Header Ads



துப்பாக்கிசூட்டு நடத்தியபின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் - தாய் வழங்கிய வாக்குமூலம்


அம்பாறையில் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிசூட்டை நடத்திய சக காவல்துறை உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

இந்த தகவலை குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் தாயார் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இதன்போது தனது பெற்றோருக்கு அவர் கூறியதாகவும் அவரது தாய் குறிப்பிட்டார்.

காலில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு காவல் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டதாக தாயார் கூறினார்.

இவ்வாறான நிலையில், தனது மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது மகன் துப்பாக்கி பிரயோகம் நடத்திய பின்னர், தனது சொந்த கெப் ரக வாகனத்தில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இடைநடுவில் கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தப்பித்து, வீட்டிற்கு வருகை தந்த தனது மகன், பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபரின் தாய் தெரிவித்தார்.

தான் மொனராகலை காவல் நிலையத்தில் சரணடைய போவதாக சந்தேகநபர் பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும், மொனராகலை காவல் நிலையத்திற்கு சென்றால், இடைநடுவில் காவல்துறையினரால் இடையூறு ஏற்படுத்த முடியும் எனவும், எத்திமலை காவல்நிலையத்தில் சரணடையுமாறும் அவரது தந்தை கூறியுள்ளார்.

இதையடுத்தே, தனது மகன் எத்திமலை காவல் நிலையத்திற்கு சென்று, அனைத்து பொருட்களையும் ஒப்படைத்து சரணடைந்துள்ளதாக தாய் தெரிவித்தார். இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை, எத்திமலை காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்து, அம்பாறை காவல் நிலைய தலைமையக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ibc

No comments

Powered by Blogger.