December 22, 2021

சாணக்கியன் அவர்களே, எமது இனத்தின் பேரால் கேட்கிறோம், பகிரங்க விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டாம்..!


சாணக்கியன் அவர்களே!

எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போதும் - அநியாயமாக எங்கள் அரசியல் தலைமைகள் கைதுசெய்யப்பட்ட போதும் - எங்களின் சட்ட / மார்க்க புலமையாளர்கள் தடுத்து வைக்கப்படுகின்ற போதும் - எங்கள் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட போதும் - எங்களின் உயிரினும் மேலான றஸூல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வையும் இழிவுபடுத்திய போதும் - உங்கள் குரல் எங்களுக்காக ஓங்கி ஒலித்ததை வரலாற்றில் எமது சமூகம் என்றுமே மறந்திடாது.

நாங்கள் வாக்களித்து தெரிவுசெய்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - எங்கள் ஜனாஸாக்களை எரித்துக்கொண்டிருந்தவர்களை 20க்கு கையுயர்த்தி பலப்படுத்தியதோடு - மேற்சொன்ன அநியாயங்களின் போது வாய்மூடி மௌனம் காத்து அடிமைகளாக சோரம்போய்க் கிடக்கின்ற நிலையில் - உங்கள் குரல் எமக்காக ஒலித்ததை எமது மக்கள் நன்றி மனம்கொள்கின்றனர்.

புத்தளம் பள்ளிவாயில் படுகொலையின் போது, பேசுவதற்கு யாருமேயற்ற சூன்ய நிலையில் - உங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் ஐயா எமக்காக குரல்கொடுத்த நாட்களை விட - பேசுவதற்கென்று நாங்கள் அனுப்பியவர்கள் அடிமைப்பட்டு போன நிலையில் - நீங்கள் பேசிய வார்த்தைகள் மிகப்பெறுமானமுடையவையாக எமது சமூகம் போற்றுகிறது.

எவரிடமும் அடிமைப்படாமலும் - எந்த சபையிலும் சோரம்போகாமலும் நிமிர்ந்து நிற்கும் உங்களை - எமது சமூகம் என்றும் பிரமிப்போடு பார்க்கிறது.

உங்களுக்கான நிறைந்த ஆயுளையும் பாதுகாப்பையும் வேண்டி ஆசிர்வாதம் செய்கிறது.

கௌரவ சாணக்கியன் அவர்களே!

எமது மக்களிடம் இத்தனை பெறுமதியான நீங்கள் - இன்னுமொரு உதவியையும் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுவதை நீங்களறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்தவகையில்,எங்கள் ஜனாஸாக்களை எரித்துக்கொண்டிருந்தவர்களை 20க்கு கையுயர்த்தி பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் - ஜனாஸாக்களை எரிக்கப்படவில்லை; வெறும் பெட்டிகளே எரிக்கப்படுகின்றன என்று கூறி -  அரசாங்கத்தை காப்பாற்றிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோடு - நீங்கள் பகிரங்க விவாதத்தில் ஈடுபட இருப்பதை எமது மக்கள் விரும்பவில்லை.

நாங்கள் கண்ணியப்படுத்தும் ஜனாஸாக்களுக்குரிய இறுதிக் கடைமைகளை செய்யவிடாமல் - எந்த அடிப்படை விஞ்ஞான / அறிவார்ந்த நியாயங்களுமல்லாமல் - முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக இனவாத அடிப்படையில் அநியாயமாக எரிக்கப்பட்ட போது - எரித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்ற பொய் கூறிய ஒருவர் - உண்மையான உளச்சுத்தியோடு எங்கள்  காணி விவகாரங்கள் பற்றி பேசுவார் என்ற நம்பிக்கை எம் மக்களிடமில்லை.

மாறாக, துளிர்விட்டிருக்கும் தமிழ் முஸ்லிம் உறவை குலைத்து - #அரசிற்கு #வேண்டிய #நிகழ்ச்சி #நிரலை #அரங்கேற்றவே #முனைவார் என - எமது மக்கள் சந்தேகமற்று உணர்கின்றனர். ஏன்எனில், கிழக்கில் மொத்தமாக சுமார் 20,000 ஏக்கர் காணிகளை அபகரித்துள்ள அரசாங்கத்திடமிருந்து - இக்காணிகளை விடுவிப்பதற்கான எந்த முயற்சிகளிலும் இதுவரை ஈடுபடாமல் - உங்களை பகிரங்க விவாதத்திற்கு  அழைத்திருப்பதன் #உள்நோக்கத்தை எமது மக்கள் நன்றாக விளங்கிக்கொண்டுள்ளனர்.

தமிழ் முஸ்லிம்களை எதிரிகளாக்கி - மோதவிடுவதன் மூலம் - கிழக்கில் தமது விஷ்தரிப்பை எந்த தொந்தரவுமில்லாமல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள - கடும்போக்கு பேரினவாத சக்திகளுக்கு துணைபோகும் எமது #எம்பிக்களின் #கபடத்தனத்தினுள் - நீங்களும் வீழ்ந்துவிடக்கூடாது என எமது மக்கள் உளப்பூர்வமாக விரும்புகின்றனர். 

திறந்த மனதோடு - நிதானமாக - ஒரு முறையல்ல எத்தனை முறை வேண்டுமாயினும் சந்தித்து பேசி - #இரு #சமூகங்களும் #திருப்திப்படும் #வகையில் #மூடிய #அறையில் பேசித் திர்த்துக்கொள்ள வேண்டிய - தமிழர்களும் முஸ்லிம்களும் சம்மந்தப்பட்ட காணி விவகாரங்களை - பகிரங்கத்தில் விவாதிப்பதினூடாக #தீர்க்க #முடியாது என்பதை அறிவார்ந்த எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவர். 

விவாதம் என்பது வெறுப்புணர்வை மட்டுமே தூண்டும் ஒரு ஆபத்தான ஆயுதம். அது தீர்வை நோக்கி நகர பங்களிப்பு செய்யாது. அதிலும் ஊடகத்தில் விவாதிப்பது என்பது ஒரு #அழிவிற்குரிய #ஆரம்பமாகவே #அமையும். அதனால், இந்த விவாதத்தை நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்களை விவாதத்திற்குப் அழைத்துள்ள எங்கள் எம்.பியின் நோக்கம் எங்களையும் உங்களையும் மோதவிடுவதுதான். அதனால், அவரிடம் இந்த விவாதத்தை நிறுத்த கோரினாலும் அதனை சாதகமாக பரிசீலிக்கும் மனநிலை அவரிடமில்லை.

ஆகவே, தமிழ் முஸ்லிம் உறவை கட்டி வளர்க்க விருப்பமுள்ள உங்களிடம் #எமது #இனத்தின் #பேரால் கேட்கின்றோம்...இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டாம்! 

ஏலவே, எங்கள் பிரதிநிதிகளால் துரோகத்தனமாக காட்டிக்கொடுக்கப்பட்டு #பலவீனப்பட்டிருக்கும் #எமது #சமூகத்தின் #பேரில் கேட்கிறோம்....இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டாம்!

அரசாங்கத்தின் அஜென்டா வெற்றி பெற இடமளித்துவிட வேண்டாம்!

இப்படிக்கு

ஏ.எல்.தவம்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

(இந்த பகிரங்க கடிதத்தை வாசிப்பவர்கள் சாணக்கியன் அவர்களுக்கு டெக் பண்ணுவதோடு.... சேர் பண்ணுங்கள்)

6 கருத்துரைகள்:

This is very important information
Dear sanakkiyan sir don't go with debate with Muslims members of parliamentary

தோழர் எ.எல்.தவம் அவர்களுக்கு தமிழ்மக்கள்சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் குரலை நாமும் எதிரொலிப்போம். இதுபோன்ற சிங்கள தமிழ் முஸ்லிம் அடிபடை வாதிகளுக்கு எதிரான குரல்கள் மட்டுமே தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்தி வாழவைக்கும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Most of the muslim modarates will agree to this statement in the mean time Hon.shanakkiyan should rectify his statement regarding Muslim's land issues

Post a Comment