துச்செய்தவர்கள் பொறுப்புக்கூறவேண்டும்.

பசளைகளை இலவசமாக தருவதாக கூறிய அரசாங்கம் இன்று யூரியாவை 30ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதாக பொன்சேகா தெரிவித்தார்

எரிவாயு வெடிப்புக்கள் குறித்து தெரிவித்த அவர், கொள்கலன்களில் கலவை மாற்றமே வெடிப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் நிறுவனத்தலைவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை

இந்த விடயத்தில் விசாரணைக்குழுக்களுக்கு அதிகாரம் இல்லை. பொலிஸ் தரப்பே விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

கஞ்சா செய்கை நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் என்று கருத்தை நிராகரித்த அவர், இதற்காக ஹேரோயினை உற்பத்தி செய்தால் இன்னும் இலாபம் அதிகமாகுமே என்ற கேள்வியை தொடுத்தார்.

இறுதியில் வருமானத்துக்கான விபச்சாரத்தையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இவற்றை தாம் நிராகரிப்பதாக கூறிய அவர் இலங்கை நாட்டுக்கு கலாசாரப்பண்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் இன்றைய நிலைமைக்கு காரணமான அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியமை தொடர்பில், பொதுமக்களும் பொறுப்பாளிகள் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பக்கங்களை மாற்றுவது போன்று ஒரு கட்சிக்கு பதிலாக இன்னும் ஒரு கட்சியை பதவிக்கு கொண்டு வரும் அரசியல் கலாசாரம் மாறும்போதே நாட்டில் சிறந்த நிர்வாகம் ஒன்று ஆட்சிக்கு வரமுடியும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.    

2 comments:

Powered by Blogger.